தர்கா வழிபாடு



தர்கா வழிபாடு

நூலின் பெயர்: தர்கா வழிபாடு

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 64

விலை ரூ 14.00
 Download this Book in PDF

தர்கா வழிபாடு

  • ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா?
  • அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்குஇறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா?
  • மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா?
  • தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?
  • மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா?
  • மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா?
  • நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா?
  • வஸீலா தேடுவது தவறா?
  • தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
  • நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா?
  • சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா?
என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விடை அளிக்கும் நூல்

அறிமுகம்

உங்களுக்கு முன் சென்றோரின் வழியை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றதை மெய்ப்பிக்கும் வகையில் கனிசமான முஸ்லிம்கள் பிற சமயக் கோட்பாடுகளைத் தமதாக்கிக் கொண்டு விட்டனர்.

'அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது' என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கூட பலர் தூக்கி எறிந்து விட்டு சமாதிகளையும் அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களையும், கொடி மரங்களையும் வணங்கி வருகின்றனர்.

நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக மாற்றிக் கொண்ட யூதர்கள் மற்றும் ஈஸா நபியைப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

என்றைக்கோ மரணித்து விட்டவர்களிடம் குழந்தை வரம் கேட்கின்றனர்! தமது வறுமையை முறையிடு கின்றனர்! நோய் தீர்க்க வேண்டுகின்றனர்.

சமாதிகளில் காணிக்கை செலுத்துகின்றனர். விழுந்து கும்பிடுகின்றனர்! அறுத்துப் பலியிடுகின்றனர்! நேர்ச்சை செய்கின்றனர்!

இவற்றை இஸ்லாத்தின் பெயரால் தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்று போலி மத குருமார்கள் இவர்களுக்குக் கற்பித்திருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.

முஸ்லிம்களை நிரந்தர நரகத்தில் தள்ளி விடக் கூடிய இந்தப் பாவத்திலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 'தர்கா வழிபாடு' என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.
தர்கா வழிபாட்டுக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்துக்கும் தக்க பதில் தரப்பட்டுள்ளது.

திறந்த மனதுடன் இந்நூலை வாசிக்கும் எவரும் தர்கா வழிபாடு இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் ஏகத்துவக் கொள்கையை எழுச்சி பெறச் செய்வானாக என்று வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

- நபீலா பதிப்பகம்.

இஸ்லாத்தின் அடிப்படை

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.

இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.

இது கற்பனை அல்ல. தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வரலாற்றுச் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அவர்களின் பாட்டானார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைந்துள்ளன.

'வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக!
(அல்குர்ஆன் 10:31)
'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 23:84,85)
'ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா;?' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 23:86,87)
'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 23:88,89)
'வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் 'எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?' (
அல்குர்ஆன் 29:61)
'வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
(அல்குர்ஆன் 29:63)
'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 31:25
'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! 'அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38
'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 43:9)
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
(அல்குர்ஆன் 43:87)
மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் முஹ்யித்தீனே என்று அழைப்பதைக் காண்கிறோம்.
ஆனால் மக்கத்துக் காபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

'இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்' என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது 'நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?' என்று கேட்பீராக! 'இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 6:63, 64)
'உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.
(அல்குர்ஆன் 6:40, 41)
கடலிலும், நிலத்திலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
(அல்குர்ஆன் 10:22)
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.
(அல்குர்ஆன் 17:67)
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 29:65)
மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள்.
(அல்குர்ஆன் 30:33, 34)
முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.
(அல்குர்ஆன் 31:32)
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். 'உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:8)
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 39:49)
மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அலட்சியம் செய்து தன் பக்கமே திரும்பிக் கொள்கிறான். அவனுக்குத் தீமை ஏற்பட்டால் அவன் நீண்ட பிரார்த்தனை செய்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 41:51)
மக்கத்துக் காபிர்கள் மிகப் பெரிய துன்பங்களின் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களைப் பிரார்த்திக்கவில்லை என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

மிகப் பெரிய ஆபத்தின் போது அல்லாஹ்வை மட்டுமே நினைக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த அம்மக்கள் ஏன் இறைவனின் கோபத்திற்கும், கண்டனத்துக்கும் ஆளானார்கள்?

அல்லாஹ்வை அவர்கள் நம்பியிருந்தாலும் அவனது ஆற்றலைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும் வணக்கங்களில் சிலவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களைக் கடவுள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

'இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள்' என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)
'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன' (என்று கூறப்படும்.)
(அல்குர்ஆன் 6:94)
'அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?' என்று கேட்பீராக! 'பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
(அல்குர்ஆன் 39:43, 44)
மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியதுடன் அவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக மற்றவர்களை வணங்கி வந்தனர் என்பதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

மரணித்தவர்களை அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று முஸ்லிம்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பரிந்துரை செய்பவர்களாகத் தானே பெரியார்களைக் கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காபிர்களும் இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன

இந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

சிலைகள் வேறு! சமாதிகள் வேறு!

இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தான்; மகான்களை அல்ல என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.
இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதியையும் சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை. சிலைகளும், சமாதிகளும் இதில் சமமானவை தான்.

மக்கத்துக் காபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர்.

இந்த வாதமும் தவறானதாகும். ஏனெனில் மக்கா காபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும் நல்லடியார்களையும், நபிமார்களையும் தான். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1601, 3352, 4289,
மற்றொரு அறிவிப்பில்  இப்ராஹீம் நபி, மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

நூல்: புகாரி 2351

நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816,
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746,
அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

'சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

வணக்கம் என்றால் என்ன?

'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது' என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர்.

உண்மையில் வணக்கம் என்பது தொழுகை நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அறுத்துப் பலியிடல் வணக்கமே!

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன் 108:2)
இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

'யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3657, 3658, 3659,
'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்கள்: அபூதாவூத், பைஹகீ
அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமே!

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்' என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
(அல்குர்ஆன் 2:270)
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
(அல்குர்ஆன் 22:29)
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.
(அல்குர்ஆன் 76:7)
நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

'யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6696

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

பிரார்த்தனை தான் வணக்கமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364
பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை எனத் தெளிவாக இந்த நபிமொழி அறிவிக்கின்றது.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்' (என்பதைக் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 2:186)
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!  'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:191 195)
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 7:197, 198)
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!  அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:106)
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:20, 21)
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 22:73)
'அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 34:22)
அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(அல்குர்ஆன் 35:13, 14)
'அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?' என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 35:40
என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
(அல்குர்ஆன் 40:43
'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!' என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.
(அல்குர்ஆன் 46:6
இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. தவறான வாதங்கள்

இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

'பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்' என்றே கூறுகிறோம். 'ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்' என்றே நாங்கள் நம்புகிறோம். 'சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?'

இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)
மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.
இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

ஆ. உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு உதாரணங்களைக் காட்டுகின்றனர்.
அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.
இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர்.
ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.
உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.
சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!
யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற அந்த வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?
நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாடும் வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.
நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். வக்கீல், தன் வாதத் திறமையால்  குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார்; நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.
இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா?
யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?
இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?
அல்லாஹ்வைப் பற்றிக் கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 16:74)
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்
(அல்குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக யாருமில்லை.
(அல்குர்ஆன் 112:4)
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.
(அல்குர்ஆன் 36:78)
அல்லாஹ்வுக்கு எதையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

இ. பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

'நாம் பாவங்கள் செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்' என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.
அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பண்பையே மறுக்கிறார்கள்.
'அல்லாஹ் கோபக்காரன்; அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள்' என நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணை வைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ்செயலாகும்.
இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன் 39:53)
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்'
(அல்குர்ஆன் 12:87)
மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் தவறை உணர்ந்து தன்னிடம் கேட்டால் தனது அருள் உண்டு என அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஈ. அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.
(அல்குர்ஆன் 3:169)
மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.
பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.
முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.
அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.
இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன' என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் 3500
உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.
இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.
மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் 'புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!' எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)
அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.
உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். இவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.
உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியாகுமா?
ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? உயிரோடு இருப்பதால் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?
ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளார். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு 'மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்' என்று சிலர் வாதிடுகின்றனர்.

அற்புதங்கள் பற்றி அவர்களுக்கு முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை முன் வைக்கின்றனர்.

'அவ்லியாக்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்' என்ற இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 13:38
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.
(அல்குர்ஆன் 40:78)
'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 14:11)
அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

'இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்' என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) 'என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:90-93)
மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிமார்கள் கொல்லப்பட்டது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 3:112
அல்குர்ஆன் 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.
அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.
நபிமார்கள் துன்பப்பட்டது ஏன்?

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.

அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
திருக்குர்ஆன் 12:110
'அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' (என்றும் கூறினர்.)
திருக்குர்ஆன் 14:12
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
திருக்குர்ஆன் 38:41,42
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
திருக்குர்ஆன் 6:33
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
திருக்குர்ஆன் 6:34
அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப் பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்!  யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே' என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)' என்று அவர்கள் கூறினர். 'எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 12:83-86
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17
'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188
நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு  வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.
நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றார்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். 'அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்' (என்றும் கூறினார்).  (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. 'உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்' என்று கூறியது. 'நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. 'நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்' என்று அவர் கூறினார். 'எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!' (என்றார்).
அல்குர்ஆன் 27:20-28
ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.
சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது 'எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது' என்று ஓர் எறும்பு கூறியது.
அல்குர்ஆன் 27:18
அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.
பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.
ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் 'இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்' என்றான். 'அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? 'என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!' என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்
அல்குர்ஆன் 20:88-90
மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! 'இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்' என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இது போலவே எதிர் காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
இறந்தவரை ஒரு தடவை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தி விட்டனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6599, 1749
ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.
அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
அற்புதங்கள் பல நிகழ்த்திய ஈஸா நபியை அழைக்கும் கிறித்தவர்களைக் காஃபிர்கள் என்று கூறும் இவர்களுக்கு, ஈஸா நபிக்குச் சமமாகாத மற்றவர்களை அழைப்பது ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.
பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.
ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.
மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்ம் 3084
உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது; இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?
அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? ஸாமிரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.
நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?
அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.
செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை. 'இவரெல்லாம் ஒரு மகானா' என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.
மாறாக 

கோவில்களில் நடக்கின்றன. 

சர்ச்சுகளில் நடக்கின்றன.
இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.
இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.
அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும் போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேயின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 7:34,
'அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன்  10:49
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:61
எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் கேட்கின்றனர்.
கனவுகள் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.
'யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 110, 6197,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும் எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
கனவில் வரக்கூடியவர் 'நான் தான் அப்துல் காதிர் ஜிலானி' என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜிலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து 'நான் தான் அப்துல் காதிர் ஜிலானி' எனக் கூறலாம்.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு - தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு - அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தவன் ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது.
கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்தித்திராத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.
கனவில் அப்துல் காதிர் ஜிலானியைப் பார்த்ததாகக் கூறுவோர் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜிலானி என்று கண்டு பிடித்தார்கள்?
கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்னைக் கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் உங்களிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
ஒரு மகானையே கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. நல்ல நோக்கத்திற்காகவும், சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளை அல்லாஹ் காட்டுவான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.
எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல, அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.
உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம்.
ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.
நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.
நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்களை முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.
நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6990,
நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.

மறுமையில் பரிந்துரை

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்றும் கூறுகின்றனர்.
பரிந்துரை பற்றி சரியான விளக்கம் இல்லாதது தான் இந்த வாதத்தின் அடிப்படை.
எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத, எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:48)
அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?
(அல்குர்ஆன் 2:255)
அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 10:3)
அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.
(அல்குர்ஆன் 20:109)
யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது.
(அல்குர்ஆன் 34:23)
இந்த வசனங்களையும் இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன் சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற கருத்தைப் பெற முடிகின்றது.
ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும் அவர்களின் அனைத்துப் பரிந்துரைகளும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது.
நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும் தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை ஏற்படுத்தப்படும். 'அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே' என்று நான் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம் நீர் அறிய மாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான் கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)
நூல்: புகாரி 4635, 4740, 6526, 6576, 6585, 6586, 7949
மற்றொரு அறிவிப்பில் 'இவர்கள் என் தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். முஹம்மதே உமக்குப் பின்னால் இவர்கள் உருவாக்கியதை நீர் அறிய மாட்டீர் என்று கூறப்படும்' என வந்துள்ளது.
மக்களெல்லாம் தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோரிடம் சென்று விட்டு அவர்களெல்லாம் மறுத்து விட முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது 'நான் ஸஜ்தாவில் விழுவேன். எவ்வளவு நேரம் என்னை (அந்த நிலையில் கிடக்க) அல்லாஹ் நாடினானோ அவ்வளவு நேரம் விட்டு விடுவான். பிறகு 'முஹம்மதே! (தலையை) உயர்த்துவீராக! கூறு! அது கேட்கப்படும். பரிந்துரை செய்! அது ஏற்கப்படும்! கேள்! கொடுக்கப்படுவாய்' என்று இறைவன் கூறுவான். நான் தலையை உயர்த்தி என் இறைவன் கற்றுத் தந்த விதமாகப் புகழ்ந்துரைத்து விட்டுப் பரிந்துரை செய்வேன். அந்த பரிந்துரைக்கும் இறைவன் சில வரம்புகளை ஏற்படுத்துவான். (அதாவது குறிப்பிட்ட சில தகுதியுடையவர்கள் விஷயத்தில் மட்டும் பரிந்துரைக்க அனுமதிப்பான்) நான் அந்தத் தகுதி உள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் சேர்ப்பிப்பேன். இப்படியே பலமுறை நடக்கும். ஒவ்வொரு தடவையும் ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின் பரிந்துரைக்க வரம்பு ஏற்படுத்துவான். யாரைக் குர்ஆன் தடுத்து விட்டதோ அவர்களைத் தவிர. அதாவது யாருக்கு நிரந்தர நரகம் என்று ஆகி விட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களை நரகிலிருந்து வெளியேற்றுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மிகவும் நீண்ட ஹதீஸின் சுருக்கம் இது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸிலிருந்து பரிந்துரை செய்தல் மறுமையில் உண்டு என்பதையும் இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் அறியலாம்.
மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்பதையும் பின் வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.
'எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை, என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 296
நபிமார்கள் மற்றும் பெரியார்களின் பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை சமாதி வழிபாட்டுக்காரர்கள் உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பது இறைவனது தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை வைத்தலில் இறங்க மாட்டார்கள்.
வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.
(அல்குர்ஆன் 53:26)
அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
(அல்குர்ஆன் 21:28)
அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது.

பரிந்துரை செய்யும் அதிகாரம் நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது. யாரை, எப்போது, யாருக்காகப் பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம் இறைவனுக்கேயுரியது என்ற காரணத்தினால் தான் - மக்கத்து காஃபிர்கள் இறைவனை மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களைக் காஃபிர்கள் என்று இறைவன் பிரகடனம் செய்தான்.

வஸீலா தேடுவது தவறா?

அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
(அல்குர்ஆன் 5:35) என்று கூறுகிறான்.
அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிடும் காரணத்தினால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர்.
அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது.
ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள்.
வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏறுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.
அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.
அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது இதன் பொருள் அல்ல.
இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.
நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களும் அடங்குவர்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான். முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.
இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.
வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.
வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.
'முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்' அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்
இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக்கவில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?
எனவே வஸீலாவுக்கு இடைத்தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.
நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.
'இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்' என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். 'இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்' என்று கேட்பார்.
'இன்னார் பொருட்டால் இதைத் தா' என்று இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.
'நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா' என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா? 'நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய்?' என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.
ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித்தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்று நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.
எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

ஸியாரத் ஒரு நபிவழியல்லவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.
இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காகச் துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.
எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.
இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.
அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி 974
இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.
ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் இந்த ஹதீஸ் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது 'இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும்' என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.
அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ, அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.
இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.
ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.
இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.
ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.
எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.
என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1621, 1622
எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(அல்குர்ஆன் 9:113)
நபிகள் நாயகத்தின் தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸியாரத் நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவுபடுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610,
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816,
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873,
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.
எனவே ஸியாரத்துக்கும் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மனிதர்களிடம் உதவி தேடுதல்

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுங்கள் என்று நாம் கூறும் போது மற்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள்
நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்பதே  அந்தக் கேள்வி.
இது பற்றி விவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 5:2) இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.
மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதி உதவி தேடுவதை மட்டுமே இஸ்லாம் மறுக்கிறது.
இறந்தவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை.
ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே அநேக வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.
இறந்தவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான்.
மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்தவருக்கும் அவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

இரண்டாவது வித்தியாசம்

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.
இறந்தவரை அணுகுபவனின் நம்பிக்கை இப்படி இல்லை. 'இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது' என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

மூன்றாவது வித்தியாசம்

ஒரு மருத்துவரை அணுகும் போது 'இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது' என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.
இறந்தவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.
மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று ஒருவன் நம்புகிறான்.
இறந்து போனவரின் கேட்கும் திறனோ, இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

நான்காவது வித்தியாசம்

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

ஐந்தாவது வித்தியாசம்

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.
ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.
உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போல் அமைந்துள்ளன.
ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

இணை வைத்தலின் விளைவுகள்

தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகமாகும். ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.

இவர்கள் ஒரு காலத்திலும் சொர்க்கத்தில்  நுழைய முடியாது.

இணை வைத்தல்' என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)
'மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். 'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் கூறினார்.
(அல்குர்ஆன் 5:72)
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். 'உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:8)
'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65, 66)
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன் 6:88)
'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், 'அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ' (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918
இறைவனின் இந்தக் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்