விலை உயர்வைத் தடுக்க என்ன வழி



விலை உயர்வைத் தடுக்க என்ன வழி


இந்தியாவில்
குறிப்பாக தமிழ்நாட்டில் விலைவாசி வரையறையில்லாமல் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த விலைவாசி ஏற்றத்தைப் பொருத்தவரை எந்தப் பொருளுக்கும் விதிவிலக்கு இல்லை. இதற்குரிய காரணம் தான் என்னஇதைத் தடுக்க பெரிய அளவில் TNTJ போராட்டத்தை அறிவிக்கலாமே..!
-முஹம்மது நலீம்புதுமடம்
பதில்:
பொருள்களின் விலை ஏற்றத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. அனைத்தையும்  ஒரே மாதிரியான நடவடிக்கை  மூலம் சரி செய்ய முடியாது.
ஒரு பொருள் தேவையை விட  பல மடங்கு அதிகமாக உற்பத்தியாகும் போது அப்பொருளின் விலை சரிந்து  விடுவதையும்தேவையை விட  குறைவாக உற்பத்தியாகும் போது அதற்கேற்ப விலை அதிகரிப்பதையும்  நாம் காண்கிறோம்.
உற்பத்திக் குறைவினால் ஏறிய விலைவாசியைக் குறைத்திட  உற்பத்தியை அதிகரிக்கச்  செய்வது தான் ஒரே வழியாகும்.
பொருள்கள் தாறுமாறாக உற்பத்தியாகி உற்பத்தியாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டால் அந்தப் பொருளின் உற்பத்தியைக் குறைக்க தேவையான  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். 
அல்லது குறைந்த  உற்பத்தி காரணமாக விலை உயர்ந்தால் உலகம் முழுவதும் இந்த நிலை இருக்காது. எனவே எந்தப் பொருளின் விலை உயர்ந்து விட்டதோ அந்தப் பொருளை இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை நீக்கினால் விலை உயர்வு கட்டுக்குள்  வந்து விடும்.
அது போல் உற்பத்தி அதிகமாகும் போது உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டால் உடனே ஏற்றுமதிக்கான தட்டுப்பாடுகளைத் தளர்த்தி தேவையுள்ள நாடுகளுக்கு  அனுப்பினால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இதை எந்த அரசாங்கமும்  செய்வதில்லை. இவர்களின்  ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை பல காலத்துக்கு  ஒரே மாதிரியாக உள்ளதாலும்நாட்டு மக்கள் நலனுக்காக  அன்றாடம் சிந்திக்க இவர்களுக்கு  நேரமில்லாததாலும் இதைச்  செய்ய மாட்டார்கள்.
வெங்காயம்  விலை உயர்ந்து பெரிய அளவில் பிரச்சனையாகி மக்கள் மத்தியில்  கொந்தளிப்பு ஏற்பட்ட பின்னர்  பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை  இறக்குமதி செய்யும் முடிவை எடுத்தார்கள். இவர்களின்  உருப்படாத பார்மாலிட்டிகளைக்  கடைப்பிடித்து பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் வருவதற்குள்  இங்கேயே உற்பத்தி அதிகரித்து விட்டது. பாகிஸ்தான் வெங்காயம்  அழுகிப்போனது தான் மிச்சம். 
இந்த முடிவை இதற்கான  அறிகுறி தென்பட்ட உடன் செய்து ஓரிரு நாளில் இறக்குமதி  செய்திருந்தால் வெங்காயம்  விலை ஏறாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் ஓரிரு நாளில் முடிவு எடுக்கும் அளவுக்கு நிர்வாக நடைமுறை நம் நாட்டில் இல்லவே இல்லை.
ஆரம்ப காலங்களில் இந்த வகையில் மட்டுமே விலைகள்  உயர்ந்து வந்தன. ஆனால் இப்போது  இன்னும் பல காரணங்களால் விலை உயர்கின்றன.
வட்டியை அடிப்படையாகக்  கொண்ட பொருளாதாரம் விலை உயர்வுக்கான மிக முக்கியக்  காரணமாகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது வட்டிக்குக்  கடன் வாங்கி உற்பத்தி செய்தால் விலையை ஏற்றினால் தான் வட்டி  கட்ட முடியும் என்பதற்காக விலையை அதிகரித்து விடுகின்றனர். மேலும் வட்டிக்குக் கடன் கிடைப்பதால்  வக்கற்றவர்களும் களத்தில் இறங்கி சொத்துக்களை வாங்க  முயற்சிப்பதால் தேவைகள்  அதிகரிக்கின்றன. குறைந்த பொருளுக்கு அதிகமானவர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டு இதன் காரணமாகவும்  விலைவாசிகள் உயர்கின்றன.
தேவைக்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் சொத்து வாங்க அலையும் போது போட்டி குறைவாக உள்ளதால் விலை சீராக இருக்கும். ஆனால் சாப்பட்டுக்கு வழி இல்லாதவர்களும் வட்டிக்குக் கடன் கிடைப்பதால் சொத்து வாங்க அலைகின்றனர். தங்களால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தும் ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர். இப்படி போட்டி அதிகமாகும் போது தானாகவே விலைகள் உயர்கின்றன. 
ஆக வட்டி எனும்  கொடிய சுரண்டல் காரணமாக  இரண்டு வகைகளில் விலைவாசிகள்  உயர்கின்றன. வட்டி அடிப்படையிலான  பொருளாதாரம் தடுக்கப்பட்டால்  பெரும்பாலான பொருட்கள்  உடனே விலை குறைந்து விடும்.
ஆனால் வட்டி இல்லாத பொருளாதாரம் பற்றி சிந்திக்கக்  கூட அரசியல்வாதிகள் முன்வருவதில்லை என்பதால் இந்த வகையான விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரப்போவது  இல்லை.
அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. குறிப்பாக  தேவைக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களிடம் மட்டும் பல வகை வரிகளை வசூலித்து  ஏழைகள் பாதிக்காத வகையில்  வரிகள் விதிக்கலாம்.  
ஆனால் நாட்டில் எல்லா  கட்சிகளும் எல்லா அரசுகளும்  ஏழை மக்கள் பாதிக்கும் வகையில்  தான் வரிகளை விதிக்கின்றன. இதில் யாரும் விதிவிலக்கு  இல்லை.
அரசிபருப்புசோப்புபிளேடுஎண்ணெய்மண்ணெண்ணெய்டீசல்பெட்ரோல் என பொது மக்கள் பயன்படுத்தும் எல்லாப்  பொருட்கள் மீதும் வரி விதிப்பதும்  விலைவாசி உயர்வுக்கு முக்கிய  காரணமாகும். 
ஒரு ஏழை ஒரு நாளைக்கு நூறு ரூபாய் செலவிட்டால்  அவனிடமிருந்து வரி மூலம்  அரசுக்கு 20ரூபாய்க்குக் குறையாமல்  வரியாகக் கிடைக்கின்றன. பொதுமக்கள் பொதுவாக பரவலாகப் பயன்படுத்தும் எந்தப் பொருளுக்கும் எந்த வரியும் விதிக்காவிட்டால் உடனடியாக 25 சதம் விலை ஒரே  நாளில் குறைந்து விடும்.
இதற்குப் பதிலாக ஒரு  ஆடம்பர கார் வாங்கினால் அதன் மீது 100 சதம் கூட வரி போடலாம். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்  முழிப்பவர்களுக்கு இது  பாரமாக இருக்காது. குறிப்பிட்ட  மதிப்புக்கு மேல் சொத்து வாங்கினால் அதன் மீதும் இது  போல் வரி விதிக்கலாம்.
உணவு, உடை, மருந்து, கல்வி போன்ற அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் தவிர ஏசிவாஷிங் மிசின்ஓவன், பிரிட்ஜ்மிக்ஸி, கிரைண்டர் போன்ற எல்லாப் பொருட்களின் மீதும் அதிக வரி விதிக்கலாம். இது சாதாரண மக்களைப் பாதிக்காது. மேலும் தினசரி இவற்றை வாங்கப் போவதில்லை.
ஆனால் உப்புபுளிமிளகாய் போன்ற பொருட்களுக்காக அன்றாடம் மக்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த பொருட்களின் விலை உயர்வு தான் இன்று மக்கள் பிரச்சனையாகவும் உள்ளது. ஏசி விலை ஏறி விட்ட்து பிரிட்ஜ் விலை ஏறி விட்டது என்று எந்தப் போராட்டமும் உலகில் நடப்பது இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையேற்றம் தான் பொதுமக்களின் பிரச்சனையாகும்.
இது போன்ற பொருட்களுக்கு வரிவிதிக்காமல் ஆடம்பரப் பொருளகளுக்கு மட்டும் திட்டமிட்டு வரி விதித்தால் அரசின் வருவாயும் குறையாது. ஏழைகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டும் கூட பாதிக்காது.
ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் பணம் படைத்தவர்களாக உள்ளதால் அவர்கள் இதைச் சிந்திக்கவும்  மாட்டார்கள். அதிகாரிகளும் இதைச் சொல்ல மாட்டார்கள்.
அத்தியாவசியமான பொருட்கள்  மீது வரி விதிப்பதாக இருந்தாலும்  சங்கிலித் தொடரான பாதிப்புகளை  ஏற்படுத்தும் பொருட்கள்  மீது கட்டாயம் வரி விதிக்கவே  கூடாது. ஆனால் எல்லா அரசுகளும் இது போன்ற பொருட்கள் மீது தான் அதிகமான வரிகளை விதித்து விலைவாசி உயர வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன. உதாரணமாக பெட்ரோல்டீசல் விலை உயர்ந்தால் அதன் காரணமாக போக்குவத்துக் கட்டணம் அதிகரிக்கும். இதனால் எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். 80 ரூபாய் பெட்ரோல் விலை என்றால் அதில் சரிபாதி மத்திய மாநில அரசுகளுக்கு வரியாகப் போகின்றது.
மேலும் அரசாங்கம்  செய்யும் செலவுகளில் முக்கால்வாசி செலவுகள் ஆடம்பரத்துக்காகவும்பகட்டுக்காகவும் பயனற்ற வழிகளிலும் தான் செலவிடப்படுகின்றன.
ஏழைகளுக்கான பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி விட்டுசெஸ் சாம்பியனானதற்காக நாட்டின் பரம ஏழையான(?) விஸ்வநாத்  ஆனந்துக்கு நம்முடைய பணம் இரண்டு கோடி ரூபாயைத் தூக்கி கொடுக்கபடுகிறது. சினிமா நாடகங்களுக்கு விருதுகளும் பண முடிச்சுகளும் அளிக்கப்படுகின்றன. சினிமாக் கூத்தாடிகளுக்கு பணமுடிப்புகள் வழங்கப்படுகின்றன. தெருவெங்கும் காக்காய்கள் எச்சம் போட தலைவர்களுக்கு சிலைகள் வைக்கப்படுகின்றன. எருமை மாடுகளும் நாய்களும் இளைப்பாற மணி மண்டபங்கள் கட்டப்படுகின்றன. செத்துப்போனவர்களுக்கு அரசின் சார்பில் விழாக்கள் எடுக்கப்படுகின்றன. ஆடம்பர வரவேற்புகளுக்கு ஊதாரித்தனமாக செலவிடப்படுகின்றன்.ஊடகங்களின் வாயடைக்க முழுப்பக்க விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. இன்னும் பல வழிகளில் மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. இது போன்ற செலவுகளை அடியோடு நிறுத்தினால் செல்வந்தர்களுக்குக் கூட குறைவாக வரி போடலாம்.
ஆனால் இது நமக்குத் தான் நன்றாகத் தெரியும். அரசியல்வாதிகளுக்கு இது போன்ற  கிறுக்குத் தனங்கள் செய்யாவிட்டால் பைத்தியமே பிடித்து விடும் என்று சொல்லும் அளவுக்கு இது போன்ற ஊதாரித்தனத்தில்  ஊறிப்போய் உள்ளனர். இந்தக் காரணத்தால் ஏறிய விலை இறங்கப்  போவதில்லை.
பணமுதலைகளும் அமைச்சர்களின்  பினாமிகளும் பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைன் வர்த்தகம்,பங்கு  வணிகம் போன்ற சூதாட்டத்திற்கு அனுமதி அளித்து ஊக்குவிப்பதன் காரணமாகவும் விலைகள் ஏறுகின்றன.
உலகில் எங்கோ இருக்கும்  ஒரு பணமுதலை இந்தியாவில்  உள்ள துவரம் பருப்பை ஆன்லைனில்  புக் பண்ணி விடுகிறான். சில  நாட்களுக்கு துவரம் பருப்பு  கிடைக்காமல் செய்து செயற்கையாக தட்டுப்பாடை ஏற்படுத்தி விலையை இஷ்டத்துக்கு உயர்த்துகிறான். இப்போதைய விலைவாசி உயர்வுக்கு இது தான் பிரதான காரணமாக  உள்ளது.
ஒரு ஹோட்டலில்  நூறு அறைகள் இருந்தால் அதை  ஒருவன் புக் பண்ணி விடுகிறான். ஆயிரம் ரூபாய் வாடகை உள்ள அறையை 3000 ரூபாய் என்று இவன் உள்பதிவு செய்கிறான். இது போல் தான் தங்கம் முதல் அத்தியாவசியப்  பொருள் வரை விலை ஏறுகின்றது.
இதற்கு முக்கியக் காரணம் பிரதமர் மன்மோகன் சிங்கும்ப.சிதம்பரமும் தான். இவர்கள் இருவரையும் பல்லைப் பிடுங்கினால் தங்கம் முதல் அனைத்தும் பன்மடங்கு இறங்கி விடும். பணமுதலைகள் ஆதாயம் அடைவதற்காக ஆன்லைன் மோசடியை அனுமதித்து நாட்டை நாசமாக்கியவர்கள் இவர்கள் தான்.
இதற்கெல்லாம் போராட்டம்  நடத்தினால் ஒரு பயனும்  ஏற்படாது. நாமும் இருக்கிறோம்  என்று காட்டுவதற்குத்தான் அது உதவும்.
இந்த நிலை ஒரு அளவுக்கு மேல் போனால் நாட்டு மக்கள் அனைவரும் கொந்தளித்து புரட்சியில்  இறங்கி அதிபர்கள் நாட்டை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். அப்படி ஒரு புரட்சி வந்தாலும்  புரட்சியின் மூலம் ஆட்சியைப்  பிடித்தவர்களும் இதே வழியில்  தான் செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

உணர்வு 16:41
11.06.2012. 08:16

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை