ஜனாஸா வீட்டில் நடந்தேறும்அனாச்சாரங்கள்


ஜனாஸா வீட்டில் நடந்தேறும் அனாச்சாரங்கள்.
இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிகழ்வது நிச்சயம். நாம் பிறக்க முன்பே எமது இறப்பின் காலமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.ஒருவர் மரணிக்கும் தருவாயில் இருந்து மையத்தை அடக்கம் செய்த பிறகு வரை எம் சமுதாயத்தில் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கத்துக்கு முரணான பல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) யாஸீன் சூரா ஓதுதல்
மரணிக்கும் தருவாயில் இருப்பவருடைய மரண வேதனையை குறைக்கச் செய்வதற்காக அவரைச் சூழ அவரது உறவினர்கள் யாஸீன் சூராவை ஓதிக் கொண்டிருப்பர். இறந்த பின்னும் மையத்துக்கு அருகில்   இருந்து கொண்டும் ஓதுவர். இதனை நமக்கு அல்லாஹ் ஏவியுள்ளானா? முஹம்மது நபி அவர்கள் செய்தி காட்டியுள்ளார்களா? என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை என்பதே ஆணித்தரமான பதிலாகும்.
“உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்” என்று நபிகள் நாயகம்    (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் 1523,1524
      “உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாஇலாஹ இல்லல்லாஹ்       என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாஇலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர்    என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று நபி (ஸல்)      அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : இப்னு ஹிப்பான் 7/272
2) ஜனாஸா வீட்டுக்கு வருபவர்களுக்கு உபசரித்தல்
அநேகமான ஜனாஸா வீடுகளில் அவ்வீட்டுக்கு சமூகமளிக்கும் அனைவருக்கும் அருந்துவதற்கு பானங்கள் பரிமாறிக் கொண்டிருப்பதையும் கண்கூடாக காணலாம். ஒரு சந்தோஷமான   காரியம் நிகழ்ந்தால்      அச்சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக விருந்தளிப்போம். ஆனால்   ஒரு துக்கமான சம்பவம் நடந்திருக்கும் போது உண்மையிலேயே    இவ்வாறு விருந்தோம்பல் செய்வது    சரியான காரியமா? நாம்    துக்கத்தில் இருப்பவர்களின் உணவுத்   தேவைகளை நிவர்த்தி செய்வதை      விட்டு விட்டு பாதிக்கப்பட்வர்களே      வருவோர் போவோருக்கெல்லாம் உண்ணக் குடிக்கக் கொடுப்பது எந்த      விதத்தில் நியாயம்?
     ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள்       நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு “ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல் : அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599
ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்ற    மாத்திரத்திலேயே சிற்றுண்டிகளை உடனடியாக பகிர்ந்தளிக்கும் காட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனாஸாவை கொண்டு      சென்ற சந்தோஷத்தில் உண்டு குடிப்பது போன்று இருக்கின்றது இந்த    காரியம். அதுவும் போதாது என்று 3ஆம் கத்தம், 7ஆம் கத்தம், 40ஆம்     கத்தம் என்று விருந்தின் பட்டியல் நீண்டு கொண்டு 1ஆம் வருடம்   வரை செல்கின்றது.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களது மனைவிமார், பிள்ளைகள், பேரக்குழந்தை உட்பட பலர் மரணித்துள்ளார்கள். அவ்வனைவருக்கும் இந்த மாதிரி விருந்து கொடுத்தார்களா? அல்லது கொடுக்கும் படி சொன்னார்களா? இந்தக் கேள்வியை இந்த பித்அத்தை செய்யும் ஆதரவாளர்களிடம் கேட்டால் “மரணித்தவருக்கு நன்மை சேர்க்கத் தானே கொடுக்கின்றோம்” என்று தான் கூறுவார்களே தவிர மார்க்கத்தில் இருக்கின்றதா என்று தேடி பார்க்க மாட்டார்கள்.
3) 40 நாட்கள் / ஒரு வருட துக்கம் அனுஷ்டித்தல்
அநேகமான வீடுகளில் ஒருவர் மரணித்து 40 நாட்கள் அல்லது ஒரு வருடம் செல்லும் வரை அவ்வீட்டினர் எந்த விதமான சந்தோஷமான காரியங்களுக்கும் பங்கெடுப்பதோ அல்லது அவற்றை தமது வீடுகளில்     செயற்படுத்தவோ மாட்டார்கள். இது முற்றுலும் நபி வழிக்கு      முரணானது. ஆடம்பரம், அநாச்சாரம் அரங்கேருகின்ற விருந்துகள் எப்போதும் தவிர்க்க வேண்டியது தான். அது மரணம் நிகழ்ந்தாலும்      நிகழா விட்டாலும் சரியே.
“இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
அபூ ஸுஃப்யான் மரணித்த செய்தி கிடைத்ததும் அவரது மகள் உம்மு ஹபீபா (நபிகள் நாயகத்தின் மனைவி) அவர்கள் மூன்றாம் நாள் அன்று மஞ்சள் நிற நறுமணத்தைக் கொண்டு வரச் சொல்லி தமது விலாவிலும், கையிலும் தடவிக் கொண்டாரகள். “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் பெண்கள், கணவர் தவிர மற்றவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தைக் காட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்கா விட்டால் இந்த நறுமணம் எனக்குத் தேவையற்றது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைனப் (ரலி)
நூல்: புகாரி 1279, 1280, 1282
துக்கம் அனுஷ்டிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே உச்ச வரம்பை நிர்ணயிக்கும் போது இதனை 40 நாட்கள் என்றும் ஒரு வருடம் என்றும் மாற்றம் செய்ய எமக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
4) ஸலாம் கொடுத்தல்
ஜனாஸா வீடுகளில் ஜனாஸாவை அடக்க கொண்டு சென்றது தொடக்கம் ஸலாம் கொடுக்கும் சமாச்சாரம் பரவலாக காணப்படுகின்றது. முதலில் கவனிக்க வேண்டியது ஸலாம் என்றால்     என்ன? ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகமலர்ச்சியுடன்      கூறுகின்ற முகமனே ஸலாம் ஆகும். அதை எந்த நேரத்திலும் சொல்லிக் கொள்ளலாம். ஸலாம் கூறுவதற்கு நன்மைகள் கூட பதியப்படுகின்றன. அதை விட்டு விட்டு ஏதோ சம்பிரதாயத்திற்காக      மரண வீட்டு ஸலாம் இடம் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இப்படி ஜனாஸா வீடுகளில் ஸலாம் கொடுக்கும் பழக்கத்தை அவனது ரஸுலோ நமக்குக் காட்டித் தரவில்லை.
“நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242
“(மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸயீ 1560 
எனவே மார்க்கத்தில் இல்லாத இந்த பித்அத்தான் காரியங்களை விட்டும் நாமும் தவிர்ந்து, அதில் ஈடுபடுபவர்களையும் தடுத்து, நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
sltjweb.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை