இறைநம்பிக்கையா? மூடநம்பிக்கையா?


இஸ்மாயீல் சலபியின் அறிவீனத்துக்கு மறுப்பு


இறைநம்பிக்கையாமூடநம்பிக்கையா?

நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்தான். இந்த சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. குர்ஆனிலிருந்தும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்தும் சான்றுகளைக் கொண்டு இது சரியான சம்பவமாக இருக்க முடியாது என்பதை மக்களுக்கு நாம் விளக்கி இருக்கின்றோம்.
ஆனால் இஸ்மாயீல் சலஃபீ என்பவர் குர்ஆன் சுன்னா என்ற பெயரில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களைக் கூறி சமுதாயத்தில் மூட நம்பிக்கைகள் வளர அரும்பாடுபட்டு வருகிறார். நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் இந்தக் கட்டுக்கதையை நம்புவது தான் இறை நம்பிக்கை எனக் கூறுகிறார்.
சூனியம் தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு சகோதரர் பீஜே அவர்கள் சரியான விளக்கத்தைக் கொடுத்து இவருடைய அறியாமையைத் தெளிவுபடுத்தியுள்ளார். சகோதரர் பீஜே அவர்களின் பல வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் இன்னும் இவரால் பதில் சொல்ல முடியவில்லை.
இந்நிலையில் அல்குர்ஆனும் சுன்னாவும் முரண்படுமாஎன்ற தலைப்பில் சூனியம் என்ற மூடநம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்தக் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

இஸ்மாயீல் என்பவரின் வாதம் 1அறிஞர்கள் யாராவது கூறினார்களா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று எதிரிகள் அவதூறு கூறினார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அநியாயக்காரர்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
அல்குர்ஆன் (25 : 8)
"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதை நாம் நன்கு அறிவோம்.
அல்குர்ஆன் (17 : 47)
இதனடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று நம்புவது திருக்குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கை என நாம் கூறி இருந்தோம்.
இதற்கு பதிலளிக்க முன்வந்த இஸ்மாயீல் சலஃபி இந்த வசனங்களை நாம் புரிந்தது போன்ற அறிஞர்கள் யாரும் புரியவில்லை என்றொரு வாதத்தை வைக்கின்றார்.
அநியாயக்காரர்கள் தான் நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். எனவே,நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸை ஏற்க முடியாது என்றனர். வழிகேடர்களான முஃதஸிலாக்கள் இப்படிக் கூறினாலும் நல்ல வழி நடந்த நல்லறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த ஆயத்தும்ஹதீஸும் முரண்படுவதாகத் தென்படவும் இல்லை.

