போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்


போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்! – மியான்மர் புகைப்படங்களின் பின்னால் உள்ள புனைவுகள்!


mi 3
miநம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
(அல் குர்ஆன் 49 : 6)
மியான்மரில் வாழும் ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் புத்த பிட்சுகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
மியான்மர் முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம் ஊடகங்கள் தொடர்ச்சியாக தமது கரிசனையை வெளிப்படுத்தி வருகின்ற அதேநேரம் பலரும் இணையதளங்கள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மியான்மரில் முஸ்லிம்கள் புத்த பிட்சுகளால் கூட்டாக படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படும் பல்வேறு புகைப்படங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இப்புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்து தமது ஆழ்ந்த கண்டனங்களையும் கவலைகளையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் நடந்து கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாயினும், இது தொடர்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக பரிமாறப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சில தினங்களாக மின்னஞ்சல் வாயிலாகவும் பேஸ்புக் வாயிலாகவும் நான் கண்ணுற்ற புகைப்படங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்பட்ட போதுதான் அவற்றின் பின்னணி தெரியவந்தது.
பல புத்த பிட்சுகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியான்மர் முஸ்லிம்களுடன் தொடர்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் 2,698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12,135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1,434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர்.(Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் புத்த பிட்சுகளாவர். அப்புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று) எடுக்கப்பட்டவையாகும்.
இப்புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images ல் பணிபுரியும் Guang Niu என்பவராவார். இப்புகைப்படம்WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். துரதிஷ்டவசமாக இப்புகைப்படங்கள் மியான்மரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனம் நமக்கு எச்சரிப்பதைப் போன்று இவ்வாறான விஷயங்களை உறுதிப்படுத்தாமல் எடுத்த எடுப்பில் மற்றவர்களுடன் பரிமாறி பரபரப்பை உண்டுபண்ணுவது சமூகத்தில் குழப்பங்களைத் தூண்டவே வழிவகுக்கும்.
இவ்வாறு பரிமாறப்படும் மற்றுமொரு புகைப்படம் நதிக்கரை ஒன்றில் நூற்றுக் கணக்கான சடலங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது போன்றும் அதனைச் சூழ இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்பது போன்றதுமான காட்சியளிப்பதாகும்.
உண்மையில் இப்புகைப்படம் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும்.
தாய்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டின் தென் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 80 முஸ்லிம்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு லாரிகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சமயம் மூச்சுத்திணறி உயிரிழந்தோராவர்.
ஆனால் இப் புகைப்படம் தற்போது மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் கொடுமைகளின்போது எடுக்கப்பட்டது என்றும் இதனை உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூகத்தை எழுச்சியுறச் செய்யுமாறும் சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கோரி வருகின்றனர்.
அதேபோன்று மற்றுமொரு புகைப்படம் தனது உடலில் தீ மூட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் ஓடிச் செல்வதும் அவரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பது போன்றதுமாகும். இதுவும் ஒரு திரிபுபடுத்தப்பட்ட புகைப்படமேயாகும்.
இப்புகைப்படமும் செய்தியும் வெளியிடப்பட்ட இணையப் பதிப்பொன்றின் செய்தி பின்வருமாறு:
மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக கொடிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 62 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மியான்மரில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பில் நம்பத்தகுந்த மூலங்களைக் கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
www.hrw.org எனும் முகவரியில் இவ் அறிக்கையை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
நாம் பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையில் வாழ்கிறோம். சமீப கால நிகழ்வுகளால் ஏற்கனவே பௌத்தர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் அதிருப்தியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற நிலையில் நாமும் இவ்வாறான சம்பந்தமற்ற புகைப்படங்களை பரிமாறி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமலிருப்பதே சமூகத்திற்குச் செய்யும் பெரும் உபகாரமாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
வாசகர் கடிதம்:
கடந்த உணர்வு இதழ் 16 : 49 இல் பர்மா முஸ்லிம்கள் படுகொலை சம்பந்தமான செய்தியில் இடம் பெற்றுள்ள போட்டோ பழைய போட்டோ ஆகும். இம்மாதிரியான ஃபோட்டோக்களுக்கும், தற்போது பர்மாவில் நடந்து வரும் அக்கிரமத்துக்கும் சம்பந்தம் இல்லை. அந்த போட்டோ, 26-10-2004 இல் தாய்லாந்து முஸ்லிம்கள், அரசு பாதுகாப்பு அதிகாரிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது மூச்சுத் திணறி இறந்தபோது எடுத்த ஃபோட்டோ.
 மேலும், இம்மாதிரியான பல ஃபோட்டோக்கள் இணையத்தில் உலவி வருகின்றன. பர்மா முஸ்லிம்கள் படுகொலை கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால், அதற்கான சரியான போட்டோக்களுடன் வெளியிடுவதே சரியானதாக இருக்கும். முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காக, இம்மாதிரியான தவறான படங்களைப் பரப்புகின்றனர். குஜராத்தை பார்த்தீர்களா? கோவையைப் பார்த்தீர்களா? என நம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை தவறான வகையில் தூண்டும் குரூப் இதனை பல பெயர்களில் செய்து வருகிறது.
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3954587.stm
http://www.indybay.org/newsitems/2004/10/26/17015731.php?show_comments=1
 மேலும், ஈமெயிலில், முகநூலில் ஃபார்வார்டு செய்யப்படக்கூடிய பல செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை. அதனை மொழிபெயர்த்து அப்படியே வெளியிடுவதற்கு உணர்வு பத்திரிகைக்கு அனுப்பி விடுகின்றனர். ஆதாரபூர்வமாக, நாளேடுகள்/இதழ்களில் வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அவற்றை வெளியிடுவதே சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்.
 ஆகையால், போதிய கவனம் எடுத்து செய்திகளை வெளியிட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
அன்புடன், ஃபெய்ஸல், ரியாத்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை