நேர்ச்சையும் சத்தியமும்
நூலின் பெயர் : நேர்ச்சையும் சத்தியமும்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள் : 52
விலை ரூபாய் : 10.00 Download this Book in PDF
முன்னுரை
முஸ்லிம்கள் தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ளக் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
எந்த வணக்கத்தையாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறையில் ஒருவர் செய்தால் அந்த வணக்கம் இறைவனால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை தக்க முறையில் நிறைவேற்றினாலும் நேர்ச்சை, சத்தியம் செய்தல் போன்ற வணக்கங்களைப் பற்றி அறியாமையில் உள்ளனர்.
மற்றும் சில முஸ்லிம்கள் நேர்ச்சை, சத்தியம் செய்தல் ஆகியவற்றை ஒரு வணக்கம் என்று அறியாததால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை செய்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரில் சத்தியமும் செய்கின்றனர்.
தங்களுக்கு இயலாத ஒன்றை நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்யும் முறை யாது என்பது பற்றியோ அது குறித்த உட்பிரிவுச் சட்டங்கள் குறித்தோ முழுமையான நூல் எதுவும் தமிழ் மொழியில் இல்லாததே இந்த நிலமைக்குக் காரணம்.
நேர்ச்சை, சத்தியம் செய்தல் பற்றி ஓரிரண்டு நூல்கள் வெளியிடப் பட்டிருந்தாலும் அவை மேலோட்டமாகவே எழுதப்பட்டுள்ளதால் போதிய பயன் ஏற்படவில்லை.
எனவே இக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல் குறித்த அனைத்துச் சட்டங்களையும் தக்க ஆதாரத்துடன் திரட்டி உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.
இவ்விரு வணக்கங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் நிறைவேற்றிட வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
அன்புடன்,
நபீலா பதிப்பகம்.
- நேர்ச்சையின் சட்டங்கள்
- நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது
- பிரார்த்தனை தான் சிறந்த வழி
- நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்
- நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே
- அறியாமல் செய்த நேர்ச்சைகள்
- எவற்றை நேர்ச்சை செய்யலாம்
- மௌன விரதம்
- தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல்
- தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல்
- செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சை செய்தல்
- பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல்
- வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல்
- சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல்
- நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்
- நேர்ச்சை செய்ததை விட சிறந்ததை நிறைவேற்றலாம்
- சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்
- தீர்மானமில்லாத நேர்ச்சை
- ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்
- சத்தியம் செய்தல்
- அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்
- அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம்
- செய்ததற்கான பரிகாரம்
- சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்
- தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது
- பொய்ச் சத்தியம் செய்தல்
- தீர்மானமின்றி சத்தியம் செய்தல்
- பிறருக்காகச் சத்தியம் செய்தல்
- குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்
- தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்
- பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்
- வியாபாரத்தில் சத்தியம் செய்தல்
- சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்
- நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது
- சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது
- சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்
- இல்லறத்தில் சந்தேகம்
- சிறந்ததைக் கண்டால் சத்தியத்தைமுறிக்கலாம்
- சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம்
நேர்ச்சையின் சட்டங்கள்!
நேர்ச்சை செய்வது, சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் பற்றி முஸ்ம் சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது.
இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வதும், சத்தியம் செய்வதும் ஏறக் குறைய ஒரே விதமான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விஷயங்களில் இவ்விரண்டின் சட்டங்களும் வேறுபடுகின்றன.
நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது
'இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்;ஏழைகளுக்கு உதவுகிறேன்' என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.
இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.
'இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்' என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
'உனக்காக நான் இதைச் செய்கிறேன்' என்று இறைவனிடம் நாம் கூறும் போது 'அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.
எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 6608, 6693
நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 6692
நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.
நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.
பிரார்த்தனை தான் சிறந்த வழி
அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்ன தான் செய்ய வேண்டும்?
இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.
'இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?' என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.
உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு 'இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக' என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.
வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழி காட்டுகிறான்.
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் 2:45)
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)
நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்
'நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது' என்றும் 'நேர்ச்சை செய்யாதீர்கள்' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் 'அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது' என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
(அல்குர்ஆன் 2:270)
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் 76:7)
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
(அல்குர்ஆன் 22:29)
'உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695
மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வணக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே!
நேர்ச்சை என்பது இஸ்லாத்தில் ஓர் வணக்கமாகும்.
மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு இறைவன் வலியுறுத்துவதாலும், மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று கூறுவதாலும், கஅபாவைத் தவாஃப் செய்வதுடன் இணைத்து நேர்ச்சை குறிப்பிடப்படுவதாலும் நேர்ச்சை ஓர் வணக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லாவிதமான வணக்கங்களையும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
தமிழக முஸ்லிம்களில் பலர் நேர்ச்சையை இறை வணக்கம் என்று விளங்காத காரணத்தால் இறந்து போன மனிதர்களுக்கு நேர்ச்சை செய்து வருகின்றனர்.
இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.
புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடு வதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து'அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்' என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா?' எனக் கேட்டார்கள். இல்லை' என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். 'அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை' என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத் 2881
இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட மனிதர் அல்லாஹ்வுக்காகத் தான் நேர்ச்சை செய்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தார். அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இதை அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வுக்குச் செய்த நேர்ச்சையானாலும் மற்றவர்களுக்காகச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியாருக்காக நேர்ச்சை செய்வது கூடாது என்பதைப் போலவே அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்ட நேர்ச்சையைக் கூட நாகூரில் வைத்து நிறைவேற்றக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாகூர் எனும் ஊர் அறியாமைக் கால வழிபாடு நடக்கும் இடமாக அமைந்துள்ளது.
அங்கே போய் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டாலும் அது நாகூரில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பலியிடப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.
'நான் எனது மூன்று ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள் 'அறியாமைக் காலத்தவர் ஒன்று கூடும் இடமாக அது இருந்தால், அல்லது அறியாமைக் காலத்தவர் பண்டிகை கொண்டாடும் இடமாக இருந்தால், அல்லது வழிபாடு செய்யப்படுபவை அமைந்துள்ள இடமாக இருந்தால் அந்த இடத்தில் உன் நேர்ச்சையை நிறைவேற்றாதே! அவ்வாறு இல்லாதிருந்தால் உனது நேர்ச்சையை நிறைவேற்று' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கர்தமா (ரலி)
நூல்: அஹ்மத் 16012, 22112
அல்லாஹ்வுக்காக மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுத்தும் இடத்தில் அதை நிறைவேற்றக் கூடாது என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய நேர்ச்சையை மற்றவர்களுக்குச் செய்தால்'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்ற உறுதிமொழியை மீறுவதாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுமாகும்.
அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மறுமையில் அறவே வெற்றி பெற முடியாது என்பதை மனதில் வைக்க வேண்டும்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.
(அல்குர்ஆன் 4:116)
'மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். 'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் கூறினார்.
(அல்குர்ஆன் 5:72)
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன் 6:88)
'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக,அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65, 66)
அறியாமல் செய்த நேர்ச்சைகள்
மார்க்கத்தைச் சரியாக அறிந்து கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளனர்.
'அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696, 6700
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை விடப் பெரிய பாவம் ஏதும் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது.
எவற்றை நேர்ச்சை செய்யலாம்?
'நாம் எந்த நேர்ச்சை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும்'என்பதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நினைக்கின்ற எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் நேர்ச்சை செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை.
இறைவனுக்காக நாம் செய்யும் நேர்ச்சைகள் இரண்டு தன்மைகளில் அமைந்திருக்க வேண்டும்.
1. இறைவன் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற வணக்கங்களில் ஒன்றாக அது அமைந்திருக்க வேண்டும்.
2. அல்லது மனித சமுதாயத்துக்கு உதவும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு தன்மைகளில் இல்லாத எந்தக் காரியத்தையும் நாம் நேர்ச்சை செய்ய முடியாது.
உதாரணமாக இரண்டு ரக்அத் தொழுதல், ஐந்து நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற காரியங்களை நேர்ச்சையாகச் செய்யலாம். ஏனெனில் இவை மார்க்கத்தில் வணக்கம் என்று கூறப்பட்டுள்ளன.
அது போல் ஏழைக்கு உணவு அளித்தல், மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தை நீக்க கிணறு வெட்டுதல் போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம். ஏனெனில் இவை மனித குலத்துக்கு நன்மை தரக் கூடியவையாகும்.
இவ்வாறு இல்லாத எந்த ஒன்றையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்விரு அம்சங்களில் அடங்காத பல நேர்ச்சைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
மௌன விரதம்
'எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நான் இரண்டு நாட்களுக்கு எதையும் பேச மாட்டேன்'என்று மௌன விரதம் இருக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது.
ஒருவர் மௌனமாக இருப்பது வணக்க முறையில் ஒன்றாக அமைந்திருக்கவில்லை. மேலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
முந்தைய சமுதாய மக்களுக்கு மௌன விரதம் என்பது ஒரு வணக்கமாக ஆக்கப்பட்டிருந்தது. மர்யம் (அலை) அவர்கள் மௌன விரதம் இருந்ததாகப் பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
(அல்குர்ஆன் 19:26)
இவ்வாறு மௌன விரதம் இருப்பது நமக்குத் தடை செய்யப்பட்டு விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். 'அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும்,வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்'என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவரைப் பேசுமாறும்,நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6704
பேசாமல் இருப்பது ஓர் வணக்கமல்ல. அவ்வாறு நேர்ச்சை செய்யக் கூடாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல்
'இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்;செருப்பணியாமல் கொளுத்தும் வெயிலில் நடப்பேன்' என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.
இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸிலிருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன.
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று விசாரித்தனர். 'நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1865, 6701
ஒரு முதியவர் தனது இரண்டு புதல்வர்கள் மீது சாய்ந்து கொண்டு நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். 'இவரது நிலைக்கு என்ன காரணம்?' என்று விசாரித்தனர்.'இவர் (இவ்வாறு) நேர்ச்சை செய்து விட்டார்' என்று அவரது இரண்டு மகன்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பெரியவரே வாகனத்தில் ஏறுவீராக! நீரும், உமது நேர்ச்சையும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3101
எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வெறுமனே நடப்பதை நேர்ச்சை செய்யாமல் ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால், நடந்து செல்ல அவருக்குச் சக்தியும் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் நபிவழியிலிருந்து நாம் அறியலாம்.
என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 1866
அதிக நன்மையை நாடி மூன்று பள்ளிவாசலுக்கு மட்டும் பயணம் செய்வது சிறப்புக்குரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கஅபா, மஸ்ஜிதுன்னபவி, பைத்துல் முகத்தஸ் ஆகியவையே அந்த மூன்று பள்ளிவாசல்கள்.
(புகாரி 1189, 1197, 1864, 1996)
கஅபா ஆலயம் அந்த மூன்று ஆலயங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்காகப் பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் புனிதமானதாகும்.
ஆயினும் மதீனாவிலிருந்து நடந்தே கஅபா ஆலயம் செல்வது சாதாரணமாக இயலக் கூடிய காரியமல்ல.
எனவே தான் சிறிது தூரம் நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு கட்டளையிடுகிறார்கள்.
கஅபா ஆலயத்திற்கு நடந்து செல்வதாகச் செய்த நேர்ச்சையைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகின்றனர். ஒரு அடையாளத்திற் காகச் சிறிது தூரம் நடப்பதே போதுமானது எனக் கூறி மக்களின் சிரமத்தைக் குறைத்து விட்டனர்.
ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தால் சிறிது நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லலாம்.
தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல்
ஒருவர் நேர்ச்சை செய்வதாக இருந்தால் தனக்கு உடமையான பொருட்களிலும், தன் வைகசம் உள்ள பொருட்களிலும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும். தன் வைகசம் இல்லாத விஷயங்களில் நேர்ச்சை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது நேர்ச்சையாகாது.
'தன் கைவசம் இல்லாதவற்றில் ஆதமுடைய மகன் மீது நேர்ச்சை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்: புகாரி 6047
ஒருவன் அன்றாடம் தனது உணவுக்கே சிரமப்படுகிறான் என்றால் நான் நூறு ஏழைகளுக்கு உணவளிப்பேன் என்று நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்வாறு அவன் நேர்ச்சை செய்யும் போது நூறு ஏழைகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான உணவோ, பணமோ கைவசம் இருந்தால் மட்டுமே இவ்வாறு நேர்ச்சை செய்ய வேண்டும்.
ஒருவன் இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது அவனிடம் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கும் வசதி இல்லாவிட்டால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்றும் அவசியம் இல்லை.
எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்கிறார். இவர் நேர்ச்சை செய்யும் போது அதற்கான வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் போது வசதியை இழந்து விட்டார் என்றால் இவர் மீது நேர்ச்சையை நிறைவேற்றும் கடமை உண்டு. அதைச் செய்ய இயலாத போது அதற்கான பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்.
செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சை செய்தல்
இறைவனைத் திருப்திபடுத்துவதாக எண்ணிக் கொண்டு தம்மைத் தாமே வேதனைப்படுத்திக் கொள்வோர் செருப்பணியாமல் இருப்பதையும் நேர்ச்சையாகச் செய்து வருகின்றனர். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு செருப்பு அணியாமல் நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள் (சிறிது நேரம்) நடந்தும் (சிறிது நேரம்) வாகனத்தில் ஏறியும் செல்லட்டும் என்றார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3102
பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல்
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்த நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. அது நேர்ச்சையாகவும் ஆகாது.
'அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696, 6700
'அல்லாஹ்வுக்காக திருடுவேன்; கொள்ளையடிப்பேன்; விபச்சாரம் செய்வேன்' என்றெல்லாம் யாரும் நேர்ச்சை செய்ய மாட்டார்கள்.
ஆனாலும் நன்மை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள பல தீமைகள் சமுதாயத்தில் நிலவுகின்றன. இவற்றைச் செய்வ தாக நேர்ச்சை செய்வோர் சமுதாயத்தில் உள்ளனர். இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது.
மவ்லூது, ஹல்கா, மீலாது, இருட்டு திக்ரு, கத்தம் பாத்திஹாக்கள், கந்தூரி விழாக்கள், கூடு,கொடிமரம் போன்ற காரியங்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தராமல் அவர்களின் காலத்துக்குப் பின் இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்ட அனாச்சாரங்களாகும்.
மேற்கண்ட காரியங்களை அல்லாஹ்வுக்காகச் செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் இக்காரியங்களைச் செய்யக் கூடாது. பாவமான காரியங்களில் நேர்ச்சை கிடையாது என்ற நபிமொழியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல்
வணக்க வழிபாடுகளையும், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களையும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.
வணக்கமாக இல்லாத காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு' அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன்' எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம்' எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார். அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார் கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதீ 3623
இதே கருத்து அபூதாவூத் 2880, அஹ்மத் 21911, 21933 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொட்டு அடிப்பது வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல. இதனால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளதால் இது போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.
இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றனர். போருக்குச் சென்ற நபியவர்கள் உயிருடனும், காயமின்றியும் திரும்ப வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் நேர்ச்சை செய்கிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகிழ்விப்பதற்காகவும் இவ்வாறு நேர்ச்சை செய்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) உலகில் வாழும் போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் வணக்கமாகும். அந்த அடிப்படையில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.
இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்களால் மட்டும் நிறைவேற்ற இயன்ற வணக்கமாகும். மற்றவர்களுக்காக கொட்டு அடிப்பதோ, பாட்டுப் பாடுவதோ வணக்க வழிபாட்டில் சேராது.
எனவே வணக்க வழிபாடுகள் அல்லாத காரியங்களை நேர்ச்சை செய்யக் கூடாது என்பதற்கு எதிரானதாக இதைக் கருதக் கூடாது.
சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல்
'நான் நினைக்கின்ற காரியம் நிறைவேறினால் எனது சொத்துக்கள் முழுவதையும் அல்லாஹ்விற்காக வழங்குவேன்' என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை அவர் அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் எந்த மனிதருக்கும் தனது சொத்துக்கள் முழுவ தையும் தர்மம் செய்யும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கோ, அதை விட குறைந்த அளவுக்கோ தான் தர்மம் செய்யும் அதிகாரம் உண்டு.
தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்வதாக ஒருவர் முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தர்மம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தனது நேர்ச்சையை அவர் முழுமையாக நிறைவேற்றியவராக ஆவார்.
கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். பின்னர் அவர்களை அல்லாஹ் மன்னித்தான் என்பது பிரபலமான வரலாற்று நிகழ்ச்சியாகும்.
புகாரி 4418, 4676, 4677, 4678, 6690, 2758, 6255, 7225 ஆகிய ஹதீஸ்களில் இந்த வரலாற்றைக் காணலாம்.
அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்ததற்காக என் செல்வம் அல்லாஹ்விற்காக நான் செய்யும் தர்மமாகும்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மூன்றில் ஒரு பங்கு (தர்மம் செய்வது) உமக்குப் போதுமானதாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல் முன்திர்
நூல்: அஹ்மத் 15190, 15000
நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்
மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
'சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 3103
நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 5:89)
நேர்ச்சை செய்ததை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்
நாம் ஒரு நல்லறம் செய்வதாக நேர்ச்சை செய்தால் அதையே நிறைவேற்ற வேண்டும் என்றாலும் நாம் விரும்பினால் அதை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்.
'மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இங்கே தொழு' என்றார்கள். அந்த மனிதர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். 'இங்கேயே தொழு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் உன் விருப்பப்படி செய்து கொள்' என்றார்கள்.
நூல்: அபூதாவூத் 2875, அஹ்மத் 14390
ஒரு பெண் நோய்வாய்ப்பட்டார். 'அல்லாஹ் எனது நோயை நீக்கினால் நான் பைத்துல் முகத்தஸ் சென்று தொழுவேன்' என்று அவர் நேர்ச்சை செய்தார். நோய் குணமானதும் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து புறப்பட ஆயத்தமானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் வந்தார்கள். அப்பெண் தனது நேர்ச்சை பற்றி அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு மைமூனா (ரலி) அவர்கள் 'பயணத்திற்காகத் தயார் செய்த உணவைச் சாப்பிட்டு முடி! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழு! ஏனெனில் அங்கே ஒரு தடவை தொழுவது கஃபாவைத் தவிர மற்ற பள்ளி வாசல்களில் ஆயிரம் தடவை தொழுவதை விடச் சிறந்தது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்'என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2474
பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் தொழுவதாக நேர்ச்சை செய்தவர் அதை விடச் சிறந்த பள்ளியான மஸ்ஜிதே நபவியில் அத்தொழுகையை நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நாம் செய்த நேர்ச்சையை விடச் சிறந்ததை நிறைவேற்றினால் நேர்ச்சை நிறைவேறும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஒரு கோழியைத் தர்மம் செய்வதாக நேர்ச்சை செய்தவர் ஒரு ஆட்டைத் தர்மம் செய்யலாம். பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக நேர்ச்சை செய்தவர் இருபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.
சாதாரண சோறு வழங்குவதாக நேர்ச்சை செய்தவர் பிரியாணியை வழங்கலாம்.
சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்
நாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நேர்ச்சை செய்த பின் 'அந்த நேர்ச்சையைச் செய்யாமல் இருப்பது தான் நல்லது' என்று நமக்குத் தெரிய வந்தால் நேர்ச்சையை முறித்து விடுவது நல்லது. நேர்ச்சையை நிறைவேற்றாததற்காகப் பரிகாரம் செய்து விட வேண்டும்.
'ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து, அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு, அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)
நூல்: புகாரி 6622
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்க ளுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம்.'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளையிட்டனர். 'அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே' என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் ஏதாவது சத்தியம் செய்து விட்டு அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு, சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 6623
தீர்மானமில்லாத நேர்ச்சை
எனக்கு இது நிறைவேறினால் நான் இதைச் செய்வேன் என்று தீர்மானமாக முடிவு செய்வது தான் நேர்ச்சையாகும்.
தீர்மானம் இல்லாமலும், செய்வதா வேண்டாமா' என்ற குழப்பத்திலும் இருந்தால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:225)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.
(அல்குர்ஆன் 5:89)
'எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான்'என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2528, 5269
நேர்ச்சை செய்யும் போது இதைச் செய்வேன் என்று நிச்சயித்துக் கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். 'எனது இந்தத் தேவை நிறைவேறினால் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் இதைச் செய்வேன்' என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
'ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 1451
இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும், அபூதாவூத் 2838,அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில்
'உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறைவேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம்'என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அஹ்மத் 5108, 5814, 5830)&&&
ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்
ஒருவர் ஒரு நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக் கடமை நீங்கி விடும்.
ஆனால் அவர் செய்த நேர்ச்சை மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது.
'என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து விட்டு அதைச் செய்யாமலேயே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா' என்று ஜுஹைனா குலத்துப் பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம். அவர் சார்பில் நீ ஹஜ் செய்யலாம். உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே அதிகத் தகுதியுடையது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 1852, 6699, 7315
ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் மரணித்து விட்டார்' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவர் சார்பில் அதை நிறைவேற்று' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2761, 6698
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா?' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்,அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953
சத்தியம் செய்தல்
தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம்.
எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை!
அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது.
என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம்.
சத்தியம் செய்வதற்கும் இஸ்லாத்தில் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் உள்ளன.
அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்
நாம் நமது கூற்றில் உண்மையாளர்களாக இருக்கிறோம் என் பதை நிரூபிப்பதற்காகத் தான் நாம் சத்தியம் செய்து கூறுகிறோம்.
நான் கூறுவது முற்றிலும் உண்மையே! நான் பொய் கூறினால் அல்லாஹ்வுக்கு அது தெரியும். இதற்கு அல்லாஹ்வையே சாட்சி யாக்குகிறேன் என்ற கருத்திலேயே நாம் சத்தியம் செய்கிறோம். நான் பொய் சொன்னால் அல்லாஹ் எனக்குத் தண்டனை வழங்கட்டும் என்ற கருத்தும் இதனுள் அடக்கமாகியுள்ளது.
எனவே நாம் எந்தச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும், எவர் மீதும் சத்தியம் செய்வது கடுமையான குற்றமாகும்.
'என் தாய் மேல் ஆணையாக நான் கூறுவது உண்மை' என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனது தாய்க்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்ததாகும். எனவே தான் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு எச்சரிக்கைகள் விட்டுள்ளனர்.
'யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 2679
'எச்சரிக்கை! யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். குரைஷிகள் தங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) 'உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3836
ஒரு மனிதர் 'கஃபாவின் மேல் ஆணையாக' என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கண்டவுடன் 'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது'என்று கூறினார்கள். மேலும் 'யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்' எனவும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா
நூல்: திர்மிதீ 1455
ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து '(முஸ்லிம்களாகிய) நீங்களும் இணை கற்பிக்கிறீர்கள்; கஅபாவின் மீது ஆணையாக' என்று கூறுகிறீர்கள்' எனக் கேட்டார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறாமல்) 'கஅபாவின் இறைவன் மீது ஆணையாக எனக் கூற வேண்டும்' என்று கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: கு(த்)தைலா (ரலி)
நூல்கள்: நஸயீ 3713, அஹ்மத் 25845
தாய் தந்தையர் மீதோ, கஅபாவின் மீதோ, குர்ஆன் மீதோ வேறு எதன் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் குற்றத்தில் அடங்கும்.
அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்ததற்கான பரிகாரம்
அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் ஒருவர் சத்தியம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்து விட வேண்டும்.
யாரேனும் சத்தியம் செய்யும் போது 'லாத், உஸ்ஸா மீது சத்தியமாக' எனக் கூறினால் உடனே'லாயிலாஹ இல்லல்லாஹ்' எனக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4860, 6107, 6310, 6650
சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்
மனிதன் செய்யும் சத்தியங்கள் இரண்டு வகைகளில் உள்ளன.
சில சத்தியங்கள் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியதாக இருக்கும்.
சில சத்தியங்கள் தகவல் தெரிவிப்பதாக அமைந்திருக்கும்.
முதல் வகையான சத்தியம் செய்தவர்கள் தமது வாக்குறுதி யையும், உறுதிமொழியையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்கு நான் இதைத் தருவேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நாளை வருவேன்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை மணந்து கொள்கிறேன்.
என்பன போன்ற சொற்களில் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியுள்ளது.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:225)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.
(அல்குர்ஆன் 5:89)
அல்லாஹ்வை முன்னிறுத்தி வாக்களித்ததால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றத் தவறினால் சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னார் இறந்து விட்டார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவர் திருடியதை நான் பார்த்தேன்.
என்பன போன்ற சத்தியங்களில் வாக்குறுதியோ, உறுதிமொழியோ இல்லை. இது போன்ற சத்தியங்கள் செய்யும் போது நாம் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.
தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது
ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் உலாவரும் சிலர் மக்களைத் தம் கைவசத்தில் அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இடுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படுவேன்' என்று உறுதி மொழி வாங்கி விடுகின்றனர்.
இது போல் சில இயக்கங்களின் தலைவர்கள் தமது தொண்டர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் எந்தக் கட்டளையிட்டாலும் அதைச் செய்து முடிப்பேன்' என்று உறுதி மொழி கொடுத்தவர்கள் பின்னர் இதைத் தவறு என்று உணர்வார்கள். ஆனாலும் சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் அதிலிருந்து மீளவே முடியாது என்று நினைத்து தொடர்ந்து அடிமைகளாக நீடித்து விடுவார்கள்.
அல்லாஹ்விடம் அளித்து உறுதிமொழியையே முறித்து விட்டு பரிகாரம் செய்யலாம் என்று இஸ்லாம் கூறுவதை இவர்கள் மறந்து விட்டனர்.
இதுபோல் சத்தியம் செய்து கொடுத்தால் அதை முறித்து விட வேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன் என்ற உறுதி மொழி நபிகள் நாயகத்துக்கு மட்டும் சொந்தமானதாகும்.
உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
(திருக்குர்ஆன் 48:10)
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.
(திருக்குர்ஆன் 48:18)
இந்த வசனங்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத்' எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.
போ ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இந்த வசனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத்' செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத்' செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத்' எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.
ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. 'உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள்' என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.
இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத்' எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார் கள். 'நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்; தப்புச் செய்ய மாட்டோம்'என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(திருக்குர்ஆன் 60:12)
இவை யாவும் நபிகள் நாயகம் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.
இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்கர் (ர), உமர் (ர),உஸ்மான் (ர), அ (ர) ஆகியோரிடம் வந்து 'நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம்'என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.
இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.
எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் 'நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்' என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.
நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்ப தென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.
ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.
இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.
இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காயங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.
இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.
எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத் தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ,இறைவனால் அனுப்பப்பட்ட தூதடரிமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும். 'அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696, 6700
அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதி மொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.
பொய்ச் சத்தியம் செய்தல்
வாக்குறுதி அளிக்கும் வகையில் இல்லாத சத்தியங்களில் பொய் கூறுவது கடுமையான குற்றமாகும்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 3:77)
அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! நீங்கள் அறிந்தால் அல்லாஹ்விடம் உள்ளதே உங்களுக்குச் சிறந்தது.(அல்குர்ஆன் 16:95)
அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் 58:14)
'அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைத் துன்புறுத்துதல், கொலை செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 6675, 6870, 6920
'தவறான முறையில் இன்னொரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக யாரேனும் சத்தியம் செய்தால் (மறுமையில்) அல்லாஹ் அவன் மீது கடுமையாக கோபம் கொண்ட நிலையில் தான் சந்திப்பான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 2357, 2417, 2516, 2667, 2670,
2673, 2677, 4550, 6659, 6676, 7183, 7445
இத்துடன் 3:77 வசனத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
'பாதையில் உபரியான நீர் தனக்குச் சொந்தமாக இருந்து வழிப்போக்கனுக்கு அதைத் தடுத்தவன்,ஒரு ஜனாதிபதியிடம் உலக ஆதாயத்துக்காக பைஅத் எனும் உறுதிமொழி எடுத்தவன், தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாகக் கூறி சத்தியம் செய்தவன் ஆகிய மூன்று நபர்களை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2535, 2672, 7212
தீர்மானம் இன்றி சத்தியம் செய்தல்
'அல்லாஹ்வின் மீது சத்தியமாக' என்ற சொல்லை வாய் தவறி ஒருவர் பயன்படுத்தினால் அது சத்தியத்தில் சேராது. மனதால் உறுதி செய்து அதைக் கூறினால் மட்டுமே சத்தியமாக ஆகும்.
வாய் தவறி கூறி விட்டால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை. அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:225)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)
எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட் டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2528, 5269
சத்தியம் செய்யும் போது நிச்சயமாக இதைச் செய்வேன் என்று கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். 'அல்லாஹ் நாடினால் நான் இதைச் செய்வேன்' என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காக பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 1451
இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும் அபூதாவூத் 2838,அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில்
'உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறை வேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அஹ்மத் 5108, 5814, 5830)
பிறருக்காகச் சத்தியம் செய்தல்
தனது வாக்குறுதியை வலியுறுத்துவதற்குத் தான் ஒருவர் சத்தியம் செய்ய வேண்டும். இன்னொருவரை வலியுறுத்துவதற்குச் சத்தியம் செய்ய முடியாது.
'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உனக்கு இதைத் தருவேன்' என்று கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது.
'அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ எனக்கு இதைத் தர வேண்டும்' எனக் கூறினால் அதற்கு அர்த்தம் இல்லை.
ஆனாலும் இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் தமக்கிடையே இவ்வாறு பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள் (ஸைனப்) தனது குழந்தை மரணத்தை நெருங்கி விட்டதைச் சொல்லி அனுப்பி உடனே நபிகள் நாயகம் (ஸல்) வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே; அவன் கொடுத்ததும் அவனுக்குரியதே; ஒவ்வொன்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட காலக்கெடு உண்டு. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும்' என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அந்த மகள் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும்'என்று சொல்லி அனுப்பினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். குழந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மடியில் வைக்கப்பட்டது. உடனே நபிகள் நாயகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கண்ட ஸஅது அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது இரக்க உணர்வாகும். தான் நாடிய அடியார்களின் உள்ளங்களில் அல்லாஹ் இதை வைக்கிறான். தனது அடியார்களில் இரக்கம் உள்ளவர்களுக்குத் தான் அல்லாஹ் இரக்கம் காட்டுவான்' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1284, 6655, 7377, 7448, 5655
குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்
ஒரு மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிரமம் அளிக்கும் காரியத்தைச் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் பாவமாகும். மாறாக அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்து விட வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் உள்ள மாவறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஒருவன் சத்தியம் செய்தால் இதனால் குடும்பத்தினர் கஷ்டம் அடைவார்கள். இது போன்ற சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை முறித்து விட வேண்டும். சத்தியத்திற்கான பரிகாரத்தையும் செய்து விட வேண்டும்.
'ஒரு மனிதன் தனது குடும்பத்தினருக்குச் சிரமம் அளிப்பதைச் சத்தியம் செய்வது, அதை முறித்து விட்டு பரிகாரம் செய்வதை விட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6625, 6626
தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்
எனது நாணயத்தின் மீது சத்தியமாக! எனது ஒழுக்கத்தின் மீது சத்தியமாக! எனது நற்பண்புகள் மீது சத்தியமாக என்றெல்லாம் சிலர் சத்தியம் செய்வதுண்டு.
அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பதிலிருந்தே இது கூடாது என்று அறிந்து கொள்ளலாம்; என்றாலும் இது பற்றி நேரடியாகவே தடைகளும் வந்துள்ளன.
'நாணயத்தின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அபூதாவூத் 2831, அஹ்மத் 21902
பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்
தனது குடும்ப உறுப்பினருக்கோ, நண்பருக்கோ உதவிகள் செய்து வந்தவர்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது இனிமேல் உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.
ஆயிஷா(ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர். இவருக்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் உதவி செய்து வந்தனர்.தன் மகள் மீது அவர் அவதூறுகூறியதால் இனிமேல் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவெடுத்தார்கள். இதைக் கண்டித்து பின்வரும் 24:22 வசனத்தை அல்லாஹ் அருளினான்.
நூல்: புகாரி 2661, 4141, 4750, 6679
'உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். 'அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்' என்று விரும்ப மாட்டீர்களா?அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 24:22)
இதே கருத்தைப் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறுகிறான்.
நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:224)
மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்
இஸ்லாம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் சத்தியம் செய்கிறார். அதை அவர் நிறைவேற்ற முடியாது சிரமப்படுகிறார். நாம் அவருக்கு உதவினால் அவர் செய்த சத்தியத்தில் உண்மையாளராக ஆவார். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவரது சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது அவசியமாகும்.
ஜனாஸாவைப் பின் தொடர்தல், நோயாளியை விசாரித்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்,(பிறரது) சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல், தும்மியவருக்காக மறுமொழி கூறுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல் ஆகிய ஏழு விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235
வியாபாரத்தில் சத்தியம் செய்தல்
வியாபாரிகள் தான் மனிதர்களிலேயே அதிகம் சத்தியம் செய்பவர்களாக உள்ளனர். தாங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட சத்தியம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.
'சத்தியம் செய்தல் சரக்குகளை விற்க உதவும். ஆனால் பர(க்)கத்தை அழித்து விடும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2087
சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்
ஒருவன் கையில், அல்லது கட்டுப்பாட்டில் ஒரு பொருள் உள்ளது. அப்பொருளை இன்னொருவன் உரிமை கொண்டாடி வழக்குக் கொண்டு வருகிறான்.
இது போன்ற சந்தர்ப்பத்தில் யார் வழக்கு கொண்டு வருகிறானோ அவன் தான் அப்பொருள் தன்னுடையது என்பதற்கான ஆதாரங் களைக் கொண்டு வர வேண்டும். பொருளைக் கைவசம் வைத்துள் ளவன் ஆதாரம் கொண்டு வரத் தேவையில்லை. அப்பொருள் அவனது கைவசம் உள்ளதே அவனுக்குரிய ஆதாரமாக உள்ளது.
வழக்குத் தொடுத்தவன் ஆதாரத்தைக் கொண்டு வந்தால் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படும். அவனால் எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து நிரூபிக்க இயலவில்லை என்றால் யாருடைய கையில் அப்பொருள் உள்ளதோ அவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தன்னுடையது எனக் கூற வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் அப்பொருள் அவனுடையது என்று தீர்ப்பளிக்கப்படும்.
பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சத்தியம் செய்ய மறுத்தால் அப்பொருள் வழக்குத் தொடுத்தவனைச் சேரும்.
'என்னால் ஆதாரம் காட்ட இயலாது; வேண்டுமானால் சத்தியம் செய்கிறேன்' என்று வழக்குத் தொடுத்தவன் கூற முடியாது. பொருளைக் கைவசம் வைத்திருப்பவனுக்கு மட்டுமே சத்தியம் செய்தல் உரியதாகும். வழக்குத் தொடுத்தவன் ஆதாரம் காட்டி விட்டால் அதன் பின்னர் பொருளை வைத்திருப்பவன் சத்தியம் செய்வதாகக் கூற முடியாது.
எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. அந்த நிலத்தை என்னிடம் தர அவர் மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உன்னிடம் ஆதாரம் ஏதும் இருக்கிறதா' என்று என்னிடம் கேட்டார்கள். நான் 'இல்லை' என்று கூறினேன். 'அப்படியானால் நீ சத்தியம் செய்' என்று யூதரிடம் கூறினார்கள். அப்போது நான் 'இவன் பொய்ச் சத்தியம் செய்து எனது சொத்தை எடுத்துக் கொள்வான்' என்று கூறினேன். அப்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங் களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)
அறிவிப்பவர்: அஷ்அத் (ரலி)
நூல்: புகாரி 2417, 2667, 2516, 2670
ஒரு பொருள் இருவரின் கைவசத்திலும் இருந்தால், அல்லது இருவரில் யாருடைய கைவசத்திலும் இல்லாமல் இருந்தால், இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர் சத்தியம் செய்ய வேண்டும்.
சத்தியம் செய்து விட்டால் அப்பொருள் அவரைச் சேரும். சத்தியம் செய்ய மறுத்தால் மற்றவர் சத்தியம் செய்து அப்பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு கூட்டத்தினர் தொடுத்த வழக்கின் போது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் கேட்டனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சத்தியம் செய்ய விரைந்து வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் சத்தியம் செய்ய வேண்டும் என்பதற்கு சீட்டுக் குலுக்கித் தேர்வு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2674
ஒரு பொருளுக்கு இருவர் உரிமை கொண்டாடி, இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் சத்தியம் செய்யாமல் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.
ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. அதை இருவருக்கும் சமமாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: அபூதாவூத் 3134
நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது
நாம் கூறுவது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் மற்றவருக்கு வரும் போது சத்தியம் செய்து கூறுவோம். இதனால் நாம் கூறுவது உண்மை என்று அவர் நம்புவார்.
நாம் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்றவர்கள் சந்தேகப்படும் போதும் சத்தியம் செய்து கூறுவோம்.
இறை நம்பிக்கையில்லாதவர்களிடமும் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவர்களிடமும் நாம் சத்தியம் செய்து கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள். நாம் சத்தியம் செய்வதும், செய்யாமல் கூறுவதும் அவர்களைப் பொருத்த வரை சமமானதே.
இது போன்றவர்களிடம் நாம் சத்தியம் செய்து கூறக் கூடாது.
'உன் சகா உன்னை உண்மைப்படுத்துவான் எனும் போது தான் சத்தியம் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3121
சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது
சிலர் தங்களைக் காத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். சத்தியத்தைத் தங்களின் கேடய மாக ஆக்கிக் கொள்வார்கள். இது கடுமையான குற்றமாகும்.
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.
(அல்குர்ஆன் 16:58)
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.
(அல்குர்ஆன் 63:2)
சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:225)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாள னாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 16:91)
உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
(அல்குர்அன் 16:92)
இல்லறத்தில் சந்தேகம்
ஒருவன் ஒரு பெண்ணுடைய ஒழுக்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினால் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
(அல்குர்அன் 24:4)
ஆனால் கணவன் தன் மனைவியின் மீது குற்றம் சாட்டினால் அவன் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது 'நான் பொய் சொன்னால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறினால் அவன் அவதூறு கூறியவனாக ஆக மாட்டான்.
இதே போல் அவனது மனைவியும் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது 'நான் கூறுவது பொய் என்றால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' எனக் கூற வேண்டும்.
இவ்வாறு இருவரும் கூறிவிட்டால் அவ்விருவருக்கும் இடையே உள்ள உறவு அடியோடு நீங்கி விடும். அதன் பின்னர் சேர்ந்து வாழ முடியாது.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர்,தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். 'தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்' என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). 'அவனே பொய்யன்' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சிய மளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். 'அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'என்று ஐந்தாவதாக (கூறுவாள்).
(அல்குர்ஆன் 24:6-9)
சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறிக்கலாம்
ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)
நூல்: புகாரி 6622
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம்.'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளை யிட்டனர். 'அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே' என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் ஏதாவது சத்தியம் செய்த பின் அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 6623
சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம்
சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.
உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.
(அல்குர்ஆன் 66:2)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 5:89)
நமது சத்தியங்களையும் நேர்ச்சைகளையும் சரியான முறையில் புரிந்து நடைமுறைப் படுத்தும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!
Download this Book in PDF
Comments