திருடர்கள் எல்லாம் திருடர்கள் அல்ல!

திருடர்கள் எல்லாம் திருடர்கள் அல்ல!



சிறையில் வேலைவாய்ப்பு முகாம்: விசாரணை கைதிகள் 35 பேருக்கு பணி நியமன உத்தரவு செய்தி படித்தேன்.
பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி என்பது போன்று உங்களுக்கு தோண்றும். உண்மையை அறிந்தால், பாராட்டுவதற்கு இதில் ஒன்றுமில்லை. மாறாக, தாங்கள் செய்கின்ற குற்றங்களுக்கு பரிகாரமாகவே இதுபோன்ற புண்ணியச் செயல்களைச் செய்து தங்களுக்கு இருக்கும் கெட்ட பெயரை, நற்பெயராக்கி கொள்ள முனைகிறார்கள். அவ்வளவே! இதற்கு இப்படியொரு செய்தி விளம்பர வேறு.
ஆம்! குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விட்டு, உங்களிடம் நல்ல பேர் வாங்க நினைப்பதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை.
இச்செய்தியில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளதே ஒழிய, இன்ன குற்றம் என்று குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. ஏன் தெரியுமா? அது என்ன குற்றம் தெரியுமா? அனைத்தும் திருட்டுக் குற்றங்களே ஆகும். இதுவும் அதிகபட்சம் ஆயிரக்கணக்கிலான அற்ப திருட்டாகவே இருக்கும்.
வயிற்றுக் பசிக்காக திருடும் ஆயிரக்கணக்கான திருட்டை கூட, நான் ஒருபோதும் நியாயப்படுத்துவதில்லை. ஆனாலும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், வாரிசுகளுக்காகவும் கோடிக்கோடியாக கொள்ளையடிக்கும் பணப் பேய்களை, மக்களின் தண்டனையில் இருந்து பாதுகாப்பு என்று பெயரில் காப்பாற்றும் காவல் ஊழியர்கள், அற்ப திருடர்களை புகைப்படம் பிடித்து ஆங்காங்கே வைத்து மகிழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அற்பத்தனமே இருக்கிறது. சரி,

1. என்ன மாதிரியான குற்றத்தை புரிபவர்கள் என வெளிப்படையாக சொல்லாமல் மறைக்க வேண்டியதன் உள்நோக்கம் என்ன என்ன?
2. திருட்டு வழக்குகளில் மாட்டுவோரின் நிலையென்ன?
3. திருட்டு குறித்து சட்டம் சொல்வது என்ன?
4. இத்திருட்டைப் புரிபவர்கள் எப்படி அடிக்கடி பிணையில் அல்லது நிரந்தரமாக வெளியில் வருகிறார்கள்?
5. மீண்டும் ஏன் அடிக்கடி அது போன்ற திருட்டுக் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்?
6. திருட்டை காவல்துறையும், நீதித்துறையும் வளர்ப்பது எப்படி?
என்பது பற்றிய எனது ஆராய்ச்சியை சற்றே விரிவாக விலக்குகிறேன்.
திருட்டுக் குற்றச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் மீது எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதுபோலவே, அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்கை போடும் காவல்துறை மீதும், அதை கண்டு கொள்ளாத நீதித்துறை மற்றும் சிறைத்துறை மீது பல்லாயிரம் மடங்கு இருக்கிறது.
ஆம்! இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 379 இன்படி, திருட்டு குற்றத்துக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இச்சிறை தண்டனையை சூழ்நிலையைப் பொறுத்து இத்தண்டனைச் சட்டத்தின் பிரிவு 60 இன்படி கடுங்காவலாகவும் விதிக்க முடியும்.
ஆமாம்! கடுங்காவல்னா என்ன?
வெறுங்காவல் என்றால் தண்டனைக் காலம் முழுவதையும் வேளை வேளைக்கு சாப்பிட்டும், தூங்கியுமே பொழுதை கழிக்க வேண்டும். கடுங்காவல் என்றால், சிறையில் வேலை செய்ய வேண்டும். இதற்கு சட்ட விதிகளின்படியான திறன் கணக்கிடப்பட்டு குறைந்த பட்ச கூலியும் கொடுக்கப்படுவதுண்டு.
ஆனால், தீர்ப்பில் கடுங்காவல் தண்டனையாக குறிப்பிட்டு இருந்தாலும் குற்றவாளியைப் பொருத்தும், அவர் கொடுக்கும் லஞ்சத்தைப் பொருத்தும் வேலை கொடுக்கப்படுவதில்லை. சில சிறைச்சாலைகளில் வேலை கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை.
முதன் முதலாக திருடி அகப்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இப்போதெல்லாம், காவல் ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்களை விட சிறையில் இருப்பவர்களுக்குதான் சட்டம் அதிகமாக தெரிகிறது. முதல் முதலாக திருடியவர் மற்ற திருட்டுக் கைதிகளின் ஆலோசனையை கேட்டால் தப்பித்து விடுவார். இல்லை என்றால், அவர் நிரந்தர திருட்டு குற்றவாளியாகத்தான் ஆக்கப்படுவார்.
முதல் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், பிணையில் வந்து விட்டால் காவல் ஊழியர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியாகி விடும். ஏனெனில், கண்டு பிடிக்க முடியாமல் கிடக்கும் பல்வேறு வழக்குகளையும் அகப்பட்டவன் தலையில் கட்டி மீண்டும் உள்ளே தள்ளி விடுவார்கள்.
பின் அப்படி அகப்பட்டவருக்கு உற்றார், உறவினர் நண்பர்கள் மூலம் வழக்கை ஒப்புக் கொண்டால் குறைந்த பட்ச தண்டனைதான் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி தூது அனுப்புவார்கள்.
எப்படியோ வெளியில் வந்தால் போதும் என்று நினைக்கும் அத்திருடன், காவல் ஊழியர்களின் ஆசை வார்த்தைக்கு இணங்கி ஒரு வக்கீலை பிடித்து, அவர்களின் அற்ப ஆலோசனையின் பேரில் வழக்கை விசாரணை செய்யாமலே தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக கூறி விடுவிக்க கேட்டு வக்கீல் மூலம் குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 428 இன் கீழ் விடுதலை செய்ய கோருவார்கள்.
அதாவது அவ்விதியானது ஒருவர் ஒரு குற்றச்சாற்றின் பேரில் விசாரணைச் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதாவது ஒருவர் குற்றச்சாற்றின் பேரில் இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து பிணையில் வந்தப்பின், விசாரணை முடிவில் ஆறுமாதம் தண்டனை வழங்கப்பட்டால், ஏற்கனவே சிறையில் இருந்த இரண்டு மாதம் இந்த ஆறு மாதத்தில் கழிந்து, நான்கு மாதங்களுக்கு மட்டுமே சிறை வைக்க வேண்டும்.
ஆனால், இவர்களோ இதனை சிறையில் இருந்த காலத்தை மட்டும் தண்டனையாக விதித்து விடுதலை செய்ய வேண்டும் என எழுத்து மூலம் பகிரங்கமாகவே கோரிக்கை வைப்பார்கள். அதை அப்படியே ஏற்று நீதி வழங்கும் ஊழியர்களும் அத்திருடர்களை தண்டித்தும், விடுவித்தும் தீர்ப்பு எழுதி விடுவார்கள். இப்படியொரு ஏமாற்று வேலை பெரும்பாலும் திருட்டு வழக்குகளில் மட்டுமே நடக்கிறது.
இத்தீர்ப்புதான் காவல் ஊழியர்களுக்கு, அத்திருடன் மீது மேன்மேலும் வழக்கு போட தகுந்த ஆதாரம். குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 294 இன் கீழ், முன்பாக குற்றவாளி என ஒப்புக் கொண்டதன் பேரில் வழங்கப்பட்ட தீர்ப்பை தக்க சான்று ஆதாரமாக இணைத்தும் சுட்டிக்காட்டியும் கூட்டுச்சேர்ந்து மீண்டும் மீண்டும் அதிகபட்சமாக சிறையில் இருந்த காலத்தை மட்டுமே தண்டனையாக கொடுத்து ஒரு முறை திருடியவரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு செய்து விடுவார்கள்.
ஆம்! எனக்கு தெரிந்து திருட்டு குற்றத்துக்காக நூறு முறைக்கு மேல் சிறை சென்றவர்களும் உண்டு.
மொத்தத்தில், திருட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்பது எனக்குத்தெரிய எவருக்குமே கொடுக்கப்படவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அபராதம் என்பது அறவே விதிக்கப்படுவதில்லை. ஆனால் திருடிய பணம் அல்லது பொருளின் பண மதிப்பை அபராதமாக விதிக்க முடியும்.
ஆனால், அப்படி விதித்தால் சம்பந்தப்பட்டவருக்கு அல்லது அரசாங்கத்துக்கு போய் விடும் என்பதால், அப்படி விதிக்காமல் மூவரும் கூட்டு சேர்ந்து கறந்து விடுவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இதை ஈடுசெய்து கொடுப்பதற்காகவே ஒரு சிலர் மீண்டும் திருட ஆரம்பித்து விடுவர். அப்பத்தானே இவர்களுக்கும் தொடர்ந்து வழக்கு மற்றும் வருமானம் கிடைக்கும்.
சரி, அது என்ன கண்டு பிடிக்க முடியாத வழக்கு?
கதவை, பூட்டை அல்லது வேறு ஏதாவது பொருளை உடைத்து திருடினால் அது திருட்டு அல்ல; கொள்ளை. அச்சம்பவத்தின் ஈடுபட்டவர்கள் குறித்த தடயம் கிடைக்கவும், அதை வைத்து அக்கொள்ளையர்களை கண்டு பிடிக்கவும் சிற்சில சமயங்களில் வாய்ப்பு உண்டு. பிக்பாக்கெட், பிளேடு போடுதல் உள்ளிட்ட மற்ற வகையில் திருடும் எத்திருட்டையும் காவல்துறையால் கண்டு பிடிக்கவே முடியாது.
இப்படிப்பட்ட திருட்டுகளை கிராமங்களில் மை போட்டு கண்டு பிடிப்பதாக சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து எனக்கு தெரியாது. உண்மையாக இருந்தால், கண்டு பிடிக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைத்து, அதற்கான கூலியை காவல் ஊழியர்களில் கூலியில் இருந்து பிடித்தம் செய்து கொடுத்து விடலாம்.
இதனால், திருட்டுப் பொருளும், உண்மையான திருடர்களும் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்பதோடு, பல திருடர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் தப்பிப்பார்கள். மை போடும் கிராமத்து மக்களுக்கும் கனிசமான வருமானம் கிடைக்கும். எத்தனை நன்மைகள் பார்த்திர்களா?
ஆனால், பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதற்காக மேற்கொள்ளும் சிறப்பு பயிற்சிகள் குறித்தெல்லாம் ஆய்வு செய்துள்ளேன். சமயம் வரும் போது அது குறித்து சொல்கிறேன்.
நான் சட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மூன்றாவது வருடமான 2003 ஆம் ஆண்டில், தலைமறைவு கைதி ஒருவர் எங்களை  அலுவலகத்தில் சந்தித்து, இப்படி ஒரு முறை திருடி விட்டு, அதை ஒப்புக் கொண்ட ஒரே காரணத்தால், அவர்மீது தங்களின் கையாளாகாத் தனத்தால் கண்டு பிடிக்க முடியாத பனிரெண்டு வழக்குகளை தமிழக கொலைத்துறை போட்டு விட்டு கைது செய்ய தேடிக் கொண்டிருப்பதாக கூறி, சட்ட ஆலோசனை கோரினார்.
தலைமறைவாக இருப்பதே குற்றம் என்பதால் உடனே சரண்டர் ஆகி விடுங்கள். பின் நாங்கள் என்ன செய்ய முடியுமோ செய்கிறோம் என்று கூறினோம். அவரும் காவல் ஊழியர்களின் அடி உதைக்கு பயந்து கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவர் சொன்னது போலவே, அவர் மீதான பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி அவரை பெரிய குற்றவாளியாக அறிக்கை தயார் செய்து குண்டர் தடுப்பு காவலிலும் வைத்தது. அதை எதிர்த்து அதற்கான சிறப்பு அமர்வில் மேல் முறையீடு செய்தும் பலனில்லை.
அவரை சிறைக்கு சென்று சந்தித்த நான், நீங்கள் பிணையில் வரவே முயற்சி செய்யாதீர்கள். விடுதலையாகிதான் வெளியில் வர வேண்டும். இதில் இன்னொரு நன்மை, சட்டம் படிப்பதற்கு சிறைதான் மிகச்சரியான இடம். இவ்வழக்கு தொடர்பான வெளி வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். அவரும் இசைந்தார்.
குண்டர் சட்டம் தொடர்பான வழக்கு ஆவணங்களை எல்லாம் படித்து பார்த்ததில், அவ்வழக்குகள் எல்லாம் முதல் நோக்கிலேயே சுத்தப்பொய் என, வழக்குகளில் உள்ள சாட்சிகளை பற்றிய விபரங்களின் உணர முடிந்தது.
சாட்சிகள் எப்படியிருக்க வேண்டும்?
சாட்சிகள் என்பவர்கள் யார்? அவர்களது மதிப்பும் கடமையும் என்ன என்பது நீதிமன்ற ஊழியர்கள் எவருக்குமே தெரியவில்லை. நீதிமன்ற ஊழியர்களுக்கே தெரியாத போது சாட்சிகளுக்கு எப்படி தெரியும்? தெரியவும் வாய்ப்பில்லைதானே!
ஆதலால், நீதிமன்ற ஊழியர்கள் சாட்சிகள் தங்களின் அடிமைகள் என்று கருதுவதைப் போலவே, சாட்சிகளும் கருதுகிறார்கள். ஆனால், சட்டப்படியான உண்மை இதுவல்ல.
சாட்சி என்பவர்கள் சமுதாயத்தில் நிலவும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு, குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிப்பதற்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு உதவுபவர்கள். ஆதலால், அவர்கள் கன்னியம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் சாரம். இப்படி கன்னியமாக உங்களுக்கு உதவுபவரை, நீங்கள் இந்த நேரத்தில்தான் எனக்கு உதவ வேண்டும் என சொல்ல முடியுமா? முடியாதுதானே! அப்படி சொன்னாலும் கூட, செய்ய மாட்டார்கள்தானே?
ஆனால், நமது அறிவு வறுமை நீதிமன்ற ஊழியர்கள் என்ன செய்கிறார்கள்? உங்களின் ஓய்வு நேரம், வசதி என எதைப்பற்றியும் உங்களிடம் கேட்காமல் தான்தோண்றித்தனமாக, இந்த தேதியில் இத்தனை மணிக்கு என் முன் ஆஜராகி சாட்சி சொல் என்றுதானே அழைப்பானை (சம்மன்) அனுப்புகிறார்கள். இதை விட முட்டாள்தனமாக சம்மனின்படி போகவில்லை என்றால், சாட்சியை பிடித்து கொண்டு வர காவல் ஊழியர்களுக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கிறார்களே!
குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 170(2) இன்கீழ், சாட்சியான நீங்கள், என்னை இந்த தேதியில் இத்தனை மணிக்கு அழைத்து விசாரியுங்கள் என எழுதிக் கொடுக்கும் தேதி மற்றும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் உங்களை அழைக்க அவர்களுக்கு எந்த விதமான சட்ட அருகதையும் கிடையாது. அப்படியே முட்டாள்தனமாக அழைத்தாலும் நீங்கள் சட்டப்படி வர (போக) வேண்டியதில்லை என்பதை தெளிவாக விளக்குங்கள்.
இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா, சட்டம் படித்த நீதிமன்ற ஊழியர்களின் முட்டாள்தனம்.
சரி நம்ம விசயத்திற்கு வருவோம்.
இவ்வழக்கில், குண்டர் சட்டத்தில் அடைக்க அவர்கள் தயார் செய்து கொடுத்திருந்த ஒட்டு மொத்தமான வழக்கு அறிக்கை எனது கடினமான ஆய்வு வேலைகளை எல்லாம் மிக எளிமையாக்கி விட்டது.
காவல் ஊழியர்கள்தான் புலனாய்வு செய்ய முடியும் என்பதில்லை. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 2(8) இன்படி, சம்பந்தப்பட்ட நடுவரின் (நீதிபதியின்) அனுமதியைப் பெற்று எவர் வேண்டுமானாலும் புலனாய்வு செய்ய முடியும்.
ஆனால், இவ்விதியின்படி இதுவரை காவல்துறை அல்லாத யாரும் புலனாய்வு செய்ததாக தெரியவில்லை. இப்படியொரு விசயம் இருப்பது வக்கீல்களுக்கு தெரிவதில்லை. வக்கீலாய் இருந்து நீதிபதிகளான நீதிபதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்து விடும்? மேலும், இது போன்ற திருட்டு வழக்ககளில் இவர்களின் கூட்டுக் கொள்ளை இருக்கும் போது, நம்மை எப்படி அனுமதிப்பார்கள்?
எனவே, இவ்விவகாரத்தில் தேவையில்லாமல் அனுமதி கேட்டு மனு போட்டு தள்ளுபடி, மேல்முறையீடு என ஏன் போராட வேண்டும்? சட்டம் நீதிபதிகளின் பாட்டன் முப்பாட்டன் சொத்து அல்லவே. யாவருக்கும் உரியதுதானே!
ஆதலால், என்ன ஆனாலும் சரி, அதிகபட்சம் சிறைக்குதானே போகப்போகிறோம். அதற்காகத்தானே காத்திருக்கிறோம்,  என்றெண்ணி அனுமதி பெறாமலே புலனாய்வில் இறங்குவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். உடனே, சாட்சிகள் குறித்த முகவரிக்கு புலனாய்வு செய்யச் சென்றேன். அங்கு அப்படிப்பட்ட சாட்சிகளோ, வீடுகளோ, ஏன் தெருக்களே கூட இல்லை.
ஆம்! ஒரு சாட்சியின் முகவரி திருவள்ளுவர் நகர், பனிரெண்டாவது தெரு என கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் நான் நேராக புலானாய்வுக்கு சென்ற போது அந்த நகரில் அதிகபட்சம் பத்து தெருக்களே இருந்தது. எனது அனுபவத்திலான முதல் நோக்கு பார்வையும் மிகச்சரியாகவே இருந்தது.
பொதுவாக இப்படிப்பட்ட பொய்சாட்சிகள் எல்லாம் காவல் ஊழியர்களின் அறிக்கையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாக குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் சுண்டல், தேனீர் போன்றவைகளை கையில் தூக்கிக் கொண்டு விற்பனை செய்யும் நபர்களாகவே இருப்பர். இவர்கள் மாட்டிக் கொள்ள நேர்ந்தால், எங்களுக்கு எதுவுமே தெரியாது. இதில் கையெழுத்து போடங்கள் என்று கேட்டார்கள். நாங்கள் போட்டோம் என்று தப்பித்து விடுவார்கள். அல்ல அல்ல, தப்பிக்க வைக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட அம்முகவரியில் அப்படியொரு சாட்சிகளே இல்லை என்பதை எப்படி நிருபிப்பது என எனது பாணியில் மிகச் சுருக்கமாக யோசித்து அஞ்சலகம் மூலம் கடிதம் அனுப்புவது என முடிவெடுத்து அதன்படியே அஞ்சலட்டையை அனுப்பினேன்.
ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாமே, நான் மேற்சொன்ன முறையில் ஏதோ ஒரு காரணத்தை பின் குறிப்பாக எழுதி அஞ்சல் துறையால் திருப்பி அனுப்பப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றது. இவைகள் இப்போது இந்திய அரசின் சான்றுகள் ஆகி விட்டன. சுமார் ஐந்து ரூபாய்க்கான அஞ்சலைட்டைகள் நீதிக்கு ஆவணங்களாய் அமைந்தன.
கை நீட்டி காசு வாங்கிய கட்சிக்காரருக்காக இப்படி எந்த வக்கீலும் கூட செய்யமாட்டார்கள். இப்படியெல்லாம் யோசிக்க நம்மை போன்று அறிவு வேண்டுமே! அய்யோ பாவம், அதற்கு அவர்கள் எங்கே போவார்கள்?
அவ்வஞ்சல் அட்டைகளை எல்லாம் எனது வாசகராக சிறையில் தனக்குத்தானே சட்டம் படித்துக் கொண்டிருந்த அக்கைதியிடம் கொடுத்தேன். வழக்கு விசாரணை நாட்கள் வந்தன. எனது புலனாய்வை அறியாத பொய் வழக்கு போட்ட காவல்துறை, முகவரியில்லாத சாட்சிகளை எல்லாம் நீதிமன்றத்தில் நிறுத்தியது.
ஏழாவது மட்டுமே படித்துள்ள அக்கைதி சட்டக் கோவிந்தன் அப்பொய் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வழக்கே பொய் என நிருபித்தார். பொய்வழக்கு போட்ட காவல்துறை ஊழியர், இதற்கு மூலக்காரணமாக இருந்த என்னை அனுகி சாட்சிகள்தான் பொய். ஆனால், சட்ட கோவிந்தன் உண்மையான திருட்டு குற்றவாளிதான் என்று சமாதானம் பேசினர்.
சான்றுகளின் அடிப்படையில் சட்டம் ஒருவருக்கு நீதிவழங்கும் என்னும் போதும், உண்மையான குற்றவாளிக்கு ஏன் பொய்சாட்சி போட்டீர்கள்? செய்த குற்றத்தில் இருந்து அவரை தப்பிக்க விடவா? அதுவும் குற்றம்தானே என ஒரு பிடிபிடித்தேன். தான் தப்பித்தால் போதும் என்று சத்தமில்லாமல் போய் விட்டார்.
நான் புலனாய்வு செய்து திரட்டிக் கொடுத்த சான்றுகளின் அடிப்படையில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு தனக்குத்தானே வாதாடிய சட்ட கோவிந்தன் பதினோரு பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலையானார்.
ஆனால், எனக்கு தெரியாமல் ஒரு வழக்கை மட்டும் வக்கீலிடம் கொடுத்திருந்தார். அவ்வக்கீலோ அவ்வழக்கில் மிகவும் அற்(ப, புத)மாக வாதாடி தனது திறனுக்கு தக்கவாறு ஏழு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையை பெற்று தந்து விட்டார். மேலும், மேல்முறையீடு செய்து அதில் பிணையும் வாங்கி கொடுத்து விட்டதால், சுமார் ஐந்து வருடமாக சென்னையில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதற்கு மேலும் பொய் வழக்கு போட முடியாது என்று புரிந்து கொண்ட காவல் ஊழியர்கள், இவரை நைசாக அணுகி பாம்பின் கால் பாம்பரியும் என்பது போல, திருடர்களைப் பற்றி உனக்குதான் நன்றாக தெரியும். ஆதலால், அடையாளம் காட்டு உன்னை விட்டு விடுகிறோம் என கேட்டுள்ளார்கள்.
ஆனால், இவரோ அத்திருடர்களை கண்டு பிடிப்பதுதான் உங்களுக்கு வேலை. அதற்காகத்தான் எங்களின் வரிப்பணத்தில் கூலி கொடுக்கப்படுகிறது. ஆதலால், நீங்களே கண்டு பிடியுங்கள் என சொல்லி விட்டாராம். வேறு வழியில்லாமல் போய் விட்டார்கள்.
ஆட்டோ ஓட்டும் அவரிடம், அதன் லாப நட்டம் குறித்து விசாரித்ததில், ஆட்டோ ஓட்டுனர்கள் வாங்கும் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு வாங்கினாலே அவர்களுக்கு வாடகை போக நல்ல லாபம் கிடைக்கும் என்றும், அதன் மற்ற ரகசியங்களையும் கூறினார். ஆனால், மற்ற ஆட்டோ நண்பர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசை காட்டவே, அவ்வாறே சென்று, மித மிஞ்சிய பணத்தால், குடிக்கு அடிமையாகி விட்டார்.
இதனை அறியாத நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்த போது, ஓ! குவாட்டர் கோவிந்தன கேட்குறீங்களா என்று கேட்டதும், சட்டக் கோவிந்தன், குவாட்டர் கோவிந்தனாக மாறியது குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவர் நினைத்தால், தமது ஆட்டோவில் பயணம் செய்ய வரும் நபர்களுக்கு உள்ள பிரச்சினைகளை கேட்டரிந்து சட்ட ரீதியாக எவ்வளவோ விதங்களில் உதவலாம். ஆனால், இப்படி பலன் பெற்றவர்கள் எல்லாம் சுய நலத்தோடு இருந்து விடுகின்றனர்.
இவருக்கு உள்ள வழக்கு, சிறை, வாதாடிய நீதிமன்ற அனுபவங்களை எல்லாம் நூலாக எழுதினால், நிச்சயமாக எனது அனுபவங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். எப்படியாவது, குடிப்பதை நிறுத்தி புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்.
இவரை ஊற்சாக மூட்டுவதற்காகவே நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நடித்துள்ள 500&5 www.inneram.com/opinion/.../five-hundred-and-five-5294.html படத்தில் ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கவும் வைத்துள்ளோம்.
இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட, சட்டக் கோவிந்தனுக்கு சென்னை பெரியமேடு காவல் ஊழிய ஆய்வாளர் ரூ நான்காயிரம் லஞ்சம் கொடுக்காவிட்டால் பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டியுள்ளதாகவும், என்ன செய்யலாம்  எனவும் ஆலோசனை கேட்டார். ஆலோசனை சொல்லியுள்ளேன்.
இவைகள் எல்லாம் கம்ப சூத்திரமல்ல. வாய்ப்பிருந்தால், நீங்களே இப்படிப்பட்ட கைதிகளை விசாரணை செய்து பாருங்கள். சாட்சிகளை சென்று பாருங்கள். நான் சொன்ன உண்மைகள் எல்லாம் உங்களுக்கே அனுபவத்தில் தெரியவரும்.
www.inneram.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை