தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்
தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும் , தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வேக , வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள். அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி , பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும். அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள். இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும். தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.