நோன்பின் சட்டங்கள்



நோன்பின் சட்டங்கள் 

நோன்பு

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:184
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.
மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.
இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.
நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நோன்பின் நோக்கம்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?
நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1893, 1903
நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.
எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?
வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1945
மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1894, 1904
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.
மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 38, 1901, 2014
பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.
நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை. இவர்கள் ஒவ்வொரு நோன்பை விடுவதற்காக ஒரு ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும்.

1. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி 4505
இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.
பின்னர், ரமளானை அடைபவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும், தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.
ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.
நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.
ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளித்தல் என்பது வசதியுள்ளவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் தான் சாத்தியமாகும். சாத்தியமில்லாதவர்கள் சமுதாயத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை என்று அல்லாஹ்வே கூறியுள்ளான்.
(பார்க்க: அல்குர்ஆன் 6:152, 7:42, 23:62, 2:286, 65:7, 2:223)
ஒரு நபித்தோழர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த போது, அவரிடம் பரிகாரம் செய்ய ஏதுமில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்.
(இந்த ஹதீஸ், நோன்பை முறிப்பதற்கான பரிகாரம் என்ற தலைப்பில் விரிவாகப் பின்னர் இடம் பெற்றுள்ளது.)
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலும், இந்த நபிவழியின் அடிப்படையிலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள், ஏழைக்கு உணவளிக்கவும் சக்தி பெறவில்லை என்றால் அவர்கள் எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள்.
ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 2839, 4423
இறைவன், அடியார்கள் விஷயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முதுமையின் காரணமாகத் தான் நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர் எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

2. நோயாளிகள்

நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184
நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.
இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.
பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.
ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.

3. பயணிகள்

பயணிகளுக்கு அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184
இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.
பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது குறித்து விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சேர்த்துள்ளார்கள்.
ஒருவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கிறார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.
பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா என்ற நபித்தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள். என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் ஊருக்குள் தானே இருக்கிறீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உபைத் பின் ஜப்ர்
நூல்கள்: அஹ்மத் 25974, அபூதாவூத் 2059
ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டாவிட்டாலும், பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார். பயணிகளுக்குரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் நோன்பு நோற்றவராக இருக்கும் போது பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. வைத்த நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது, நோன்பு மக்களுக்குச் சிரமமாக உள்ளதால் உங்கள் முடிவைத் தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. அஸர் தொழுகைக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அருந்தினார்கள். அதைக் கண்ட சிலர் நோன்பை விட்டனர். வேறு சிலர் நோன்பைத் தொடர்ந்தனர். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்த போது,அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1878
ரமளான் நோன்பை நோற்ற பின் பயணம் மேற்கொண்டால் அந்த நோன்பை முறிக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் தந்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட பின் (பயணத்திலேயே) நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் முறித்தார்கள். மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறாகும்.
ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நோன்பு வைத்தவர்களாகத் தான் புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில், வழியில் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.
மேலும் குராவுல் கமீம் என்ற இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலைவில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை. காலையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் உள்ளது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாததாகும்.
எனவே பயணத்தில் நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பயணத்தில் நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் அந்த ஹதீஸ் அமைந்திருப்பது உண்மை தான். ஆயினும் வேறு பல சான்றுகளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1943
நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். (விட்டு விடுங்கள் என்று கட்டளையாகக் கூறாததால்) இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம். சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஸ்ஆ
நூல்: முஸ்லிம் 1888
நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களில் நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
பயணத்தில் நோன்பு நோற்பது குற்றமென்றால் இதன் பிறகு நபிகள் நாயகத்துடன் மேற்கொண்ட பயணங்களின் போது நோன்பு நோற்றிருக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பயணத்தின் தொடர்ச்சியிலேயே நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.
பயணத்தில் நோன்பை விடுவது சலுகை தானே தவிர கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
அப்படியானால் நோன்பை விடாதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் கூற வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் அதைக் காட்டி விட்டு அருந்தியுள்ளார்கள். இதைக் கண்ட பிறகு உடனே அதைப் பின்பற்றுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் ஒரு செயலைச் செய்து காட்டிய பிறகும் அதற்கு மதிப்பளிக்காவிட்டால் அந்த வகையில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கருதுவது தான் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுடன் மோதாமல் இருக்கும்.
பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி)
நூல்: முஸ்லிம் 1891
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது தான் சிறப்பானது என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
பயணத்தில் நோன்பு நோற்கவே கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு மனிதருக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவர் நோன்பு வைத்திருக்கிறார் என்று மக்கள் விடையளித்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பயணத்தில் நோன்பு நோற்பது நல்ல காரியங்களில் அடங்காது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1946
அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை, மிகச் சிறந்த காரியமாகக் கருதியதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) மறுத்தார்கள் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் எடுத்துக் காட்டிய பல ஹதீஸ்களுடன் இது முரண்படும் நிலை ஏற்படும்.
ஒருவர் பயணம் மேற்கொண்டு வேறு ஊரில் சில நாட்கள் தங்குகிறார். தங்கும் காலத்தில் அவர் பயணத்தை மேற்கொள்ளாவிட்டாலும் வெளியூரில் இருப்பதால் அவரும் பயணிக்குரிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்பு நோற்றவர்களாகப் போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமளான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4275, 4276
ரமளான் மாதம் பிறை 20ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. எஞ்சிய பத்து அல்லது ஒன்பது நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்தும் நோன்பு நோற்கவில்லை. எனவே வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் வெளியூரில் இருக்கும் வரை நோன்பை விட்டு விட அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் விடுபட்ட நோன்பைப் பின்னர் நோற்றுவிட வேண்டும்.

