ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்?


ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்?

“இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்குமுன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதை விட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளிதேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன.

“இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; ஓர் சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்; இஸ்லாத்தின் மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள், இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.

“நான் மதத்தைப் பற்றிக்கொண்டுள்ள கருத்துக்கும், இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழா விற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஓர் மார்க்கமாகக் கருதி, நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன். இவ்விழா வில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவையென்பதுமல்ல; இதுவே கடைசி தடவையுமல்ல. 

“எனக்கு முன் பேசிய நண்பர் சமது அவர்கள், நபி அவர்கள், கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியாக அனுப்பப்பட்டவர் எனக் குறிப்பிட்டார். எனவே, நபியை ‘இறுதி நபி’ என்று சொன்னார். நபியை அவ்வாறு குறிப்பிட்ட தற்குக் காரணம், ‘இறுதி நபி’ என்று கூறியிருக்கா விட்டால், நபிகள்நாயகத்திற்குப் பின்னால் வந்தவர்களும், நானும் கடவுளால் அனுப்பப்பட்ட திருத்தூதன்தான்; நானும் கடவுளால் அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவன்தான்’ என்று கூறி மக்களை வெவ்வேறு பக்கம் திருப்பிவிட்டால் என்ன செய்வது என்றுதான், நபியை ‘இறுதி நபி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

“இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிற தென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில், அதில் நல்ல கொள்கைகள் இருக்கின்றன.

நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று ‘ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். “ஏன் நான், இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. ‘ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது’ – ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படியிருக்கக் கூடும்? - என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து, ஆண்டவன் இப்படியிருக்கக் கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ - பார்த்தவர் சொன்னதில்லை; சொன்னவர் பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

“கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணைவைத்தால், ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர்யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்? அதனால்தான் ஆண்டவனுக்கு இணைவைத்தல் ஆகாது’ என்னும் போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாச்சரியங்கள் தோன்றின. “இஸ்லாத்தில் எனக்கு மற்றும் பார்கள்’ என்று, மனிதன் சிந்திக்க வேண்டியதின் அவசியத்தைக் கருதி, கடவுள், திருத்தூதரை அனுப்பியிருக்கிறார். எனவேதான், பழந்தமிழ் மக்கள் ‘அறிவே ஆண்டவன் - ஆண்டவனே அறிவு’ என்று கூறியிருக்கிறார்கள்.

“இஸ்லாத்தின் இன்னொரு சிறப்பு இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது; முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக் கொள்ளும் தேவர்தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கி விடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை! அதனால், அது, என்னை மிகவும் ஈர்க்கக் கூடிய கொள்கையாக இருக்கிறது.

“இதையெல்லாம் அறிந்துதான், எதையும் துருவித் துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார். “

நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்களென்றால் - 1957ஆம் ஆண்டில் சமுதாய விழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னால் எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம், ‘நீ வணங்கும் கடவுள் இதுவல்ல; நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல’ என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதி யோடு எடுத்துச் சொன்னாரே அதுவும் தான் அவரை ‘மகான்’ என்று கொண்டாடக் காரணம். அப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம்தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறதென்றால் அது ஆச்சரியமில்லை. “

தமிழ் மக்கள் இஸ்லாமியக் கொள்கையை ஏன் கடைப்பிடிக்கிறார்களென்றால் - 2,000 ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழ் மக்கள்வைத்திருந்த ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற குழந்தை காணாமல் போய்விட்டது; அதைத் தேடித் தேடி அலைந்தார்கள் தமிழ்மக்கள்; கிடைக்கவில்லை; பிறகு, இஸ்லாத்தில் அந்தக் குழந்தையைக்கண்டார்கள்; தங்கள் குழந்தை அங்கு வளருவதைக் கண்டார்கள்; குழந்தையை இழந்து விட்ட தாய், தன் குழந்தையை மீண்டும் கண்டதும் எவ்வளவு ஆவலோடு கொஞ்சுவாளோ, அதைப் போல, இன்றையத்தமிழ் மக்கள், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் கொள்கை இஸ்லாத்திலே காணப்படுவதால் அதைப் பின்பற்றினார்கள். “தாய் தன் குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்து, ‘இது என்ன, அந்தக் குழந்தையை அப்படிக் கொஞ்சுகிறாளே’ என்றால், அது, தாய்மைஅன்பு அறிந்தவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, அதை விளக்கிக் கூற முடியாது. தமிழர்களுக்கு - தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ற பல நல்ல சட்டங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றன.

“மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது - மக்களை அறிவுத்தெளிவுபடுத்துவது - மக்களை ஒற்றுமைப்படுத்துவது - அரிய பந்தங்களை ஏற்படுத்துவது - நல்ல தோழமையை வளர்ப்பது - சிறந்த விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவது; அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது, மக்களை மத மதப்பில் ஆழ்த்தும்; அதற்குப் போலீஸ் தேவைப்படும். மார்க்கநெறியில் நின்றால் மக்கள் அன்புவழியில் ஒன்று படுவார்கள்.“மதத்தின் பயன் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினால் யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால், அந்தப் பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்ட பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை. அதைத்தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை; இனி இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அப்படியிருந்தாலும் இல்லா விட்டாலும் நாங்கள், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை; இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்க மாட்டார்கள். “இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளை வேறு நாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள்; ஆனால், நமது நாட்டில் அப்படியிருக்கக் கூடாது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள்தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். “ஏன் அவ்வாறு சொல்கிறே னென்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீட்டுக்கு வருகிறோம். நாம் முதலில், இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி வண்டிக்காரரிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரர் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும், தாம் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறார்; அப்பொழுது கூறுகிறார்கள் - ‘அப்பா! கடவுளுக்குப் பொதுவாக நட!’ என்கிறார்கள்; ஆனால், உண்மையாகவே அதிக தூரம் வந்து, நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவர், ‘ஐயா! கடவுளுக்குப் பொதுவாக நடவுங்கள்!” என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன் - ‘கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? “ஆகையினாலேதான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.

“மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது; ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகின்றான். நல்ல சுற்றுச்சார்பும், சூழ்நிலையும் அமையவேண்டும். சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ, அப்படியே - அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாக நாம் நடந்தால் தமக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழித்து, நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகின்றார்களே அவர்களைத்தாம் ‘மகான்கள்’ என்று சொல்லுகின்றோம். ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை; அவர்கள் கிடைக்கும் போது நாம்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால், அத்தகையவரின் சிறந்த கருத்துகளை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்ல முறையிலே அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத் தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்வி முறை ஏற்பட நல்ல ஆட்சியும் நல்ல ஆட்சி முறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும்; நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும். இவ்வுயரிய மார்க்கம்அக்கிரமத்தை அழிக்கப் பயன்படவேண்டும்; உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்பட வேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகின்றதோ அன்றைக்குத்தான் மார்க்கத்தின் முழுப் பலன்களையும் அடைய முடியும்.


(7.10.1957-இல் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சில பகுதிகள்) வாசிக சேகரம் : ‘சௌந்தர்ய முத்திரை’ தண்ணன் மூஸா
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்