வழிகெட்ட சலபிக் கொள்கைக்கு பகிரங்க அறை கூவல் ?
வழிகெட்ட சலபிக் கொள்கைக்கு பகிரங்க அறை கூவல் ?
குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்
தமிழகத்தின் சில பகுதிகளில் சலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு ஒரு கூட்டம் அழைத்து திரிகிறது, அவர்களின் மடமையை அம்பலப்படுத்த விவாதிக்க அழைத்தால் ஓட்டம் எடுக்கிறது. எனவே அவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கும் இப்பிரசுரம் அப்பாஸ் அலி அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. சலபிக் கூட்டம் வாலாட்டும் ஊர்களில் இதை அச்சிட்டு விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டுமாக.
இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.
குர்ஆனும் நபிமொழி மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே மனிதர்களின் சுயக் கருத்துக்கள் கலந்துவிடாமல் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய தூய்மையான மார்க்கமாக இஸ்லாம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் தியாகத்தையும் நபித்தோழர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் இன்றைக்குச் சிலர் குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம் என்ற இஸ்லாத்தின் பாதுகாப்புச் சுவரை உடைக்க நினைக்கின்றனர். இந்த இழிசெயலைச் செய்வதற்கு இவர்கள் நபித்தோழர்களை ஆயுதமாகப் பயன்படுத்தி நபித்தோழர்களையும் அதனைத் தொடர்ந்து சலபுக் கொள்கையில் உள்ள இமாம்களையும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
தங்களுடைய இந்த வழிகேடான கொள்கையை நிரூபிப்பதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களையும் ஆதாரங்களையும் பார்த்தால் இவர்கள் மத்ஹபுவாதிகளையும் தரீக்காவாதிகளையும் மிஞ்சிவிட்டார்கள் என்பதை பொதுமக்கள் கூட அறியலாம். இவர்கள் ஆதாரமாகக் காட்டும் செய்திகளுக்கும் வாதங்களுக்கும் சரியான பதிலை பல வருடங்க்ளுக்கு முன்பே நாம் கொடுத்துள்ளோம், அதை முறையாக எதிர்கொள்ள திராணியில்லாமல் பொது மக்களைக் குழப்பிவருகின்றனர்.
இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்
இது குறித்து முழுவிபரம் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்
நாம் இவர்களிடம் கேட்கின்ற கேள்விகளுக்கும் நம்முடைய ஆதாரங்களுக்கும் பதில் சொல்லாமல் பாமர மக்களைத்தேடிச் சென்று குழப்பும் செயலைச் செய்து வருகின்றார்கள்.
எனவே இந்த நோட்டீஸின் வாயிலாக இவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு இவர்கள் சரியான பதிலை ஆதாரத்துடன் கூற வேண்டும். இதை இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வழிகேடர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நீங்கள் சரியான ஓரிறைக் கொள்கையாளர்களா?
ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஒன்று பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.
அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்துபோன அல்லது உயிருடன் உள்ள ஒருவருக்கு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறிவிடுகிறான்.
தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அநாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப்பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
பின்வரும் வசனம் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ(3)39
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்குர்ஆன் (39 : 3)
எனவே நபித்தோழர்கள் கூறுவதெல்லாம் மார்க்கம் என்று கூறும் நீங்கள் ஓரிறைக் கொள்கையாளர்களா?
நீங்கள் நபிவழி நடப்பவர்களா?
தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (1573)
மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.
இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுப்பட்ட நீங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளீர்கள். அன்றைக்கு மத்ஹபுவாதிகள் தங்களுடைய வழிகேடான கொள்கைக்கு எந்த வசனங்களை ஆதாரமாக காட்டினார்களோ அதே வசனங்களை இன்றைக்கு நீங்கள் நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
இமாம்களையும், பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான். நீங்கள் அன்றைக்கு எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கு எதிராகவே உள்ளன.
இந்த அடிப்படையில் நீங்களும் மத்ஹபுவாதிகளாக இருந்து கொண்டு ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்று பெயர் வைத்து குர்ஆன் ஹதீஸைக் கடைபிடிக்கும் ஏகத்துவவாதிகளைப் போல் காட்டிக்கொள்வது ஏன்?
நபித்தோழர்களுக்கு இறைச் செய்தி வந்ததா?
முஸ்லிம்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீச் செய்தியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
அல்குர்ஆன் (7 : 3)
அல்குர்ஆன் (7 : 3)
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் நபித்தோழர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நீங்களும் நம்பும் போது நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று எப்படி கூறலாம்?
நபித்தோழர்கள் நபிமார்களா?
குர்ஆன் வசனத்துக்கு மற்ற குர்ஆன் வசனங்களைக் கொண்டோ அல்லது நபிமொழிகளைக் கொண்டோ விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தை ஏற்கலாம். இதனால் குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தை நாம் தாண்டியவர்களாக ஆகமாட்டோம். இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாத் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கின்றது.
எந்த ஆதாரத்தையும் காட்டாமல் குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ(44)16
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் (16 : 44)
நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ (17) فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ (18) ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (19)75
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் (75 : 17)
குர்ஆனுக்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சரியா?தவறா? என்றெல்லாம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று ஜாக் மற்றும் சலபுக் கொள்கையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
எனவே விளக்கம் என்ற பெயரில் நபித்தோழர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்கள் நபித்தோழர்களை நபிமார்களின் இடத்தில் வைத்து விட்டீர்கள்.
மார்க்கம் பாதுகாக்கப்படவில்லையா?
நபித்தோழர்கள் சிறப்புக்குரியவர்கள். மதிப்புக்குரியவர்கள் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில் அவர்களைப்பின்பற்றக்கூடாது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை.
ஏனென்றால் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் என்பதால் இந்த மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் நபித்தோழர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தாலும் அவர்கள் கூறிய மார்க்க விசயங்கள் அனைத்தும் அவர்கள் சுயமாகச்சொன்னவை அல்ல. மாறாக இறைவன் கூறியதை அப்படியே கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கூறிய மார்க்க விசயங்களில் தவறு வர வாய்ப்பில்லை.
இந்த பாதுகாப்புத் தன்மை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நபித்தோழர்களுக்கும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் மார்க்க விசயங்களில் நபித்தோழர்களிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளை நாம் சுட்டிக்காட்டினோம்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் நாம் சுட்டிக்காட்டிய செய்திகளை மறுக்காமல் அவை நபித்தோழர்களிடம் ஏற்பட்ட தவறுகள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
நம்முடைய கேள்வி என்னவென்றால் மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இருக்கின்ற போது அவர்கள் கூறியதைக் கண்மூடிக்கொண்டு மார்க்கமாக ஏற்க வேண்டும் என்று கூறினால் இந்தக் கூற்று நம்முடைய மார்க்கத்தின் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?
மார்க்கம் முழுமையாகவில்லையா?
இஸ்லாமிய மார்க்கத்தை முழுமை செய்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் (5 : 3)
நபித்தோழர்களின் விளக்கம் இல்லாமல் மார்க்கத்தை விளங்க முடியாது என்றால் அல்லாஹ்வின் மார்க்கம் முழுமையடைவில்லை என்று கூற வேண்டி வரும். இது குர்ஆனுக்கு எதிரான கூற்றாகும்.
உங்கள் யூகம் மார்க்கமாகுமா?
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்கள். அவர்கள் ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இருக்கும். எனவே நபித்தோழர்களைப்பின்பற்றுவது தவறில்லை என்று வாதிடுகின்றீர்கள்.
மார்க்க விசயங்களில் நபித்தோழர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் இவ்வாறு வாதிடுவது மடமையாக உங்களுக்குத் தெரியவில்லையா?
முத்தலாக் விசயத்தில் (முஸ்லிம் : 2932) நபி (ஸல்) அவர்கள் ஒரு முடிவு எடுத்திருக்க உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமான முடிவை எடுத்து செயல்படுத்தினார்களே. உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?
தயம்மும் தொடர்பான வசனத்தையும் நபிமொழியையும் ஆதாரமாகக் கொண்டு தயம்மும் செய்யக்கூடாது என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்களே (புகாரி 346). இது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எடுத்த முடிவா?
53 : 11 வது வசனம் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்ததைப் பற்றி பேசுகிறது என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்க இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்களே (முஸ்லிம் : 284) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட விளக்கமா?
தமத்துவு முறையிலும் கிரான் முறையிலும் ஹஜ் செய்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் தடுத்துள்ளார்களே (புகாரி :1563) இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டதா?
நீங்கள் சஹாபாக்கள் விசயத்தில் இவ்வாறு யூகம் செய்தது போல் தாபியீன்கள் தபஅ தாபியீன்கள் அதற்கு அடுத்து வந்தவர்கள் விசயத்திலும் யூகம் செய்ய முடியும்.
தாபியீன்கள் சஹாபாக்களிடமிருந்து கேட்காமல் கூறமாட்டார்கள் என்று யூகித்து தாபியீன்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?
தபஅ தாபீயீன்கள் தாபியீன்களிடம் கேட்டிருப்பார்கள் என்று யூகித்து தபஅ தாபியீன்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?
இதனடிப்படையில் முன்னோர்கள் பெரியார்கள் இமாம்கள் ஆகியோரைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவீர்களா?
பட்டியல் எங்கே?
நபித்தோழர்களும் மனிதர்களே. மார்க்க விசயங்களில் அவர்களிடம் தவறுகள் ஏற்பட்டுள்ளது. இதற்குரிய சான்றுகளை நாம் சொல்லும்போது நாங்கள் தனித்தனி நபித்தோழரின் கருத்துக்களை ஏற்பதில்லை. அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டு எடுத்த முடிவையே ஏற்போம் என்று கூறுகின்றீர்கள்.
அப்படியானால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஸகாத் இல்லை என்பதற்கும் பெருநாள் தினத்தில் அல்லாஹுஅக்பர் என்ற வாசகத்துடன் கூடுதலாக சில வாசகங்களை சேர்த்துச் சொல்வதற்கும் இன்னும் பல மார்க்க விசயங்களுக்கு தனித்தனி நபித்தோழர்களின் கூற்றுக்களை நீங்கள் ஆதாரமாக ஏன் காட்டுகிறீர்கள்? இவற்றை ஆதாரமாகக் கொண்டு மார்க்க சட்டங்களைக் கூறுவது ஏன்?
ஒரு மார்க்க விசயத்தில் அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டதாக எந்த ஒன்றையும் உங்களால் ஒருக்காலும் காட்ட முடியாது. ஏனென்றால் நபித்தோழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடந்தனர். இவ்வாறிருக்க அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே மார்க்கத்தில் பொய் சொல்வதை முதலில் விட்டுவிடுங்கள்.
அனைத்து நபித்தோழர்களும் ஒன்றுபட்டுக் கூறிய மார்க்க விசயங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும். இதைச்செய்யாவிட்டால் இல்லாத ஒன்றை கற்பனை செய்து இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மக்கள் புரிவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித்தோழர்கள் நபியவர்களின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒரு வசனத்தை மறந்து விட்டார்கள். இந்தச் செய்தி புகாரியில் 4454 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.
ஒரு ஊரில் கொள்ளை நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். இந்தச்செய்தி பல நபித்தோழர்களுக்குத் தெரியவில்லை. இது புகாரியில் 5729 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.
எனவே பல நபித்தோழர்கள் செய்தால் அது மார்க்கமாகிவிடும் என்று எப்படிக் கூற முடியும்?
நபித்தோழர் தனித்து கருத்து கூறினால் அது மார்க்கம். இல்லை. பல நபித்தோழர்களின் கூற்று மார்க்கம் என்று நீங்கள் எடுத்துள்ள நிலைபாட்டுக்கு எந்தக் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஆதாரமாக உள்ளது?
எனவே வழக்கம் போல் தவ்ஹீத் ஜமாத்தினர் நபித்தோழர்களை ஏசுகிறார்கள். அவமதிக்கிறார்கள் என்று பல்லவி படிக்காமல் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நபித்தோழர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுவிட்டு நழுவிச் செல்லக்கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக.
உங்கள் கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் அகில உலகத் தலைவர்களையோ உங்கள் தமிழகத் தலைவர்களையோ அழைத்து வந்து எங்களுடன் விவாதிக்க முன்வாருங்கள். அப்படி வந்தால் உங்களுக்கும் கப்ரு வணங்கிகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் உங்களுக்கும் மத்ஹப்வாதிகளுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பதையும் உங்களின் நடைமுறையும் தரீக்காவதிகளின் நடைமுறையும் ஒன்றுதான் என்பதையும் நாம் நிரூபித்து உங்களின் வழிகேட்டை உங்களுக்குப் புரியவைக்க தயாராக இருக்கிறோம்
Comments