4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 508
மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.
சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.
மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது.
புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.
அல்லாஹ் எந்த மனிதருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்க மாட்டான்.
அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.
அல்குர்ஆன் 10:44
அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
அல்குர்ஆன் 4:40
மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகும்.

5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: நஸயீ 2276
இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?
இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

ரமளான் மாதத்தை முடிவு செய்தல்

நோன்பைக் கடமையாக்கிய இறைவன், யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். இவ்வசனத்தை ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
ரமளான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத் தான் அடைவார்கள் என்பதால் தான், யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் மதீனாவில் பிறை காணப்பட்ட போதெல்லாம் அந்தச் செய்தியை தம்மால் இயன்ற அளவுக்கு அறிவிக்குமாறு எந்த ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. நான்கு கலீபாக்கள் காலத்திலும் இத்தகைய ஏற்பாடு எதையும் செய்யவில்லை.
மாதத்தை எப்படி முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.
நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவக்குங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909, 1907
மேக மூட்டமாக இருந்தால் வானில் பிறை இருப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது. எனவே உயரமான உஹது மலை மீது ஏறிப் பாருங்கள் என்றோ, அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றோ கூறாமல், பிறை பிறக்கவில்லை என்று முடிவு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியினரை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதைப் பின்வரும் நிகழ்ச்சி மேலும் உறுதி செய்கின்றது.
என்னை உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு அலுவலுக்காக அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த அலுவலை முடித்தேன். நான் அங்கே இருக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமளானின் முதல் பிறையைப் பார்த்தேன். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனா வந்தடைந்தேன். என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) விசாரித்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறை பார்த்தோம் என்று கூறினேன். நீ பிறை பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் பார்த்தேன். மக்களும் பார்த்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்களே மறு பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை நாங்கள் நிறைவு செய்யும் வரை நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரலி) பிறை பார்த்ததும், அவர்கள் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், போதாது! இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம் 1819

நோன்பின் நேரம்

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
அல்குர்ஆன் 2:187
இவ்வசனத்தில் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும் அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும்.
தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவு மூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லது நான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.)
இவ்வாறு நிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும் நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும்.
எந்த நேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம் நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்பு நோற்கிறேன் என்பது தான் அதன் பொருள்.
எனவே 5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம்.
இன்னொரு அறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
சுபுஹ் நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம். 5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில் ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது.
அதாவது சுபுஹ் நேரம் வருவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
ஸஹர் முடிவும், சுபுஹ் நேரத்தின் துவக்கமும் ஒன்று தான். ஸஹர் முடிந்த மறு வினாடி சுபுஹ் ஆரம்பமாகி விடும். ஸஹர் முடிவுக்கும், சுபுஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை.
எனவே எப்போது சுபுஹ் நேரம் ஆரம்பமாகிறதோ அதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் வரை உண்ணவும் பருகவும் அனுமதி உள்ளது.
சுபுஹிலிருந்து நோன்பு ஆரம்பமாகின்றது என்றால் எது வரை நோன்பு நீடிக்கின்றது?
பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! அல்குர்ஆன் 2:187
இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது அவசியம்.
மார்க்கம் பற்றிய அறிவு இல்லாத சிலர், ரமளான் அல்லாத நாட்களில் பகல் வரை சாப்பிடாமல் இருந்து விட்டு அரை நோன்பு வைக்கும் வழக்கம் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.
நோன்பு என்பது சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை முழுமையாக வைக்க வேண்டுமே தவிர அரை நோன்பு, முக்கால் நோன்பெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.
சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகி விடுகின்றது. ஆனாலும் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறக்கும் வழக்கம் பெரும்பாலான ஊர்களில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.
நோன்பு துறப்பதைப் பத்து நிமிடம் தாமதமாகச் செய்வது பேணுதலான காரியம் என்று இவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.
சூரியன் மறையும் வரை என்ன? அதற்கு மேலும் என்னால் பட்டினி கிடக்க முடியும் என்று நினைப்பதும், நடப்பதும் ஆணவமான செயலாகத் தான் கருதப்படுமே தவிர பேணுதலாக ஆகாது.
இறைவா! நான் பசியைத் தாங்கிக் கொள்ள இயலாத பலவீனன். நீ கட்டளையிட்டதற்காகத் தான் இதைத் தாங்கிக் கொள்கிறேன் என்ற அடக்கமும் பணிவும், விரைந்து நோன்பு துறக்கும் போது தான் ஏற்படும்.
என் அடியானைப் பாருங்கள்! எப்போது சூரியன் மறையும் என்று காத்திருந்து மறைந்தவுடன் அவசரமாகச் சாப்பிடுகிறான். இவ்வளவு பசியையும் எனக்காகத் தான் இவன் தாங்கிக் கொண்டான் என்று இறைவன் இத்தகைய அடியார்களைத் தான் பாராட்டுவான்.
இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இப்படித் தான் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957
இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1954
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கு அம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே!என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1941, 1955, 1956, 1958, 5297
இன்னும் பகல் உள்ளதே என்று அம்மனிதர் சுட்டிக் காட்டிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூரியன் மறையும் நேரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத பேணுதலை யார் கண்டுபிடித்தாலும் அது நமக்குத் தேவையில்லை.

ஸஹர் உணவு

சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறித்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1836
ஸஹர் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்

ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர்.
ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும்.
ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.
பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.
பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 621, 5299, 7247
மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.
நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919
சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.
நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.
நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.
ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ் செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.
மாற்று மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.
இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத் தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது.
ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?
கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

விடி ஸஹர்

தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.
உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.
சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.
இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.
அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.

அதிகமாக உண்பது

நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.
மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.
நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.
நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.
நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.
அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.

நிய்யத்

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி 1
தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும்.
நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர்.
குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும்.
நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.
ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் முழுவதும் எதையும் உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் நோன்பு வைப்பதாக இவர் எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால் சாப்பிடிருப்பார். நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளா விட்டாலும் நோன்பு நோற்கும் தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை. இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.
ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார். நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதன் காரணமாகவே இவர் இப்படி நடந்து கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்து விட்டார். இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில் படுக்கும் போதே ஸஹருக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படுக்கிறார்.
இது தான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. நோன்பு நோற்பதாக மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே சரியானதாகும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவதற்கு நிய்யத் என்ற நம்பிக்கை நடைமுறையில் உள்ளது.
நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா என்பது தான் அந்தக் குறிப்பிட்ட வாசகம்.
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று தமிழாக்கம் வேறு செய்து அதையும் கூற வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? அதுவுமில்லை. அவர்களிடம் பாடம் கற்ற நான்கு கலீபாக்களோ, ஏனைய நபித் தோழர்களோ இவ்வாசகத்தைக் கூறினார்களா? என்றால் அதுவும் இல்லை.
நான்கு இமாம்களாவது இவ்வாறு கூறியுள்ளார்களா? என்றால் அது கூட இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எங்கேயும் இந்த வழக்கம் இல்லை. இந்தியாவிலும், இந்தியர்கள் போய்க் கெடுத்த இலங்கை போன்ற நாடுகளிலும் தவிர வேறு எங்கும் இந்த வழக்கம் இல்லை.
நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைத்தல் என்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கற்றுத் தராததாலும் இதை விடடொழிக்க வேண்டும்.
யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால் அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
மேலும் நிய்யத் என்ற பெயரில் சொல்லித் தரப்படும் வாசகத்தின் பொருளைச் சிந்தித்தால் கூட அது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதாகவே உள்ளது.
ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்பது இதன் பொருள்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மஃக்ரிபிலிருந்து ஆரம்பமாகிறது. இஸ்லாம் பற்றிய அறிவு பெரிய அளவில் இல்லாதவர்கள் கூட நாளை வெள்ளிக்கிழமை என்றால் வியாழன் பின் நேரத்தை வெள்ளி இரவு என்றே கூறும் வழக்கமுடையவர்களாக உள்ளனர்.
ஒருவர் ஸஹர் நேரத்தில் நாளை பிடிப்பதாக நிய்யத் செய்கிறார். ஆனால் உண்மையில் இன்று தான் நோன்பு நோற்கிறாரே தவிர நாளை அல்ல! ஏனெனில் ஸஹரைத் தொடர்ந்து வரக் கூடிய சுபுஹ் இன்று தானே தவிர நாளை அல்ல!
இதைச் சிந்தித்தால் கூட இது மார்க்கத்தில் உள்ளது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை விட்டுவிட்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே நிய்யத் எனப்படும்.

நிய்யத் செய்யும் நேரம்

நோன்பு நோற்கும் நிய்யத்தை, அதாவது முடிவை எப்போது எடுக்க வேண்டும்?
கடமையான நோன்புக்கும், கடமையில்லாத நோன்புக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.
ரமளான் அல்லாத நோன்பாக இருந்தால் நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் சுபுஹ் தொழுத பின்பு கூட எடுத்துக் கொள்ளலாம்.
காலையில் சுபுஹ் தொழுது விட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டில் உண்பதற்கு எதுவும் இல்லை. பட்டிணியாகத் தான் அன்றைய பொழுது கழியும் போல் தெரிகிறது. நோன்பு நோற்பதாக முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் சுபுஹ் நேரம் வந்தது முதல் எதுவும் உண்ணாமல் இருந்திருக்க வேண்டும்.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்பதற்கு) ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம். அப்போது அவர்கள், நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்று கூறினார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், ஹைஸ் எனும் (நெய், மாவு, பேரீச்சம்பழம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஒரு வகை) உணவு அன்பளிப்பாக வந்துள்ளது என்று கூறினோம். அதற்கவர்கள், நான் நோன்பு நோற்றுள்ளேன். இருந்தாலும் கொண்டு வா என்று கூறி விட்டுச் சாப்பிடலானார்கள். கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்பவர் போலாவார். விரும்பினால் செய்யாமலும் இருக்கலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1951
கடமையில்லாத நோன்பைப் பொறுத்த வரை காலையில் கூட அது குறித்து முடிவு செய்யலாம் என்பதையும், விருப்பமான உணவு தயாராக இருந்தால் கடமையில்லாத நோன்பை முறிக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆனால் கடமையான நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் எடுக்கக் கூடாது. ஏனெனில் அது நமது விருப்பத்தின் பாற்பட்டது அல்ல. சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சுபுஹ் முதலே நோன்பாளியாக நாம் இருக்க வேண்டும் என்றால் சுபுஹுக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவை நாம் எடுத்து விட வேண்டும்.

பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்

தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு அறியாமையையும் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.
நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விடுவதுண்டு. இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் உடலும், மனமும் உணவில் பால் நாட்டம் சொண்டிருக்கும். இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல் அல்ல! மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட ஒரு செயலாகும்.
மல ஜலத்தை அடக்கிய நிலையிலும், உணவு முன்னே இருக்கும் போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 869
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 5465, 671
இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத் தொழுகையை விட, பசியைப் போக்குவது முதன்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப் நேரத்தில் அதிகமான பசியும், உணவின் பால் அதிக நாட்டமும் இருக்கும். இந்த நேரத்தில் மனதை உணவில் வைத்து விட்டு, உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப நேரமும், ஒரு முடிவு நேரமும் உள்ளது. முடிவு நேரத்துக்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும். பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான் விடலாமே தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது. மஃக்ரிப் தொழுகையைப் பொறுத்த வரை சூரியன் மறைந்தது முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம் நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.
ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது என்று (4:103 வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 594
பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில் உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற உணவுகளை உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைப் பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்.

நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை

தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி அபூதாவூத் (2011)
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511
பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239
ஷுஅபுல் ஈமான் - பைஹகீ 3747
அத்தஃவாத்துல் கபீர் - பைஹகீ (426)
அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் - இப்னுல் முபாரக் (1388,1390)
அஸ்ஸுனனுஸ் ஸகீர் - பைஹகீ (1102)
பழாயிலுல் அவ்காத் - பைஹகீ (141)
அல்மராஸில் - அபூதாவூத் (95)
ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.
மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.
இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார்.
இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்
அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து
இந்த வாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இச்செய்தியையும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரே அறிவிக்கிறார். நாம் முன்னர் முஆத் பின் ஸஹ்ரா என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.
லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்
இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது.
இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து
இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும்
அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும்
கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும்
அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார்.
ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்
எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!
அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து
இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.
இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: லிஸானுல் மீஸான்
இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.
ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ

நோன்பு துறந்த பின், தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் எனும் துஆவை ஓதுவது நபிமொழி என்று நாம் கூறி வந்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.
எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல!
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.

நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்

இஸ்லாமிய மார்க்கத்தில் மாதம் என்பது 29 நாட்களாகவும் சில வேளை 30 நாட்களாகவும் அமையும். இதை அறியாத சிலர் மாதம் 29 நாட்களில் முடியும் போது ஒரு நோன்பு விடுபட்டு விட்டதாக நினைக்கின்றனர்.
நினைப்பது மட்டுமின்றி விடுபட்டதாகக் கருதி அந்த ஒரு நோன்பைக் களாச் செய்யும் வழக்கமும் சிலரிடம் உள்ளது. ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. 29 நாட்களில் மாதம் நிறைவடைந்தாலும் 30 நாட்களில் நிறைவடைந்தாலும் ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குவான். முப்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் 30 நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று கூறியிருப்பான். எனவே இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். நன்மை என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்குப் போய்விடக் கூடாது.

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.
நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.
இவை தவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057
எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டுப் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது.
பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் தான் முஸ்லிம்களிடம் நோன்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் - அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1894, 1904, பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையே தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
நோன்பு நோற்றவர் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.
இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711 இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது சம்பந்தமாகத் தான் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. உண்பதன் மூலமும், பருகுவதன் மூலமும் நோன்பை முறித்தால் இவ்வாறு பரிகாரம் செய்யுமாறு ஹதீஸ்களில் கூறப் படவில்லை. ஆயினும் செய்கின்ற காரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். உடலுறவின் போது எவ்வாறு இறைவனது கட்டளை மீறப்படுகிறதோ அது போல் தான் உண்ணும் போதும் மீறப்படுகிறது. உடலுறவு எப்படி நோன்பை முறிக்குமோ அப்படித் தான் உண்பதும், பருகுவதும் நோன்பை முறிக்கும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் உடலுறவை விட உண்ணுதல் கடுமையான விஷயமாகும். ஏனெனில் சில சமயங்களில் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி உடலுறவு ஏற்பட சாத்தியம் உள்ளது. உண்ணுதல், பருகுதல் தன்னை மீறி ஏற்படக் கூடியதல்ல. எனவே உடலுறவு கொள்வதற்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் உண்பதற்குப் பரிகாரம் இல்லை என்ற கூற முடியாது. பரிகாரம் செய்து விடுவதே பேணுதலுக்குரிய வழியாகும். இந்த ஹதீஸில் உடலுறவில் ஈடுபட்ட கிராமவாசிக்குப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அவரது மனைவியைப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடவில்லை. எனவே நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும். மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த ஹதீஸில் மனைவி குறித்து ஏதும் கூறப்படாவிட்டாலும் இவர்களின் வாதம் சரியானதல்ல! திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சட்டங்கள் ஆண்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறப்பட்டுள்ளன. பெண்களுக்கு மட்டும் என்று பிரித்துக் கூறப்படாத எல்லாச் சட்டங்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
ஒருவர் வந்து தனது குற்றம் குறித்து முறையிட்டதால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது அவருக்கு மட்டுமுரியது என்று யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்தக் குற்றத்தை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது தான் சட்டம் என்று எடுத்துக் கொள்வோம். அவரது மனைவி விஷயமாகவும் இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் என்பது, குறிப்பிட்ட குற்றத்திற்குரியதே அன்றி குறிப்பிட்ட நபருக்குரியதல்ல! அவரிடம் கூறினால் அவர் போய் தனது மனைவியிடம் கூறாமல் இருக்க மாட்டார்.
மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் மனைவியின் செயல் குற்றமில்லை என்று ஆகிவிடும்.
பரிகாரம் செய்தவுடன் முறித்த நோன்பையும் களாச் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நேரடியாக இது குறித்து எந்த ஹதீஸ்களும் இல்லாததே இரு வேறு கருத்துக்கள் ஏற்படக் காரணமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களில் எது பேணுதலான முடிவோ அதையே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் விடுபட்ட ஒரு நோன்பையும் களாச் செய்து விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்.

நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1933, 6669
அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1927
நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2039
இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி 1926, 1930, 1932
தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்

நோன்பு நோற்றவர் நோன்பு துறக்கும் முன் குளிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாகத் தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். நூல்கள்: அஹ்மத் 22107, அபூதாவூத் 2018
நோன்பாளி உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காகக் குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம். சில பகுதிகளில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும் விரல்களால் அடைத்துக் கொண்டு குளிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். காதுகள் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ தண்ணீர் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. காதுகளுக்குள்ளேயும் மூக்குக்கு உள்ளேயும் தண்ணீர் செல்வது நோன்பை முறிக்கும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை. காதுகளையும், மூக்கையும் அடைக்காமலே தண்ணீரில் மூழ்கிக் குளிக்கலாம். நறுமணம் பயன்படுத்துதல் நோன்பு நோற்றவர்கள் குளிக்கும் போது வாசனை சோப்புகள் போடக் கூடாது என்றும், உடம்பிலோ ஆடையிலோ நறுமணம் பூசிக் கொள்ளக் கூடாது என்றும் பலர் நினைக்கின்றனர். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் நறுமணம் பூசுவதைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளிக்கு இத்தகைய தடை எதனையும் பிறப்பிக்கவில்லை. நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது. நோன்பு நோற்றவர் பல் துலக்குதல் நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்வுக்கு கஸ்தூரியை விட விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதைத் தவிர இவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை. இந்த வாதம் ஏற்க முடியாத வாதமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை வாயில் உற்பத்தியாவதில்லை. காலியான வயிற்றிலிருந்து தான் அந்த வாடை உற்பத்தியாகின்றது. பல் துலக்குவதால் நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை நீங்கிவிடப் போவதில்லை. எனவே இவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை வலியுறுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நோன்பாளி பல் துலக்கலாம்.
நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் கை விரலாலோ, பல் துலக்கும் குச்சியாலோ தான் பல் துலக்க வேண்டும் என்றும் பல்பொடி, பற்பசை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கு சுவை இருக்கிறது என்று காரணம் கூறுகின்றனர். பற்பசைக்குரிய சுவை பற்பசையில் உள்ளது போலவே சாதாரண குச்சியிலும் அதற்குரிய சுவை இருக்கத் தான் செய்கிறது. எனவே சுவையைக் காரணம் காட்டி இதைத் தடுக்க முகாந்திரம் இல்லை.
தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் போது கூட தண்ணீரின் சுவையை நாக்கு உணரத் தான் செய்யும். இவ்வாறு உணர்வதற்குத் தடையேதும் இல்லை. உண்பதும், பருகுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியவர் பல் துலக்கிவிட்டு விழுங்க மாட்டார். எனவே இதைத் தடை செய்ய சரியான காரணம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
உணவுகளை ருசி பார்த்தல் உணவு சமைக்கும் போது, போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பது பெண்களின் வழக்கமாக உள்ளது. நோன்பு நோற்றவர் இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். மேலே நாம் சொன்ன அதே காரணங்களால் இதையும் தடுக்க முடியாது. எச்சிலை விழுங்குதல் நோன்பு நோற்றவர்கள் வாயிலிருந்து ஊறும் எச்சிலை அடிக்கடி உமிழ்ந்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோன்பினால் ஏற்பட்ட வறட்சியை இதன் மூலம் இவர்கள் மேலும் அதிகமாக்கிக் கொள்கின்றனர். எச்சிலை விழுங்கக் கூடாது என்றோ, அடிக்கடி காரி உமிழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கட்டளையிடவில்லை.
நோன்பாளி உணவை ருசி பார்த்தல், குளித்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல் போன்றவை நபித் தோழர்கள் காலத்தில் நோன்புக்கு எதிரானதாகக் கருதப்பட்டதில்லை. பிற்காலத்தில் வந்த அறிவீனர்கள் தான் இதை நோன்புடன் சம்பந்தப்படுத்தி விட்டனர். புகாரியில் நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. க்ஷி இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்து, தன் மீது போட்டுக் கொள்வார்கள். க்ஷ சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். க்ஷி வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி கூறினார். க்ஷி உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள். க்ஷி என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ் (ரலி) கூறினார்கள். க்ஷி பச்சையான குச்சியால் பல் துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார். அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள் தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது. ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள்.
இது புகாரி 1930வது ஹதீஸுக்கு முன்னால் உள்ள பாடத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தக் காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு, புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன. இரத்தத்தை வெளியேற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டத்திலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். இந்த வழக்கம் இன்றைக்கு ஒழிந்து விட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி)
நூல்: திர்மிதீ (705) இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது, இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 182)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ
நூல்: புகாரி 1940
நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம். நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுகோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவதற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது. மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து மற்றொரு நாளில் முறித்த நோன்பை களாச் செய்யலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றினால் அது கூடாது என்று கூறலாம். ஏனெனில் குளுகோஸ் என்பது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே இது அமையும். இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல! உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலைமையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொறுத்த வரை கடமையாகவும் ஆகிவிடும். ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான்.
நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.
அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும். ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.
நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1952
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953
புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள். இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இல்லாத கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். இறந்தவரின் சொத்துக்களுக்கு மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் இறந்தவர்களை அது குறித்து அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.
சிறுவர்கள் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர்களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சியளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை இத்தகைய கட்டளை ஏதும் நபிகள் நாயகத்தினால் பிறப்பிக்கப்படவில்லை. பருவமடைந்தவர்களுக்கே பயணத்தில் இருப்பதாலும், நோயாளியாக இருப்பதாலும், கர்ப்பிணியாக இருப்பதாலும் நோன்பிலிருந்து மார்க்கம் சலுகையளித்துள்ளது. எனவே சிறுவர்களை தொழுகையைப் போல் கட்டாயப்படுத்தி நோன்பு நோற்குமாறு வற்புறுத்தக் கூடாது.
தொழுகைக்குப் பலவிதமான நடைமுறைகள், ஓத வேண்டியவை உள்ளன. அவற்றையெல்லாம் சிறுவயது முதலே கற்றுப் பயிற்சி எடுக்கும் அவசியம் உள்ளது. ஆனால் நோன்பைப் பொறுத்த வரை பருவமடைந்தால் அடுத்த நாளே நோன்பைக் கடைப்பிடிக்க முடியும்.
அதே நேரத்தில் சிறுவர்களுக்குச் சக்தியிருந்தால் அவர்களையும் நோன்பு நோற்கச் செய்ய அனுமதி உள்ளது. அனுமதி தானே தவிர அவசியமில்லை. ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்தது. இந்த நோன்பு குறித்துப் பின்வரும் செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆஷுரா தினத்தில் நாங்களும் நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால் விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம். அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி)
நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2092
இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள் என்பது தான் தெரிகிறது. அவர்கள் தொழுகைக்குக் கட்டளையிட்டது போல் கட்டளை இடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் ஆஷுரா நோன்பு என்பது ஒருநாள் மட்டுமே நோற்கும் நோன்பாகும். ஒரு நாள் என்பதால் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டலாம். ரமளான் நோன்பு ஒரு மாதம் முழுவதும் உள்ள நோன்பாகும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து சிறுவர்கள் நோற்றதாக எந்த ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சிறுவர்கள் நோன்பு நோற்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்களையும் நோன்புக்குப் பயிற்றுவிக்கலாம். நாகூர் ஹனீஃபாவின் ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன் என்ற கட்டுக் கதையை நம்பி சிறுவர்களை நோன்பு நோற்கச் சொல்லி சாகடித்து விடக் கூடாது.

நூலின் பெயர்: நோன்பு

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்