நமது பதில்

ஒரு வசனத்தின் கருத்தை அந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்தும் பிற வசனங்களை வைத்தும் தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அறிஞர்கள் புரிந்தது போன்று தான் குர்ஆனை புரிய வேண்டும் என்ற வாதம் தவறானது. இது கோமாளித்தனமனது. ஆதாரமற்றது. இதை நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.
எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இவர் கூறுவது உண்மைக்கு மாற்றமாக இருப்பதால் நாம் புரிந்தது போன்று இந்த வசனங்களுக்கு விளக்கம் கொடுத்த சில அறிஞர்களின் கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூபக்ர் ராஸீ அல்ஜஸ்ஸாஸ் என்பவர் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்த மாபெரும் அறிஞராவார். ஹனஃபீ மத்ஹப் அறிஞர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள இவர் ஹிஜ்ரீ 305 ல் பிறந்து 370ல் மரணிக்கின்றார்.
இவர் மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்று உறுதியாக மறுக்கின்றார். அவருடைய கூற்றை கீழே தருகிறோம்.
أحكام القرآن للجصاص ت قمحاوي (1 / 60):
بِالْقَدَحِ فَتَقَطَّعَ الْحَجَرُ قِطْعَةً قِطْعَةً فَغَرِقَتْ السَّاحِرَةُ فَيُصَدِّقُونَهُ وَمَنْ صَدَّقَ هَذَا فَلَيْسَ يَعْرِفُ النُّبُوَّةَ ولا يأمن أَنْ تَكُونَ مُعْجِزَاتُ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ مِنْ هَذَا النَّوْعِ وَأَنَّهُمْ كَانُوا سَحَرَةً وَقَالَ اللَّهُ تعالى وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتى وَقَدْ أَجَازُوا مِنْ فِعْلِ السَّاحِرِ مَا هُوَ أَطَمُّ مِنْ هَذَا وَأَفْظَعُ وَذَلِكَ أَنَّهُمْ زَعَمُوا أَنَّ النَّبِيَّ عَلَيْهِ السَّلَامُ سُحِرَ وَأَنَّ السِّحْرَ عَمِلَ فِيهِ حَتَّى قَالَ فِيهِ إنَّهُ يُتَخَيَّلُ لِي أَنِّي أَقُولُ الشَّيْءَ وَأَفْعَلُهُ وَلَمْ أَقُلْهُ وَلَمْ أَفْعَلْهُ وَأَنَّ امْرَأَةً يَهُودِيَّةً سَحَرْته فِي جُفِّ طَلْعَةٍ وَمُشْطٍ وَمُشَاقَةٍ حَتَّى أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَهُ أَنَّهَا سَحَرَتْهُ فِي جُفِّ طَلْعَةٍ وَهُوَ تَحْتَ رَاعُوفَةِ الْبِئْرِ فَاسْتُخْرِجَ وَزَالَ عَنْ النَّبِيِّ عَلَيْهِ السَّلَامُ ذَلِكَ الْعَارِضُ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مُكَذِّبًا لِلْكُفَّارِ فِيمَا ادَّعَوْهُ من ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ جَلَّ مِنْ قَائِلٍ وَقالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُوراً ومثل هذه الأخبار من وضع الملحدين تعليا بالحشوا الطَّغَامِ وَاسْتِجْرَارًا لَهُمْ إلَى الْقَوْلِ بِإِبْطَالِ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَالْقَدْحِ فِيهَا وَأَنَّهُ لَا فَرْقَ بَيْنَ مُعْجِزَات الْأَنْبِيَاءِ وَفِعْلِ السَّحَرَةِ وَأَنَّ جَمِيعَهُ مِنْ نَوْعٍ وَاحِدٍ وَالْعَجَبُ مِمَّنْ يَجْمَعُ بَيْنَ تَصْدِيقِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَإِثْبَاتِ مُعْجِزَاتِهِمْ وَبَيْنَ التَّصْدِيقِ بِمِثْلِ هَذَا مِنْ فِعْلِ السَّحَرَةِ مَعَ قَوْله تَعَالَى وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتى فَصَدَّقَ هَؤُلَاءِ مَنْ كَذَّبَهُ اللَّهُ وَأَخْبَرَ بِبُطْلَانِ دَعْوَاهُ وَانْتِحَالِهِ
இவ்வாறு (சூனியக்காரர்களால் எதார்த்தத்திற்கு மாற்றமான காரியங்களைச் செய்ய முடியும் என்று) நம்பக்கூடியவர் தூதுத்துவத்தைச் நுபுவ்வத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மேலும் நபிமார்கள் செய்த அற்புதங்களும் சூனியமாகும் என்ற கருத்து இதனால் ஏற்படும். நபிமார்கள் சூனியக்காரர்களாக இருந்தார்கள் என்றும் நம்ப வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைவிடவும் பாரதூரமான வேலையை சூனியக்காரனால் செய்ய முடியும் என்று மோசமான கருத்தைச் சிலர் கூறுகின்றனர். அது என்னவென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகவும் செய்யாததைச் செய்ததாகவும் எண்ணும் அளவுக்கு அந்த சூனியம் அவர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு யூதப் பெண் சிக்குமுடியிலும் சீப்பிலும் பேரீச்ச மரப் பாளையிலும் நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்தாள். ஜிப்ரீல் வந்து அதைத் தெரியப்படுத்திய உடன் அது அகற்றப்பட்டு நபி (ஸல்) அவர்கள் குணமானார்கள் என்று நம்புகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு இது போன்று சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று இறை மறுப்பாளர்கள் வாதிட்ட போது அதை மறுக்கும் விதமாக நீங்கள் சூனியக்கார மனிதனைத் தான் பின்பற்றுகிறீர்கள் என அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் கூறினான்.
இது போன்ற செய்திகள் தூதுத்துவத்தில் குறையை ஏற்படுத்துவதற்காகவும் நபிமார்கள் செய்த அற்புதங்களை மறுப்பதற்காகவும் நபிமார்கள் செய்த அற்புதங்களுக்கும் சூனியக்காரர்கள் செய்த செயலுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான் என நம்ப வைப்பதற்காகவும் இறை நிராகரிப்பாளர்கள் இட்டுக்கட்டிய செய்திகளாகும்.
நபிமார்கள் செய்த அற்புதங்கள் உண்மையானவை என்று நம்பக்கூடியவர்கள் சூனியக்காரனாலும் இதுபோன்று செய்ய முடியும் என்று நம்புவது ஆச்சரியமாக உள்ளது. அல்லாஹ் எவர்களின் வாதத்தை தவறானது என்று கூறி அவர்கள் பொய்யர்கள் என்று தெரிவித்தானோ அத்தகையவர்களை இவர்கள் உண்மைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். சூனியக்காரன் எங்கு வந்தாலும் அவன் வெற்றி பெற முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த தகவல் மூலம் இஸ்மாயீல் சலபி கூறுவது பச்சைப் பொய் என்பது உறுதியாகிறது. இந்த வசனத்தின் கருத்து இது தான் என்று ஒருவரும் சொல்லவில்லை. பீஜே தான் முதன் முதலில் சொல்லி இருக்கிறார் என்ற இவரது புரட்டு வாதம் இதன் மூலம் முறியடிக்கப்படுகிறது. இவருக்கு வேதமாகச் சித்தரித்து ஓதிக் கொடுக்கப்பட்ட நூல்களைத் தவிர மற்ற நூல்களை இவர் வாசித்ததில்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகின்றது.
அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ் மட்டும் தான் நாம் விளங்கியது போல் இந்த வசனத்தை விளங்கினாரா என்றால் இப்படி விளங்கியவர்களுக்கு ஒரு பட்டியலே உள்ளது. இந்தத் தகவலை இமாம் நவவீ அவர்கள் அல்மஜ்மூஉ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
அல்லாஹ்வின் வேதத்திற்கு எதிராக உள்ள செய்திகளை மறுக்கும் இத்தகைய அறிஞர்களுக்கு இஸ்மாயீல் சலஃபீ போன்றோர் முஃதிஸிலாக்கள் என்று பட்டம் சூட்டி ஓதுக்கி விடுகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை உண்மையை சைத்தான் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளோம். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

இஸ்மாயீல் வாதம் 2 எதிரிகள் செய்த விமர்சனம் உண்மையானதா?

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்கு நாம் ஆதாரமாக்க் காட்டியுள்ள வசனத்துக்கு இஸ்மாயீல் சலஃபி தவறான விளக்கத்தைக் கொடுத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்பதற்கு அதையே ஆதாரமாக ஆக்க முயற்சிக்கின்றார். இவர் பின்வருமாறு தன் வாதத்தை முன்வைக்கின்றார்.
அநியாயக்காரர்கள் நபி (ஸல்) அவர்களை உங்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்தான் என்பதைக் குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கின்றது.
அநியாயக்காரர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர் என்று கூறினார்கள் என்பதற்காக நபி(ஸல்) அவர்களை மனிதன் என்று கூறும் அனைவரும் அநியாயக்காரர்களாகி விடுவார்களாஇந்தக் காபிர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து மனிதர் என்று கூறிய கூற்று சரியானது. ஆனால் அவரது தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே இப்படிக் கூறினர். எனவே தண்டிக்கப்படுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்ற எதிரிகளின் விமர்சனம் உண்மையாக இருப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்ற விமர்சனமும் உண்மையானது என்று இஸ்மாயீல் வாதிடுகின்றார்.

நமது பதில் 2

சூனிய நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக எதிரிகள் கூறிய அவதூறுகளை உண்மையாக்கும் அளவுக்கு இவர் சென்றுள்ளார். இவர் தன்னுடைய கருத்துக்கு ஆதாரமாக காட்டும் வசனங்களை நன்கு சிந்தித்தால் எதிரிகள் உண்மை சொல்லவில்லை. பொய்யான கருத்தையே கூறினர் என்பதை அறியலாம்.
நபிகள் நாயகத்தை எதிரிகள் மனிதர்கள் என்று எந்தக் கருத்தில் சொன்னார்களோ அந்தக் கருத்தில் அவர்கள் பொய்யர்கள் என்று தான் குர்ஆன் கூறுகிறது. இவர் உங்களைப் போன்ற மனிதர் என்று அவர்கள் ஏன் சொன்னார்கள்? எதை நிலைநாட்ட இப்படிச் சொன்னார்கள் என்பதை இஸ்மாயீல் சிந்திக்க வேண்டாமா? இவர் உங்களைப் போன்ற மனிதர் என்பதால் இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வராது என்று சொல்வதற்காகவே இந்த வாத்த்தை எடுத்து வைத்தார்கள். இதைக் கூட புரிந்து கொள்ளும் திராணியற்றவராக இவர் காட்சி தருகிறார்.
اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ (1) مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ (2) لَاهِيَةً قُلُوبُهُمْ وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ (3) 21
"இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
அல்குர்ஆன் (21 : 3)
நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்தது. இது போன்று வேறு யாருக்கும் இறைச் செய்தி வரவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையே உள்ள இந்த வித்தியாசத்தை எதிரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எல்லா விசயங்களிலும் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்றவர்கள் என்று கூறுவது தவறானது. வஹீ வருகின்ற விசயத்தில் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை. மற்ற விசயங்களில் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்று கூறுவதே சரியானது.
இறைச் செய்தி வருகின்ற விசயம் உட்பட அனைத்து விசயங்களிலும் முஹம்மது நம்மைப் போன்ற மனிதர் என்று எதிரிகள் கூறினர். இந்தக் கூற்று உண்மைக்கு மாற்றமானது என்பதால் இவ்வாறு கூறியவர்களை அல்லாஹ் அநியாயக்காரர்கள் என்று குறிப்பிடுகிறான்.
மேலுள்ள வசனம் உட்பட பின்வரும் வசனங்களும் இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يُرِيدُ أَنْ يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَنْزَلَ مَلَائِكَةً مَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ (24) إِنْ هُوَ إِلَّا رَجُلٌ بِهِ جِنَّةٌ فَتَرَبَّصُوا بِهِ حَتَّى حِينٍ (25)المؤمنون: 24، 25,23
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.
அல்குர்ஆன் (23 : 24)
{وَقَالَ الْمَلَأُ مِنْ قَوْمِهِ الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِلِقَاءِ الْآخِرَةِ وَأَتْرَفْنَاهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ (33) وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ (34)} المؤمنون: 33، 3423
"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்துமறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோஇவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (23 : 33)
قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنْزَلَ الرَّحْمَنُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ (15)} يس: 1536
"நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று (அவ்வூரார்) கூறினர்
அல்குர்ஆன் (36 : 15)
பொதுவாக மனிதர்களுக்கு இறைச் செய்தி வராது. இந்த விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்றவர் இல்லை. இந்த விசயத்தில் அவர்கள் மற்ற மனிதர்களை விட்டும் வேறுபடுவதுடன் மற்ற எல்லா விசயங்களிலும் அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்றவர். இவ்வாறு கூறுவது தான் உண்மையான கூற்றாகும். இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ (6) 41
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது.
அல்குர்ஆன் (41 : 6)
எனவே நபி (ஸல்) அவர்கள் அனைத்து விசயங்களிலும் மற்ற மனிதர்களைப் போன்றவர் என்ற எதிரிகளின் விமர்சனம் பொய்யானதாகும். இதை ஆதாரமாகக் கொண்டு எதிரிகள் தவறான நோக்கத்தில் உண்மையான கூற்றைக் கூறினர் என்று வாதிடுவது தவறாகும்.
எதிரிகளின் நோக்கம் தவறாக இருந்ததைப் போன்று அவர்கள் கூறிய கூற்றும் தவறானது என்பதையே மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
குர்ஆனுடைய தெளிவான வாக்குமூலம்
நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று எதிரிகள் கூறியதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுவிட்டு அடுத்த வரியில் இது பொய்யான விமர்சனம் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறான்.
وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (8) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (9)25
"சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.  (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.
அல்குர்ஆன் (25 : 9)
نَحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَى إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (47) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48) وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا (49)17
"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.
"உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்'' என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் வழியை அடைய இயலாது. "நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
அல்குர்ஆன் (17 : 47)
"உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்'' என்று கவனிப்பீராக! என்று இறைவன் கேள்வி கேட்டு நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுவது நபியை இழிபடுத்தும் செயல். இது பொய்யான அவதூறு. இது நபிக்கு சற்றும் தகுதியில்லாத உதாரணம் என்றும் தெளிவுபடுத்துகிறான்.
எதிரிகள் நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று மட்டும் கூறவில்லை. பைத்தியக்காரன் என்றும் சூனியக்காரன் என்றும் கவிஞன் என்றும் கூறினார்கள்.
இந்த எதிரிகளின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) நபி (ஸல்) அவர்களை பைத்தியம் என்று கூற முடியுமாசூனியக்காரர் என்று கூறலாமாகவிஞன் என்று கூறலாமா?
நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று கூறும் இஸ்மாயீல் போன்றவர்கள் மக்கத்து காபிர்கள் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதைப் போன்று இழிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று கூறுபவன் அநியாயக்காரன் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
ஒரு கருத்தைச் சொல்லக்கூடியவனை அநியாயக்காரன் என்று சொன்னால் அந்தக் கருத்து தவறான கருத்து என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
கடவுள் இல்லை என்று சொல்பவன் அநியாயக்காரன் என்று கூறினால் கடவுள் இல்லை என்ற கருத்து தவறானது என்று தானே அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த அடிப்படையான அறிவு இஸ்மாயீலுக்கு இல்லமால் போய்விட்டது.
மூசா நபிக்கு சூனியம் செய்யப்பட்டதா?
எதிரிகள் நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று கூறியதைப் போன்று மூசா நபியின் எதிரிகள் மூசா நபியை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று கூறினர்.
وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا (101)17
"மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
அல்குர்ஆன் (17 : 101)
நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்ற எதிரியின் அவதூறை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறக்கூடியவர்கள் ஃபிர்அவ்னின் கூற்றை ஏற்று மூசா நபி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று கூறுவார்களா?

இஸ்மாயீல் வாதம் 3 விதி தொடர்பான வசனம் ஆதாரமாகுமா?

எதிரிகள் தவறான நோக்கத்தில் சரியான கூற்றைக் கூறினார்கள் என்பதை நிறுவ இஸ்மாயீல் பின்வருமாறு கூறுகிறார்.
மக்கத்து இணைவைப்பாளர்களில் சிலர் கழா கத்ரை தமது இணை வைப்புக்குச் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தினர். அல்லாஹ் நாடியிருந்தால் நாம் இணைவைத்திருக்க மாட்டோம். ஹலாலானவற்றை ஹராமாக்கியிருக்க மாட்டோம் என்று கூறினர். அவர்கள் கூறிய கூற்று சரியானதே! அல்லாஹ் நாடியிருந்தால் இணைவைத்திருக்க மாட்டார்கள். எனினும் இந்த வார்த்தையைத் தவறான நோக்கத்தில் அவர்கள் பயன்படுத்தியதால் அவர்களைக் குர்ஆன் பொய்யர்கள் என்கின்றது.
என்று இவர் வாதிடுகிறார்.

நமது பதில்

"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும்எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 148)
ஒருவன் நேர்வழி பெறுவதற்கும் வழிகெடுவதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறக்கூடிய வசனங்கள் இருப்பதைப் போன்று  இதற்கு மாற்றமாக நேர்வழியில் செல்வதற்கும் வழிகெடுவதற்கும் அவரவரே பொறுப்பு என்ற கருத்தைத் தரக்கூடிய வசனங்களும் இருக்கின்றன.
விதி தொடர்பான இவ்விரு வகையான வசனங்களுக்கு யாராலும் ஒரு போதும் இணைத்து விளக்கம் கூற முடியாது. முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் இதற்கான விளக்கத்தை மறுமையில் தான் அறிந்து கொள்ள முடியும்.
நிலமை இவ்வாறிருக்க அல்லாஹ் நாடினால் நாங்கள் இணைவைத்திருக்க மாட்டோம் என்று எதிரிகள் கூறியது சரிதான் என எவ்வாறு அடித்துச் சொல்ல முடியும். இதற்கு மாற்றமான கருத்தை தரக்கூடிய வசனங்களை கவனித்தால் இது தவறான கூற்றாகத் தெரியுமே?
எதிரிகள் உண்மையைக் கூறினார்கள் என்பதற்கு இஸ்மாயீல் சலஃபீ மேற்கண்ட வசனத்தை ஆதாரமாக காட்டுகிறார். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் இதே வசனத்தில் எதிரிகள் கூறியது தவறான கருத்து என்று தான் சொல்லப்படுகின்றது.
"உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக! என்ற வாசகம் எதிரிகள் கூறியது சரியான கூற்றல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது.
எனவே மனிதர்கள் வழிகெடுவதற்கு அவரவரே பொறுப்பு என்று கூறும் வசனங்களில் மேற்கண்ட வசனமும் ஒன்றாக அமைந்துள்ளது. இதைக் கொண்டு எதிரிகள் உண்மையைக் கூறினார்கள் என்று வாதிட முடியாது.

இஸ்மாயீல் வாதம் 4 முரண்பாட்டை ஏற்படுத்துவது பதிலாகுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுவதைப் போன்று நமக்குத் தோன்றினால் அவற்றுக்கிடையே இணைத்து விளக்கம் கூற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் குர்ஆனில் ஒரு வசனம் இன்னொரு வசனத்துடன் முரண்படுவதைப் போல் நமக்குத் தெரியும் போது அவற்றுக்கிடையே இணைத்து விளக்கம் கூற முயற்சிக்கிறோம். இந்த அடிப்படையில் ஹதீஸ்களையும் கையாள வேண்டும் என்று இஸ்மாயீல் சலஃபீ கூறுகிறார்.
ஒரு வசனம் மற்ற  வசனத்துக்கு முரண்பாடாக இருப்பதைப் போன்று தெரியும். ஆனால் அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லை என்று கூறி இதற்கு  10 உதாரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கூறி இந்த வசனங்களை இவ்வாறு முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

