இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு


இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.

அல்குர்-ஆன் 3 : 85

சிறுவனுக்கு தண்டனை வழங்கலாமா? – இதுதான் தற்போது நமது நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ள பரபரப்பான செய்தி. ஆம்! டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட 6 காமக்கொடூரர்கள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை 5 பேர் மீது மட்டும்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 6வது நபராக உள்ள குற்றவாளிக்கு 17வயதுதான் ஆகியுள்ளது என்பதால் அவன் சிறுவன் என்ற அந்தஸ்தில் இருப்பதாகவும், சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும், அவனை சிறைக்கு அனுப்புவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்றும், வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அந்த பச்சிளம் குழந்தையை(?) சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு படிக்க அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் இருப்பதால், அவனை பாலர் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் பேசி வருகின்றனர். அந்த பச்சிளம் குழந்தைக்கு(?) தண்டனை வழங்கலாமா? கூடாதா? என்ற கேள்விதான் தற்போது நமது நாட்டில் முக்கியமான விவாதமாக நடந்து வருகின்றது.

கற்பழித்து காமக் கொடூரச்செயல் செய்த சிறுவன்(?) 5மாதத்தில் விடுதலையாம்:

 டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரப்பி மாணவியை மிகக் கொடூரமாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 17வயது நிரம்பிய சிறுவன்(?) என்று சொல்லப்படக்கூடியவன்தான் மாணவியை மிகவும் மோசமாக தாக்கியவன் மற்றும் இரண்டு முறை பலாத்காரம் செய்தவன் என்றும் போலீஸார் கூறுகிறார்கள். இவனால்தான் அப்பெண் படுகாயமடைந்தார், பின்னர் உயிரிழந்தார். ஆனால் இவனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் இவனை மற்ற கோர்ட்டுகளில் விசாரிப்பது போல விசாரிக்க முடியாது. மாறாக, சிறார் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த முடியும்.

மேலும் இவனை சிறையிலும் அடைக்க முடியாது. சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்க்க முடியும். மேலும், இந்த சிறுவன் பெரும் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடும் அளவுக்கு சட்டம் இவனுக்குச் சாதகமாக உள்ளது.

 குற்றம் இழைத்தபோது இந்த சிறுவனுக்கு வயது 17 என்பதால் இவனுக்கு கடும் தண்டனை கிடைக்காது. இந்த குற்றச்சாட்டு உண்மையாகுமேயானால் அதிகபட்சம் 3 வருடம்தான் அவனுக்கு தண்டனை கிடைக்கும். 3 வருட தண்டனையைக் கூட இவன் சிறையில் கழிக்க முடியாது. மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளியில்தான் சேர்ப்பார்கள். அங்கு தண்டனை கிடையாது, மாறாக போதனைதான் தருவார்கள். - இவனுக்கு 18 வயதாக இன்னும் சில மாதங்களே உள்ளன. இவனுக்கு இன்னும் 5 மாதத்தில் 18 வயது பூர்த்தியாகிவிடும். 18 வயதை எட்டி விட்டால் யாரையும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க முடியாது. விடுவித்து விட வேண்டும். - அப்படி விடுவிக்கப்பட்ட பின்னர் இவனை சிறைக்கு மாற்றலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம், சிறார் குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரை வழக்கமான சிறைக்கு மாற்ற முடியாது, மாற்றக் கூடாது. அது சட்டவிரோதமாகும்.

 பாலியல் பலாத்காரத்திலும், கடும் தாக்குதலிலும் ஈடுபட்டு மாணவியின் உயிர் போகக் காரணமான இந்த சிறுவன்(?) தற்போது பெரிய அளவிலான தண்டனை எதிலும் சிக்காமல் தப்பி விடும் வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

முட்டிய பின்பு குனியும் அவலம்:

 பாலியல் வன்கொடுமை புரிந்ததில் முதல் ஆளாக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரனுக்கு 5 மாதங்களில் விடுதலையளிக்கக்கூடிய அளவிற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதை நினைத்து தற்போது அனைத்து தரப்பு மக்களும், அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.

மேற்கண்ட அவல நிலைக்கு காரணம் 18வயது யாருக்கு பூர்த்தியாகின்றதோ அவர்கள்தான் பெரியவர்கள் என்றும், 18 வயது பூர்த்தியாகதவர்கள் அனைவரும் குழந்தைகள் என்றும் நமது நாட்டில் அற்புதமான(?) சட்டத்தை இயற்றி வைத்துள்ளனர்.

ஒரு பெண்ணை கொடூரமானமுறையில் கற்பழித்து நாசக்கேடாக்கி, கொலை செய்த ஒருவன் சிறுவனா அல்லது பெரியவனா என்று இவர்கள் ஆய்வு செய்து கொண்டுள்ளார்களாம். அவன் சிறுவன்தானா என்பதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு சோதனை செய்யப் போகின்றார்களாம்.

சோதிக்கப்பட வேண்டியது எலும்பா? மூளையா?:

 ஒரு பெண்ணை கற்பழித்து காமக்கொடூர செயலை செய்தவனை 18வயது பூர்த்தியாகாத ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று சொல்வார்களேயானால் சோதனை செய்யப்பட வேண்டியது அவனது எலும்புகள் அல்ல; இவர்களது மூளைதான். இவர்களுக்கு மூளை என்ற ஒன்று உள்ளதா என்று இவர்களை சோதித்துப் பார்க்க வேண்டியதுதான் காலத்தின் கட்டாயம் என்பதும் தற்போது நமக்கு தெரிய வருகின்றது.

இந்த அளவுக்கு காமவெறியாட்டம் ஆடிய ஒருவனை சிறுவன் என்று சொல்வது எப்படி? இது சரியா? என்று அனைவரது உள்ளமும் உறுத்தியிருப்பதால்தான் தற்போது இந்த சட்டம் தவறான சட்டம் என்பதை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உணரத்துவங்கியுள்ளன.

உள்துறை அமைச்சர் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டம் :

 18 வயது நிறைவடையாதவர்கள் குற்றம் செய்தால் மைனர் என்ற காரணம் கூறி தப்பிவிடுகின்றனர். இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்தும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் அதிகபட்ச தண்டனை ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்வதற்காக கடந்த ஜனவரி 4அன்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அனைத்து மாநில டி.ஜி.பிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 18வயது பூர்த்தியானால்தான் மேஜர்; அதற்கு கீழுள்ளவர்கள் சிறுகுழந்தைகள் என்ற சட்டம் கிறுக்குத்தனமான சட்டம் என்பதை அனைத்து டி.ஜி.பி.க்களும், அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் ஒப்புக் கொண்டனர். எனவே இனிமேல் 16 வயதானாலே மேஜராக கருதி குற்ற வழக்கில் தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 இவ்வளவு பிரச்சனைகள் வந்த பிறகு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இப்போது மைனர் வயதை குறைப்பதுதான் இதற்கான தீர்வு என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு சரியானதுதானா என்று நாம் ஆய்வு செய்வோமேயானால் அதிலும் இவர்கள் தவறிழைக்கத்தான் செய்கின்றார்கள். மைனர் வயதை 16ஆக குறைத்தாலும் 15 வயது பையன் இந்த சேட்டையை செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.

 தமிழகத்தில் தன்னிடம் ட்யூசன் படிக்க வந்த15வயதே நிரம்பிய ஒரு மாணவனை குமுதா என்றஆசிரியை உல்லாசம் அனுபவிக்க டெல்லிக்குஅழைத்துச் சென்று போலீசாரிடத்தில் கையும்களவுமாக பிடிபட்ட சம்பவங்கள் இவர்களுக்குத்தெரியுமா? தெரியாதா?. ஆசிரியையோடுவிபச்சாரம் செய்து உல்லாசம் அனுபவித்த அந்தமாணவனையும் சிறுகுழந்தை என்று சொல்லப்போகின்றார்களா?
 அதுபோல ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம்கோமட்டி பள்ளியைச் சேர்ந்த ரம்யா என்ற ஆசிரியைஅதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன்நாகேஷ் என்ற 15 வயதே ஆன மாணவனைக் காதலித்துஅவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறி கல்யாணமும் செய்து கொண்டசம்பவத்தால் ஆந்திரா மாநிலமே பரபரப்பானதுஇவர்களுக்குத் தெரியாதா? அல்லது இவர்கள்இந்தியா அல்லாத வேறு நாட்டில்வசிக்கின்றார்களா?

இதைவிட மோசமாக அமெரிக்காவில் அமன்டாசோடலோ என்ற 36 வயது நிரம்பிய ஆசிரியைடெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில்உள்ள பள்ளியில் படித்த 14 வயது மாணவன்ஒருவனுடன் உறவு வைத்ததன் விளைவாக கர்ப்பமானகாரணத்தால் கைது செய்யப்பட்டு தற்போதுசிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இவர்கள்பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா? அல்லதுஇவர்கள் பூமி அல்லாத வேறு கிரகத்தில்வசிக்கின்றார்களா?

ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்களின்நிலையை சொல்லவே வேண்டாம். "இராமநாதபுரத்தில் பள்ளிக்கூடத்தில் பிள்ளைபெற்ற 8ஆம் வகுப்பு மாணவி. ஆசிரியர்கள்அதிர்ச்சி!" என்று நாள்தோறும் வெளியாகும்இதுபோன்ற செய்திகள் இவர்களது கண்களில்படவில்லையா?

ஆக, இந்தப் பிரச்சனைக்கு மைனர் வயதை 16ஆகக்குறைத்து எந்தப் புண்ணியமும் இல்லை. மாறாகமைனர் யார்? மேஜர் யார்? என்பதற்கான சரியானஅளவுகோலை இவர்கள் கையில் எடுத்துசட்டமியற்றினால்தான் இந்தப் பிரச்சனைக்குசரியான நிரந்தரத்தீர்வு கிடைக்கும். இந்தவிஷயத்திலும் வல்ல இறைவன் வழங்கிய இஸ்லாமியமார்க்கம் நமக்கு அழகான வழிகாட்டுதலைகூறுகிறது.

 இஸ்லாம் சொல்லக்கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூப்பெய்து பருவ வயதை அடைந்த 15, 16 வயது பெண்களுக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அடிப்படையில் திருமண ஏற்பாடுகளைச் செய்த போது, அநியாயக்கார அதிகாரிகள் சிறுகுழந்தைக்கு ஏன் திருமணம் முடித்து வைக்கின்றீர்கள் என்று முஸ்லிம்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடி செய்தனர்.

சிறுகுழந்தை எப்படி பூப்பெய்யும்?

சிறுகுழந்தைக்கு எப்படி குழந்தை பிறக்கும்? என்றசாதாரண அறிவுகூட இல்லாமல் இவர்கள் நடந்தனர்.

 ஆனால் தற்போது 16வயதில் கற்பழிப்பு செய்தவன் எப்படி சிறுகுழந்தையாக இருக்க முடியும் என்று இவர்களே கேள்வியெழுப்புகின்றனர். அத்தகைய நிலையை வல்ல ரஹ்மான் அவர்களுக்கு இப்போது ஏற்படுத்தியுள்ளான். இந்திய அரசியல் சாசன சட்டத்தையும் மதிக்காமல், முஸ்லிம்களது திருமணத்தில் மூக்கை நுழைத்து ஆட்டம்போட்ட இவர்களை மேஜராகும் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று வல்ல இறைவன் அவர்களது வாயாலேயே சொல்ல வைத்துள்ளான்.

பருவ வயதை அடைவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்:

 மைனர் வயது என்பது, 16 அல்லது 15 வயது என்று ஏதாவது சட்டதிட்டங்களைப்போட்டு அதில் குழம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய வழிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பார்களேயானால் எந்த குழப்பமும் வராது.

 ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களா? என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே ஒழிய வயது ஒரு பிரச்சனை இல்லை என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய அழகான தீர்வு.

 ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பருவமடைந்து விட்டார்களேயானால் அவர்கள் மேஜர் என்றும், பருவமடையாவிட்டால் மைனர் என்றும் அழகான கோட்டை இஸ்லாம் போட்டுக்காட்டுகின்றது. அந்த அடிப்படையில் நாம் சட்டங்களை வகுத்தால் சிறுகுழந்தை கற்பழிக்குமா? அவன் குழந்தையா? அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் சோதனை செய்ய வேண்டுமா? என்ற குழப்பமெல்லாம் வராது.

 மாறாக அவன் பருவமடைந்திருந்தால் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். பருவமடையாத சிறுவனால் இது போன்ற சேட்டைகளை செய்ய இயலாது எனும்போது அதுவே அந்தப் பிரச்சனையில் தீர்வு காண எளிய வழியாக அமைந்துவிடும்.

 எனவே மத்திய அரசு ஆழமாக யோசித்து, முழுமையாக ஆய்வு செய்து இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டமியற்றுமேயானால், இதுபோன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

 இந்தப் பிரச்சனைக்கும் இஸ்லாம் கூறும் தீர்வின் பக்கம்தான் மக்கள் வரவேண்டியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதியான தீர்வு என்பதையும், அதுதான் சரியான உறுதியான தீர்வு என்பதையும் மக்கள் சன்னஞ்சன்னமாக விளங்கி வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் இது இறைவனுடைய மார்க்கம் என்பதால், படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் மனிதன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சரியானதாக இருக்கும் என்பது. இந்த நிகழ்வுகளும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை உண்மைப்படுத்துகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை

2. சிறுவன் பருவ வயதை அடையும் வரை

3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

 உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (24 : 58)
onlinepj

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை