ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே!



ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே!

அல்ஜன்னத் மாத இதழில் பீ.ஜைனுல் ஆபிதீன் ஆசிரியராக இருந்த போது 1993ல் எழுதிய தலையங்கம். வரலாற்றுப் பதிவாக இதை வெளியிடுகிறோம். இதைத் தேடி எடுத்து கம்போஸ் செய்து அனுப்பித் தந்த இலங்கை ஹஃபீல் மவ்லவி அவர்களுக்கும் இலங்கை ரிசாஃப் அவர்களுக்கும் நன்றிகள்
P. ஜைனுல் ஆபிதீன்
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களைவிட அதிக சலுகையும் சுதந்திரமும் பெற்று வருகின்றனர்” என்று இந்து மத வெறியர்கள் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி இந்துக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள் அதிக சலுகைகள் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளார்களாஅவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களாஇல்லை! நிச்சயமாக இல்லை! இரண்டாந்தரக் குடிமக்களைப் போலவே சிறுபான்மையினர் நடத்தப்பட்டு வருகின்றனர்.
அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரையும் உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கு மட்டுமே இந்திய அரசியல்வாதிகளுக்குப் பயன்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டதன் காரணமாக மடடும் நாம் இந்த முடிவுக்கு வரவில்லை. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த நாடகங்கள்அதன் பின்னர் நடந்துவரும் நாடகங்கள் யாவும் இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
பாபர் பள்ளிவாசல் பிரச்சினையில் மட்டுமின்றி எத்தனையோ பிரச்சினைகளிலும் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நாம் காணமுடிகின்றது.
மதச் சார்பற்ற ஒரு நாட்டில் - ஒரு மானிலத்தின் - தமிழ்நாட்டின் - அரசுச் சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தினரின் வழி பாட்டுத்தலம் எப்படி அரசுச் சின்னமாக இருக்க முடியும்?சிறுபான்மை மக்களின் உள்ளத்தில் ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கும் இந்தப் போக்கு எதைக் காட்டுகின்றது?
எல்லா மதத்தவர்களுக்கும் பண்டிகைகள் வருகின்றன. மற்ற மதத்தினரை விடக் குறைவான எண்ணிக்கையிலேயே முஸ்லிம்களின் பண்டிகைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் இருமடங்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றனவே! இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மையாஎந்தப் பண்டிகைகளுக்கும் சலுகை காட்டாமல் இருந்தால் மதச் சார்பின்மை என்று கூறலாம். அல்லது எல்லா மதத்தவர்களின் பண்டிகைகளுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் அதையும் மதச் சார்பின்மை என்று கூறலம். இது எப்படி மதச் சார்பின்மையாக முடியும்?
அரசுப் பணத்தில் வேதாகமக் கல்லூரி நடத்தப் போவதாக அரசே அறிவுப்புச் செய்யும். ஹிந்து மத வேதங்களைப் படித்துக் கொடுக்க அரசுப் பணத்தைச் செலவு செய்வது எப்படி மதச் சார்பின்மையாக இருக்க முடியும்ஹிந்துக்கள் மட்டும்தான் அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனரா?
ஹிந்துக் கோவில்களைப் பராமரிக்க மதச்சார்பற்ற நாட்டின் ஒரு மாநில முதல்வரால் நிதி வசூலிக்கப்படுகிறதே! இதுதான் மதச் சார்பின்மையாமத்திய அரசுக்குச் சொந்தமான மத்திய வங்கி ஒன்று அதற்கு நிதி வழங்குகின்றதே! இதுதான் மதச் சார்பின்மைக்கு அடையாளமா?
அரசுச் செலவில் கோவில்களைப் பாதுக்க தனிப்படை அமைப்பதும் மதச் சார்பின்மைதானா?
மகாமகக்குளம் அரசுப் பணத்தில் ஆழப்படுத்தப்படும்! தண்ணீர் நிரப்பப்படும்! ஆடிப்பெருக்கு அன்று மட்டும் காவிரி புரண்டு ஓடும்! ஸ்ரீரங்கத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டு அதையொட்டி நடத்தப்பட்ட விழா அரசுச் செலவிலேயே நடைபெறும்! மதச்சார்பற்ற நாட்டின் ஜனாதிபதி அரசுச் செலவில் வந்து கலந்து கொள்வார்! இதையெல்லாம் மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக சிறுபான்iமை மக்கள் கருதிக் கொள்ள வேண்டும்!
அகில பாரத இசைகர்நாடக இசை என்றெல்லாம் தொலைக்காட்சியும்வானொலியும் இந்து மதப்பிரச்சாரம் செய்யும்! அதை மதச் சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமாக நாம் கருதிக் கொள்ள வேண்டும்.
கம்பராமாயணமும்மகாபாரதமும் தொலைக்காட்சியில் காட்டப்படும், “திப்புசுல்தான் வாள்” மட்டும் இது முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டிலுடன் ஒளிபரப்பப்படும். நடந்த நிகழ்ச்சியை கற்பனை எனவும், கற்பனைகளை உண்மை எனவும் விளம்பரப்படுத்துவது ஒரு மதச்சார்புக்கு அடையாளமாக இல்லையா?
இந்து மத வேதங்களும்புராணங்களும் சமஸ்கிருத மொழியல் அமைந்துள்ளது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக செத்த மொழிக்கு அரசுப் பணத்தில் உயிரூட்ட முயற்சிப்பது மதச் சார்பின்மையாகுமா?
அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயே ஹிந்து மத தெய்வங்களின் சிலைகள் நிறுவப்படும்! படங்கள் மாட்டப்படும்! அவற்றுக்கு ஆராதனையும் செய்யப்படும்! காவல் நிலையங்களுக்குள்ளேயே கோவில் கட்டப்படும்! அரசு நிகழ்ச்சிகள் ஹிந்து மத ஆச்சாரப்படி குத்து விளக்கேற்றி விஷேச பூஜையுடன் தெடங்கும்! இவற்றைக் கூட மதச் சார்பின்மை என்று நாம் நம்பியாக வேண்டும்!
விவேகானந்தர் என்பவர் இந்து மதச் சாமியார்களில் ஒருவர். அவருக்காக கன்னியாகுமரியில் விழா நடத்தப்படும்! பிரதமரும்ஐந்து மாநில முதல்வர்களும் அதில் கலந்து கொள்வார்கள். ஒரு மதத்தின் சாமியார் பற்றிய விழா மதச்சார்பின்மைக்கு எடுத்துக் காட்டு என்று இவர்கள் காதில் பூச்சுற்றுவார்கள். சிறுபான்மையினர் பேசாமல் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
சமீபத்தில் தமிழக அரசின் செய்திக் குறிப்பு ஒன்றுமதச் சார்பின்மை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தினமணியில் (12-12-92-மதுரைப் பதிப்பு) வந்த செய்தியைப் படியுங்கள்.
மருதமலை கோவில் திருப்பணிக்கு 1.09 கோடி அனுமதி.
சென்னை டிச-11 கோயம்பத்தூர் அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தங்கத்தேர் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா 71 லெட்சம் அனுமதித்துள்ளார்இது தவிர கோவில் திருப்பணிக்காக 38 லெட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினமணி)
ஏதோ இந்து அறநிலையத் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக எண்ணி ஆறுதலடைய வேண்டாம். 11-12-92 மாலை மாநிலச் செய்தியில் கைத்தறித் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்படுவதாக வானொலி தொpவிக்கின்றது.
கைத்தறித் துறைக்கும்மருதமலைக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்மதச்சார்பற்ற நாட்டில் இது அக்கிரமம் இல்லையா?
தழிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.க வின் பொதுக்குழு கூடுகிறது. மதச்சார்பற்ற நாட்டின் முதல்வர் ஜெயலலிதா திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு மண்டபம் கட்டித் தரும்” என்று அறிவிக்கிறார்.
இவையெல்லாம் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு இருக்கும் மதிப்பை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட விஷயத்துக்கு வருவோம். தகர்க்கப்படுவதில் உடந்தையாக காங்கிரஸ் நடந்து கொண்டதை அனைவரும் அறிவோம். மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்பு இவர்கள் நடந்து கொண்ட விதம். அதன் பிறகு அரசியல் கோமாளி நரசிம்மராவ் நடத்தும் நாடகம் ஆகியவைகளையும் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
மதச் சார்பற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேருஅவரது புதல்வி இந்திராஅவரது புதல்வன் ராஜிவ்இன்றைக்கு நரசிம்மராவ் ஆகியோர் மதச்சார்பின்மையைக் காலில் போட்டு நசுக்கி வந்தனர் என்பதில் ஐயமில்லை.
 1949ல் பாபர் பள்ளிவாசலுக்குள் ராமர் சிலை அத்து மீறி சட்ட விரோதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதச்சார்பின்மை பற்றி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ் தான் மத்தியிலும்உ.பி மாநிலத்திலும் அப்போது ஆண்டது.
அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல தடுக்கப்பட்டார்கள். அப்போதும் அதிகாரம் காங்கிரஸ் கையில்தான்.
பிறகு பள்ளிவாசலுள் வைக்கப்பட்ட சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவும் காங்கிரஸின் ஆசியோடுதான் நடந்தது.
செங்கல் ஊர்வலம் விட்டுபல உயிர்களைக் குடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது! அப்போதும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தது மதச்சார்பின்மையைக் காக்கும்(?) காங்கிரஸ்தான்.
கட்டுமானப்பணி துவங்கிய போதும் அல்லாஹ்வின் இல்லம் இடிக்கப்பட்டபோதும் மாநிலத்தை பிஜேபி ஆட்சி புரிந்தாலும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ்தான் இருந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பிஜேபியின் மாநில அரசின் மீது நரசிம்மராவ் பழிசுமத்த முடியும். மாநில அரசு என்பது தனிநாடு அல்ல. அது தன்னிஷ்டத்துக்கு எதையும் செய்ய முடியாது. மத்திய அரசு நினைத்திருந்தால் அதை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும். நரசிம்மராவின் இந்தப் புலம்பலை நம்பித் தொலைப்போம்.
அதன் பிறகு நடந்தது என்னஇடிக்கப்பட்ட இடத்தில் சாவகாசமாக ராணுவத்தின் பாதுகாப்புடன் சிறிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு யார்மீது பழியைப் போடப் போகிறார்அதன் பிறகு பூசாரிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டதேஅது யாருடைய ஆட்சியில்?
பாபர் மசூதி கட்டித் தரப்படும் என்று வாக்களித்து விட்டு அதே இடத்தில் கட்டித் தருவதாக அரசு கூறவில்லை என்று அதிகாரிகளை விட்டு அறிவிக்கச் செய்தது யாருடைய ஆட்சியில்?பள்ளிவாசல் கட்டித் தருவது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கப்படும்என்று அந்தர் பல்டி அடித்தது துரோகி நரசிம்மராவ் அல்லவா?
 27.12.92 அன்று பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதிக்க பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது! அதை நடைமுறைப்படுத்துகின்றது! திருவனந்தபுரம் வந்த நரசிம்மராவிடம் நருபர்கள் இது பற்றிக் கேட்கின்றனர்.
அவர் அளித்த பதிலைப் படியுங்கள்!
 “நாங்கள் எந்த அனுமதியையும் அளிக்கவில்லை. மைய அரசு என்ற முறையில் அத்தகைய அனுமதி எதையும் அளிக்கவில்லை
   “தரிசனத்துக்கு அனுமதியளிப்பதும் ஊரடங்கு பிரப்பிப்பதும் மைய அரசின் பணியல்ல
   “அயோத்தியில் தகராறுக்குட்பட்ட இடத்தில் தற்காலிகமாகக் கட்டப்பட்டுள்ள அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பலராமர் சிலை தரிசனத்துக்கு அனுமதியளித்தது பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் தானே தவிர மைய அரசு அல்ல
முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் விதமாக இத்தகைய தத்துவங்களை உதிர்க்கிறார். சென்ற மாத தலயங்கத்திலேயே” இந்த துரோகியை நம்பமுடியாது” என்று எச்சரித்திருந்தோம். அந்த எச்சரிக்கையை மெய்படுத்தியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மை கொண்ட அவரை இனியும் முஸ்லிம்கள் நம்பப்போகிறார்களா?இனியும் ஏமாந்து கொண்டே இருப்பது என்று முடிவு செய்யப்போகிறார்களா?
மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த முடியாத கையாளாகாத நரசிம்மராவ் பிரதம பதவிக்குத் தகுதியானவர்தானாஇதை எல்லா சிறுபான்மையினரும் சிந்திக்க வேண்டும்.
இந்த துரோகிகள் தங்களை இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பிறகும்பதவி வெறிபிடித்த முஸ்லிம் லீக் கட்சியினர் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கின்றனர். தங்களின் பதவியைப் பெரிதாகக் கருதும் சந்தர்ப்பவாத முஸ்லிம் லீக்கை இனியும் நம்ப வேண்டுமா?
இந்தச் சமுதாயம் இதன் பிறகுகூட துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.  சமீபத்தில் கேரளத்தில் நடத்தப்பட்ட முஜாஹித்களின் மாநாட்டில் கருனாகரன்மற்றும் மத்திய அமைச்சர்கள்முஸ்லிம் லீக்கினர் அழைத்துக் கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வளவு சீக்கிரம் தங்களுக்கு எற்பட்ட அவமானத்தை மறந்துவிட்டனர். குர்ஆன்ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட அமைப்பினருக்கே சொரணை இல்லையென்றால் மற்றவர்களின் நிலை என்ன?
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் போலி மதச்சார்பின்மை பேசுவோருக்கு நாம் உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வேதனையில் உணர்ச்சி வசப்பட்டு பாகிஸ்தானில் சில ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தான் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று கூறவில்லை. இஸ்லாமிய நாடு என்றே பிரகடனம் செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோவில்களை அரசுச் செலவில் கட்டித் தரும்பணி துவங்கி விட்டதாக தினமணி 28-12-92 செய்தி கூறுகின்றது.
மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட இந்தியாவில் இந்நேரம் இடிக்கப்பட்ட பள்ளிவாசலைக் கட்டி முடித்திருக்க வேண்டாமாஇது பற்றி இன்னும் முடிவே செய்யவில்லையாம்! பிரதமர் திருவாய் மலர்ந்துள்ளார்!
 “அயோத்தியில் ராமர் கோவில்மற்றும் மசூதி கட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு அறக்கட்டளைகளை மைய அரசு விரைவில் அமைக்கும்” என்று பிரதமர் அறிவித்தார்.
எவ்வளவு விரைவில் இந்த அறக்கட்டளைகள் அமைக்கப்படும்என நிரூபர்கள் கேட்டதற்கு சில நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றார்.
 “அறக்கட்டளைகள் அமைப்பதற்கு சிறிது காலம் ஆகும்
பள்ளிவாசல் கட்டுவதற்கு அவகாசம் கேட்கவில்லை. பள்ளிவாசல் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப் போகிறாராம்! அது அமைவதற்கே சிறுது காலம் பிடிக்குமாம்! ஏன் இந்த அவகாசம்முஸ்லிம்கள் அதற்குள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் அல்லவாஅதற்குத் தான் ஐயாவுக்கு அவகாசம் தேவைப்படுகின்றது.
மதச்சார்புள்ள நாட்டின் நடவடிக்கையை விடவும் மேசமாக மதச்சார்பற்ற நாட்டின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
மற்றொரு செய்தியைப் படியுங்கள்! இது தினமணியின் தலையங்கத்தில் (26.12.92) இடம் பெற்றுள்ளது.
 “அதே வேளையில் ஐக்கிய அரபுக் குடியரசு நாடு 2000 பாகிஸ்தானியரை நாடு கடத்தியதானது பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தி சம்பவத்துக்காக அரபு நாட்டிலிருந்த ஹிந்துக்களையும்கிறிஸ்தவர்களையும்அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களையும் தாக்கியமைக்காக அவர்களை அந்த அரசு நாடு கடத்தியது. தனது வளர்ச்சித் திட்டங்களை இந்த வெளியேற்றம் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் கூட ஐக்கிய அரபுக் குடியரசு மதக் கலவரத்தைத் தனது நாட்டில் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்தது. (தினமணி தலையங்கம்)
இதை ஒரு முறை அல்ல! பல முறை படியுங்கள்! பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்காக ஐக்கிய அரபுக் குடியரசு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றவில்லை. கோவில்களைச் சேதப்படுத்தியதற்காக முஸ்லிம்களை வெளியேற்றுகின்றது! இதனால் தனது நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கும் என்று தெரிந்தே இந்த நடவடிக்கையை எடுக்கின்றது. எத்தகைய நடவடிக்கை! நாடு கடத்தும் நடவடிக்கை!
ஐக்கிய அரபுக் குடியரசு மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தில் எழுதிவைக்கவில்லை. இஸ்லாமிய நாடு என்றே அது தன்னைக் கூறிக் கொள்கிறது! அப்படி இருந்தும் அந்த நாடு பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுத்தது. காரணம் அங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சி.
வெட்கங்கெட்ட இந்திய ஆட்சியாளர்கள் பள்ளியை இடித்தவர்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் காணோம்! உயர் நீதிமன்ற உத்தரவையும்அரசியல் சாசனத்தையும் அவமதித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்தது போலீஸும் ராணுவமுமே! கரசேவையில் கூட இந்தக் கயவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களைக் களை எடுக்கக் காணோம்.
நடைமுறைப்படுத்தப்படாத ஏட்டளவு மதச்சார்பின்மையை விட நடைமுறைப்படுத்தப்படும் ஐக்கிய அரபுக் குடியரசின் மதச்சார்புக் கொள்கை ஆயிரம் மடங்கு உயர்ந்தது. அறிவுடையோர் இந்த முடிவுக்கே வருவார்கள்.
மொத்தத்தில் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இந்த நாட்டில் ஒருநாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள்குறிப்பாக காங்கிரஸ் - அதிமுக வினர் மிகவும் சிறப்பாக நடிக்கின்றனர். சொரணையற்ற சமுதாயம் நடிப்பை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது.
(அல் ஜன்னத் ஜனவரி 1993)

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை