திரித்துப் பொருள் கூறப்படும் திருக்குர்ஆன் வசனங்கள்.
திரித்துப் பொருள் கூறப்படும் திருக்குர்ஆன் வசனங்கள்.
திருக்குர்ஆனின் வசனங்களுக்குத் தவறான பொருளைக் கூறி, அதன் மூலம் இஸ்லாத்திற்குப் புறம்பானகொள்கைகளை சிலர் பிரச்சாரம் செய்வதை நாம் காண்கின்றோம். இவ்வாறு தவறாக பொருள்கூறப்பட்ட வசனங்களில் சிலவற்றையும் அவற்றின் உண்மையான பொருளையும் நாம் இங்குகாண்போம்.
குர்ஆன் வழிகெடுக்குமா?
சாதாரண மக்கள் மட்டுமல்ல! பெரும் பெரும் ஆலிம்கள் கூட, குர்ஆன் வழி கெடுக்கும் என்றுபேசுகின்றனர். அதற்கு ஆதாரமாக கீழ் கண்ட வசனத்தைக் கொண்டு வருகின்றனர்.
கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்துகொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையைநாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில்விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத்தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.
(அல்குர்ஆன் 2:26)
இவ்வசனத்தில் "இதன் மூலம்'' என்று கூறப்பட்டுள்ளது. "இவ்வேதத்தின் மூலம்'' என்று சிலர் இதற்குப்பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.
இவ்வசனத்தில் உதாரணம் கூறுவதைப் பற்றிப் பேசும் போது தான் "இதன் மூலம்'' என்று அல்லாஹ்கூறுகிறான். எனவே இவ்வுதாரணத்தின் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். வேதத்தின்மூலம் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச்சொல்லும் இடம் பெறவில்லை.
குர்ஆன் நேர்வழி காட்டக் கூடியது என்று குர்ஆனில் ஏராளமான இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். நேர்வழி காட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான், வழி கெடுப்பதற்காக அல்ல. எனவேஅவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.
மனிதனுக்கு மனிதன் ஸஜ்தா செய்யலாமா?
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும்பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
(அல்குர்ஆன் 2:34)
முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டிஅவருக்கு "ஸஜ்தா' செய்யுமாறு வானவர்களுக்கு கட்டளையிட்டதை அல்லாஹ் இந்த வசனத்தில்சொல்லிக் காட்டுகின்றான்.
இதே கருத்து 7:11, 15:29,30,31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்)செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவேஇருந்ததில்லை. இது குறித்துத் தெளிவாக அறிய, முக்கியமான விவரத்தை நாம் அறிந்து கொள்வதுஅவசியமாகும்.
(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம்பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப் படவில்லை.
தொழுகையைக் குறிப்பிட "ஸலாத்' என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால்,இவ்வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள்இவ்வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு "ஸலாத்' என்ற வார்த்தையை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.
"ஸவ்ம்' என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப்படுத்திக் கொள்ளுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தைபயன்படுத்தப்பட்டது.
இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாகநடை முறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர்சூட்டியது.
இது போலவே "ஸஜ்தா' என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குமுன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.
நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள்ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது "ஸஜ்தா' என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறுபொருள் இல்லை. நன்றாகப் பணியுதல் என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக்காட்டும் எல்லாக் காரியங்களையும் "ஸஜ்தா' எனக் குறிப்பிடப்பட்டது.
அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் "நன்றாகப் பணியுதல்' என்ற பொருளில் இவ்வார்த்தை, பலஇடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!
(அல்குர்ஆன்: 2:58, 4:154, 7:161)
இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் "ஸஜ்தா' என்ற சொல்லுக்குக்கொள்ள முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள "ஸஜ்தா'வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது.ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.
மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும்அல்லாஹ்வுக்கு "ஸஜ்தா' செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.
இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதைசெய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வதுகூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்றுவருகின்றன. இது தான் அவற்றுக்கான "ஸஜ்தா'. மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவதுஅவற்றுக்குரிய "ஸஜ்தா'வாகும்.
மலைகள், இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப் படி செய்துவருகின்றன. இது அவற்றுக்குரிய "ஸஜ்தா'வாகும்.
மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்துவருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே "ஸஜ்தா' எனப்படுகிறது.
திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே "ஸஜ்தா'என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதை தெளிவாக அறியலாம்.
முதல் மனிதரின் சிறப்பை ஒப்புக் கொண்டு அவருக்குப் பணிவைக் காட்ட வேண்டும் என்பது தான்அல்லாஹ்வின் கட்டளை.
இப்படித் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இதைவலுப்படுத்துவதற்கு இன்னும் பல காரணங்களும் உள்ளன.
வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும்இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்றுஇல்லை.
சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் "ஜிப்ரீல்' என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார்.அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்தவடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார். அவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன.எனவே, நம்மைப் போல் வானவர்களைக் கருத முடியாது.
பணிவை எவ்வாறு அவர்கள் வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு அவர்கள் பணிவைவெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.
நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் அல்லாஹ் கட்டளையிட்டதால் தான்வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.
"பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்'' என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக்கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ,சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப்படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
(அல்குர்ஆன் 41:37)
படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்யவேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.
முஆத் (ர-லி), ஸல்மான் (ர-லி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக்கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர்.
(நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா, பைஹகீ, இப்னு ஹிப்பான், ஹாகிம், அஹ்மத், தப்ரானி)
இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம்செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம்.ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன்உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)
இதே கருத்து 3:169 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் எனஎண்ணாதீர்கள்! என்று இந்த வசனங்கள் கூறுவதை முஸ்-லிம்களில் சிலர் தவறாகப் புரிந்துவைத்துள்ளனர்.
மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர்; எனவே அவர்களை வழிபடலாம்;அவர்களை அழைக்கலாம்; பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளதாகஅவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.
இவ்வசனங்கள் நல்லடியார்கள் மற்றும் மகான்களைக் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடுநடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்யஒருவர் தயங்கக் கூடாது என்பதை வ-லியுறுத்தவே அருளப்பட்டன.
இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித் தோழர்களோ,அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதைமுதலி-ல் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களேஅறியலாம்.
2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்'' என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்''என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ளமுடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும்.
3:169 வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக்கூறுகின்றன.
3:169 வசனம் "தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்'' எனக் கூறுகின்றது. நம்மைப் பொறுத்த வரைஅவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக்கூறப்படுகிறது.
இவையனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் தான்முக்கியமானது.
உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்ட போது "அவர்களின் உயிர்கள் பச்சைநிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்''என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்.
(நூல்: முஸ்லிம் 3500)
நியாயத் தீர்ப்புக்குப் பிறகு தான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவே தான் மனித வடிவில்இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா?அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா? என்று கேட்டால் செய்யலாம் என்று தான்மாற்றுக் கருத்துடையோர் பதிலளிப்பார்கள். அவர்கள் நம்மைப் பொருத்த வரை இறந்து விட்டார்கள்என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர்உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம்கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?
ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர்.
(பார்க்க அல்குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)
ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப்பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச்சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?
அனைத்தையும் படைத்துப் பரிபா-லித்து, அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்கவேண்டும். உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரைப் பிரார்த்திக்க முடியாது.
அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்றுகொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின்பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வட்டி உண்டா?
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:130)
இந்த வசனத்தைச் சான்றாகக் கொண்டு சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு;கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
இவர்களின் வாதம் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததன் அடிப்படையில் எழுப்பப்படும்வாதமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!
(அல்குர்ஆன் 2:278)
இந்த வசனத்தில் "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
"வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும்வாங்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறாமல், "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்'' என்றுபொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய அளவிலான வட்டியும், தடுக்கப்பட்டுள்ளது என்பதைவிளங்கலாம்.
2:279 வசனத்தில் "வட்டியிலி-ருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமேசொந்தம்'' எனக் கூறப்படுகிறது. "மூலதனமும் சிறிய அளவிலான வட்டியும்'' என்று கூறப்படவில்லை.மாறாக வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான்வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.
அப்படியானால் பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள் என்று 3:130 வசனம் கூறுவது ஏன்?
பொதுவாக வட்டியின் தன்மையே இது தான். வியாபாரத்துக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இதுதான்.
அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டேசெல்லும். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வாங்கிய கடனை விட பல மடங்கு வட்டிஅதிகமாகியிருப்பதைக் காணலாம்.
இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்றகருத்தை இது தராது.
ஒற்றுமை எனும் கயிறு
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள்பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன்உங்கள் உள்ளங்களுக் கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால்சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக்காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 3:103)
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.முஸ்லிம் லீக் போன்ற சில கட்சியினர் இந்த வசனத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பிரச்சாரம்செய்து வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றுதிருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். சில மார்க்க அறிஞர்களும் கூடதவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். குர்ஆன் ஹதீஸை விட ஒற்றுமை தான் முக்கியம்என்று போலி ஜிஹாத்வாதிகளும் பிரச்சாரம் செய்கின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும்என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில்வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமாபார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச்செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
"அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது.அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான்.அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச்சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால்பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ளகடமையாகும்.
அல்லாஹ்வும் அடியானும் ஒன்றா?
அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!)நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கைகொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ்செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க் களம் "பத்ருப் போர்' என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திமுஸ்லி-ம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
நி ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான்
(அல்குர்ஆன் 8:9)
நி சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக அதற்கு முன் சிறிய தூக்கத்தை ஏற்படுத்தி முஸ்லி-ம்களின்இதயங்களை அமைதிப்படுத்தினான்
(அல்குர்ஆன்8:11)
நி அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும்உறுதிப்படுத்தினான்
(அல்குர்ஆன் 8:11)
நி வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்
(அல்குர்ஆன்8:12)
நி எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான்
(அல்குர்ஆன்8:12)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் மேற்கண்ட வசனத்தில் (8:17)அல்லாஹ் கூறுகிறான்.
பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்துவா! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ(ர-லி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கிநபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன.அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்''என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(நூல்: தப்ரானி)
இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ, அது போன்ற விளைவு ஏற்படாமல்இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டன.
இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின்ஆற்றலி-னால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வளவு தெளிவான வசனத்தையும் சிலர் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக்கொள்கின்றனர்.
இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல; இருவரும் ஒருவரே''என்றெல்லாம் உளற ஆரம்பித்தார்கள். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள்உருவாக்கினார்கள். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.
குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து தங்களின் உளறலை நியாயப்படுத்தமுடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் இப்படி எறிய முடியுமா? அல்லாஹ்வாகஇருந்தால் தானே எறிய முடியும்? அவர்கள் எறிந்ததை அல்லாஹ், தான் எறிந்ததாக அல்லவாகூறுகிறான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் ஒருவரே என்று இவர்கள்உளறலானார்கள்.
இணை வைத்தலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடலானார்கள்.
ஆனால் இந்த வசனம் அவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.
"நான் கல்லை வீசினால் போதும்! எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக்கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப்பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை.இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைக் கூறுவதற்கு முன் நபித் தோழர்கள்போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக்கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.
நபித் தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்த தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசகஅமைப்பையே இங்கேயும் பயன்படுத்துகிறான். நபிகள் நாயகம் மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்துகொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிடவேண்டுமல்லவா?
"அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ்'' என்று இவர்கள் கூறியது போல் "அல்லாஹ் தான் நபித்தோழர்கள், நபித் தோழர்கள் தான் அல்லாஹ்'' எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பத்ருப் போரில் பல நபித் தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படிஅல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.
இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ, அவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாதுஎன்பதற்காகத் தான், தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ்நினைவுபடுத்துகிறான்.
நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்கூறச் சொல்கிறான்.
(அல்குர்ஆன் 18:110)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மல ஜலம் கழித்தது, குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி, மக்களைஇழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீதுஎதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பைஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பேஅறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது, என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கும், நபித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, காபிர்கள் உள்ளிட்ட எல்லா மனிதர்கள்விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.
நீங்கள் விவசாயம் செய்கிறீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம்செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (அல்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ்கேட்கிறான்.
நாம் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமேவிவசாயம் செய்கிறோம் என்கிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இவர்கள் சிந்திக்கவேண்டாமா?
நீங்கள் விந்துத் துளியாகச் செலுத்துகிறீர்களே! அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம்படைக்கிறோமோ? எனவும் அல்லாஹ் கேட்கிறான்.
(அல்குர்ஆன் 56:58,59)
நாம் தான் விந்துத் துளியைத் செலுத்துகிறோம். ஆனாலும், அதைக் குழந்தையாக ஆக்குவதும்,ஆக்காது விடுவதும் அவனது கட்டளைப்படி நடப்பது என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.
நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்குநூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக்கொள்கிறோம்.
அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில்விளங்கும்.
நீர் எறிந்த போது. நீர் எறியவில்லை.
என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போதுஎறிந்தவர் நபிகள் நாயகம் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையேநீர் எறியவில்லை எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போதுநான் சாப்பிடவில்லை'' என்று நாம் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.
ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியானபொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது.முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.
நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை; அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால்,பயிரிடுதல் என்பதற்கு இருவேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.
அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதைப் (பயிரிடுவது இல்லை)முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.
இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் எறிந்த போது அதாவது "பொடிக் கற்களை வீசிய போது''
நீர் எறியவில்லை அதாவது "ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை''
என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும், மக்களின்உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.
இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள்நாயகம். அதைச் சேர்த்து வைத்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு, அவன்தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு, அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.
Comments