நமது பதில்

இவர் அளித்துள்ள விளக்கங்கள் சரியானவையா என்பது தனி விசயம். இவர் விளக்கம் என்ற பெயரில் 64 : 16 ஆவது வசனத்தையும் 18 : 20 ஆவது வசனத்தையும் மாற்றப்பட்டு விட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூறியுள்ளார்.
இவர் ஹதீஸ்களுக்கு ஆதாரமின்றி விளக்கம் கூறுவது போன்று குர்ஆனுக்கும் தவறான விளக்கம் அளித்து இவ்விரு வசனங்களையும் தள்ளுபடி செய்து தான் மிச்சம். இந்த லட்சணத்தில் விளக்கம்கொடுத்து ஹதீஸ்களை பாதுகாக்கப் போகிறாராம்.
நம்மைப் பொறுத்தவரை குர்ஆனுடைய ஒரு வசனம் மற்றொரு வசனத்துடன் முரண்படுவதைப் போன்று தெரிந்தால் அந்த இரு வசனங்களையும் இணைத்து சரியான அடிப்படையில் விளக்கம் கூற முடியும். விதி தொடர்பான வசனங்களைத் தவிர மற்ற எல்லா வசனங்களுக்கும் இவ்வாறு நம்மால் சரியான விளக்கத்தைக் கொடுத்து உடன்பாடு காண முடியும்.
ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதுவதைப் போன்ற நிலை ஏற்பட்டால் அப்போதும் இதே வழிமுறையைக்கடைப்பிடிக்க நாம் முயற்சிப்போம். அந்த ஹதீசுக்கும் குர்ஆன் வசனத்துக்கும் இடையில் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள முடியுமானால் அப்போது இணைத்து விளக்கம் கூறுகிறோம். இதனடிப்படையில் பல ஹதீஸ்களுக்கு நாம் விளக்கம் கூறி அதனை ஏற்று இருக்கின்றோம்.
ஆனால் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக முரண்படுகின்றன. அந்த ஹதீஸ்களையும் அதற்கு எதிராக அமைந்த குர்ஆன் வசனங்களையும் இணைத்து விளக்கம் கூற முடியாத அளவுக்கு அந்த ஹதீஸ்கள் பகிரங்கமாக குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் என்ற பெயரில் எதைக் கூறினாலும் அந்த விளக்கம் இன்னும் ஏராளமான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் நகைப்பிற்குரியதாகவும் மற்ற ஆதாரங்களுடன் மோதக் கூடியதாகவுமே இருக்கின்றது. இது போன்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்கிறோம்.
சுருங்கச் சொல்வதென்றால் குர்ஆன் வசனம் மற்ற வசனத்துடன் முரண்படுவதைப் போன்று தெரிந்தால் அதற்கு சரியான விளக்கத்தைக் கொடுத்து முரண்பாடில்லாமல் அனைவராலும் விளங்கிக்கொள்ள முடியும். எனவே குர்ஆனில் முரண்பாடில்லை.
ஆனால் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் பகிரங்கமாக மோதுகின்றது. எந்த விளக்கத்தைக் கொடுத்தாலும் இந்த செய்திக்கும் குர்ஆனுக்கும் இடையில் உடன்பாடு காண முடியவில்லை. எனவே இது போன்ற ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.   
முரண்படுவதைப் போன்ற வசனங்கள் குர்ஆனிலும் இருக்கின்றதே என்று இஸ்மாயீல் தேவையற்ற கேள்வியை எழுப்பாமல் நாம் கேட்ட கேள்விகளுக்கும் ஆதாரங்களுக்கும் சரியான விளக்கத்தைக்கொடுக்க வேண்டும்.
இதைச் செய்யாமல் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போன்று அமைந்த 1000 வசனங்களை குர்ஆனில் எடுத்துக் காட்டினாலும் அவர் தன் நிலைபாட்டை நிலைநாட்ட முடியாது. 
அப்பாஸ் அலி 
அது குறித்து முழுமையாக அறிய கீழ்க்காணும் ஆக்கங்களைக் காணவும்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்