பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?


பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?


இவ்வசனத்தில் (54:19) நஹ்ஸ் (பீடை) நாளில் "ஆது' சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இவர்கள் நினைக்கின்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.
பொதுவாக, நல்ல நாள், கெட்ட நாள் என்பதைப் பிற மதத்தவர் பயன்படுத்துவதற்கும், இஸ்லாம் பயன்படுத்து வதற்கும் முக்கிய வேறுபாடு உள்ளது.
பிற மதத்தவர்கள் ஒரு நாளை நல்ல நாள் என்று சொன்னால் அந்த நாளில் நல்ல காரியத்தைச் செய்தால் அது சிறந்து விளங்கும். நல்லது செய்கின்ற தன்மை அந்த நாளுக்கே உண்டு என்ற கருத்தில் கூறுகின்றனர். கெட்ட நாள் என்றால் அந்த நாளில் செய்கின்ற எந்தக் காரியமும் உருப்படாது என்ற கருத்தில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இஸ்லாம், இந்தப் பொருளில் இச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ ஒரு கேடு ஏற்பட்ட பிறகு அந்தக் கேடு ஏற்பட்ட மனிதனுக்கு அது கெட்ட நாள்; அனைவருக்கும் கெட்ட நாள் இல்லை என்ற கருத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது.
பிற மதத்தவர்களைப் போன்று, ஒரு நாளை நல்ல நாள், கெட்ட நாள் என்று முன் கூட்டியே இஸ்லாம் தீர்மானிப்பதில்லை.

உலகில் ஏற்படும் விளைவுகள், ஆட்களைப் பொறுத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொறுத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பீடை நாள் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டுவோருக்கு இதே செய்தியைக் கூறும் மற்றொரு வசனம் மறுப்பாக அமைந்துள்ளது.
மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், இன்னொரு வசனத்தில் (41:16) ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. 
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
மேலும் அதே நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
onlinepj

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

அவ்லியாக்களின் சிறப்பு

பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்: