“நேரமில்லை” எதற்கு ?????



“நேரமில்லை”  எதற்கு ?????

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை! 
நேரமில்லை! நேரமில்லை! நேரமில்லை!

உலக வாழ்விற்கு தேவையான அத்தனை காரியங்களை செய்வதற்கும்
நேரமிருக்கும்.இறைவனை பற்றி பேசும் போதும் வணக்கங்கள்  பற்றி பேசப்படும் போது மட்டும் நேரமில்லை! நேரமில்லை! நேரமில்லை! இந்த வார்த்தை ஒரு முஸ்லிமுடைய வாய்லிருந்து வரவே கூடாது ஏன் என்றால் அல்லாஹ் கூறுகின்றான்:

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன் 51:56)
இங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம்! மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்!
இதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். “இபாதத் – வணக்கம்” என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், ‘அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்’ அதுவே இபாதத்-வணக்கம்’ ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும்.
அடுத்தது தொழுகை! நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
இனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்!
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
“இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.” (அல்-குர்ஆன் 107:4-5)
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்:
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
எனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ “நேரம் கிடைக்கவில்லை! அதனால் தொழவில்லை” என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
தொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது! இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது! மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது,
‘நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.
(அதற்கவர்கள்) ‘நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்’ என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள்;
எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்” (அல்-குர்ஆன் 4:97-98)
அடுத்ததாக, ‘மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே’ என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது!

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே!
‘நேரம் பொன் போன்றது’ – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்