மணமகன் கொடுக்கும் மணக் கொடை[மஹர்]

மஹர் (மணக் கொடை)

திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டு மானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.


இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி யுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர் களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும்.

பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

# ஒரு ஆணுக்கும், பெண்ணுக் கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

# திருமணத்திற்குப் பின் மனை விக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமை களையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப் பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட் சணை கேட்போரும், அதை ஆதரிப் போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது. சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.

# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர் களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.
நி மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின் றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.

# பருவத்தில் எழுகின்ற உணர்வு களுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 4:4, 4:24,25, 4:127, 5:5, 33:50, 60:10)

எட்டு ஆண்டுக் கூலியை மஹராகக் கொடுத்த மூஸா நபி!!!!!!!!!!!!!!!!

இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது.

ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மஹர் கொடுக்காமல் பெண்களை ஏமாற்றுவதும், அற்பமான பொருட்களைக் கொடுத்து அவர்களை வஞ்சிப்பதும் இஸ்லாம் காட்டும் வழிமுறை அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!!!!!!



பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.


“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:௧௨௯


“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-௯௮

2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.


புறக்கணிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) 
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

பெண் சிசுக்கொலை தடுக்க என்ன வழி!!!!!!!!!!!!!!!!!!!!!


மனித சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் அதை மீறுவதற்கும் அதிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு தப்பிப்பதற்கும் தான் மனிதன் முயலுகிறான் என்பது யதார்த்த உண்மை. எனவே இறைவனைப் பற்றிய பயமும், மறுமை அச்சமும் இருந்தால் தான் பெண் சிசுக் கொலை என்ற கொடூரம் மட்டுமில்லாமல் அனைத்துக் கொடுமைகளையும் ஒழிக்க இயலும்.


இஸ்லாமிய மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்த காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்படும் இளம் பிஞ்சுகளைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையை இஸ்லாமிய மார்க்கம் மக்களிடம் கூறியது.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
(அல்குஆன் 81:8, 9)

வரதட்சணை என்ற பேய், சமுதாயத்தில் மிகவும் அதிகமாகப் புரையோடி இருப்பதாலும் பெண் சிசுக் கொலைகள் நிகழ்வதாகச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பெண் சிசுக் கொலைக்கு வழிகோலும் வரதட்சணை என்ற கொடுமையைச் செய்யும் ஆண்களும் மேலே கூறப்பட்ட 81:8, 9 வசனங்களின் படி வல்ல இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்.

ஒரு புறம் பெண்ணுரிமை என்ற மாய ஜால கோஷங்களைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் அல்லது பார்த்தும் மவுனம் சாதித்துக் கொண்டிருப்போரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இஸ்லாம் சொல்கின்ற நியதிகளின் படி வாழ்ந்தால் தான் நிம்மதி என்பதை இஸ்லாமிய பெண்கள் உணர வேண்டும்.


இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே!



Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை