பெற்றோரைப் பேணுவோம்
பெற்றோரைப் பேணுவோம்
தாய் படுகொலை, தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை என்றெல்லாம் செய்தி வெளிவருவது இன்று சர்வ சாதாரணமாக விட்டது. பரபரப்பாக பத்திரிகையில் வெடித்துச் சிதறும் இந்த செய்"தீ'க்களைப் பார்க்கிறோம். கொலையாளி யார் என்று படித்துப் பார்த்தால் பெற்ற மகனே கொலை செய்திருக்கின்றான் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மாதா பிதா குரு தெய்வம் என்று முதலில் மாதாவையும் கடைசியில் தெய்வத்தையும் தள்ளி பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகின்ற தமிழகத்தில் தான் இந்தக் கோர நாடகம் பட்டப் பகலில் பலருக்கும் முன்னிலையில் அரங்கேறுகின்றது. இது தாய் தந்தையர் மீது அவர்களது பிள்ளைகள் நடத்துகின்ற உச்சக்கட்ட கோர கொலை வெறித் தாக்குதலாகும்.
இதற்கு அடுத்ததாக இடம் பெறும் கொடுமை அந்தப் பெற்றோர்களை அடிப்பது, அவர்களுக்கு உண்ண உணவு கொடுக்காது, உடுத்த உடை கொடுக்காது துன்புறுத்துவதாகும்.
இதற்கு அடுத்தபடியாக இடம் பெறும் கொடுமை, அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகும். அவர்கள் நோய்வாய்ப்பட்டு அல்லலுறும் போது அவர்களை நா கூசாமல், "சனியனே! தொலைந்து போக வேண்டியது தானே! செத்து தொலை!''என்று அவர்கள் மீது எள்ளும் கொள்ளுமாய் - கொதிக்கும் எண்ணையாய் எரிந்து விழுவது பலருக்கு பழகிப் போன ஒரு பாவமாகி விட்டது.
இது போன்று திட்டுவது மூன்றாவது கட்டக் கொடுமை என்று கொள்ளலாம். இந்த மூன்றாவது கட்டக் கொடுமையில் முஸ்லிம்கள் அதிகமான அளவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள இரு தீமைகளில் முதலாவது தீமை முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லை. இரண்டாவது மிகக் குறைந்த அளவிலும் மூன்றாவது தீமை மிக அதிக அளவிலும் இடம் பெறுகின்றது. இதற்குக் காரணம் இதை ஒரு பெரும் பாவமாகக் கருவதுவது கிடையாது. அதனால் தான் இந்தத் தீமை சர்வ சாதாரணமாக முஸ்லிம்களிடம் பரவி நிற்கின்றது.
ஆனால் இஸ்லாம் இதை வெறும் பாவமாக அல்ல! பெரும் பாவமாகக் கருதுகின்றது. அதனால் தான் திருக்குர்ஆனில் தாய், தந்தையர்களுக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய அறக் கடமைகளைப் பற்றி, அருட்பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் 17:23,24)
சீ! என்று கூறாதே என்று சொல்லி தனது போதனையை அல்லாஹ் துவக்குகின்றான். அத்துடன் மேற்கண்ட பிரார்த்தனையையும் கேட்குமாறு கட்டளையிடுவதன் மூலம் நம்முடைய சின்னஞ்சிறிய பிஞ்சுப் பருவத்தில் கொஞ்சு மொழி பேசி, கனிவுடனும் கருணையுடனும் அவர்கள் நம்மை வளர்த்த அந்தக் காலகட்டத்தைக் கொஞ்சம் நமது காய்ந்து போன கல் மனங்களில் நினைவு எனும் நீர்த்திவலைகளைக் கொண்டு பசுமைப் படுத்திவிடுகின்றான்.
மனிதா! நீ பிறப்பதற்கு முன் அந்தத் தாயின் கருவில் கனத்து, அவளின் கண்களில் தூக்கம் தழுவுவதைத் தடுத்தாய்! பிறந்த பிறகு கைகளிலும் மடியிலும் மார்பிலும் தவழ்ந்து அவளின் இராப் பொழுது நித்திரையைக் கலைத்தாய்! உனக்கு உடலில் ஒரு வலி என்றால் உன் தாயும் தந்தையும் இரவில் தூக்கமின்றி எப்படி தவியாய் தவித்தனர் என்று அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்க்கும் வகையில் அதை நமது மனத் திரையில் கொண்டு வரச் செய்கின்றான்.
இதையெல்லாம் மனிதன் ஒரு கணம் எண்ணிப் பார்க்கும் போது ஒரு போதும் தாய் தந்தையரைத் திட்டுவதற்குத் துணிய மாட்டான். அதிலும் குறிப்பாக மனிதன் தன் பெற்றோர் மீது பொறுமை மேற்கொள்ள வேண்டிய கட்டம் அவர்கள் தள்ளாத வயதில் நோய் வாய்ப் படுக்கையில் கிடந்து அல்லலுறும் போது தான். படுக்கையை அவர்களது சிறுநீறும், மலமும் நனைத்து துர்வாடை கிளம்பி நம்மை முகஞ் சுளிக்கச் செய்யும். வாய், "சீ' என்ற வார்த்தையை முனுமுனுக்கச் செய்யும். நம்முடைய தாய் தந்தையரின் படுக்கையை, ஆடைகளை எத்தனை முறை நாம் சிறுநீரால் நனைத்து அவர்களைக் குளிரில் நடுங்கச் செய்தோம், நமது குடலிலிருந்து புறப்பட்ட சாணத்தால் அவர்களது ஆடையில் சந்தனம் பூசினோம் என்பதை நாம் அந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தோமானால் இந்த முகச் சுளிப்பும் முனுமுனுப்பும் பறந்து போய்விடும்.
இங்கு தான் அல்லாஹ் நம் வாயிலிருந்து வார்த்தைகள் "சீ' எனும் வடிவத்தில் கூட வந்து விடக் கூடாது என்று கூறுகின்றான். அவர்கள் ஓடியாடித் திரிந்த காலகட்டத்தில் நம்முடைய வார்த்தைகள் அவர்களைப் பெரிதாகப் பாதித்து விடாது. அதனால் அந்த சமயத்தில் திட்டலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அது எப்போதுமே கூடாது தான். குறிப்பாக அவர்கள் முதுமை அடைந்த பருவத்தில் இதுபோன்ற சின்னச் சின்ன எரிச்சல் வார்த்தைகளைக் கூட நாம் பயன்படுத்தி விடக் கூடாது என்று அல்குர்ஆன் நம்மை எச்சரிக்கை செய்கின்றது.
இதன் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் விஷயம் "சீ' என்ற வார்த்தையைக் கூட தாய் தந்தையருக்கு எதிராகக் கொட்டி விடக் கூடாது எனும் போது - வாயே நீளக் கூடாது எனும் போது கை நீளலாமா? ஒரு போதும் கூடாது. இதன் தீமையை இன்னும் நாம் உணர வேண்டுமாயின் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்க்க வேண்டும்.
பெரும் பாவங்களின் பட்டியலில் தாய் தந்தையருக்கு மாறு செய்வதையும் ஒரு பெரும் பாவமாக நபி (ஸல்) அவர்கள் கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு வரும் பாவம் வெட்டுவதா? அடிப்பதா? அல்லது திட்டுவதா?இந்தத் தீமைகளில் எதையுமே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை. இங்கு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வார்த்தைப் புலமை வெளிப்படுகின்றது. நறுக்குத் தெறிக்கும் வார்த்தைகளில் பெரும் கருத்துக் குவியலை உள்ளடக்கி, சுருக்கிப் பேசும் அதி அற்புத சொற்கலைத் திறன் அவர்களிடமிருந்து புறப்பட்டு வந்து நம்மை புல்லரிக்கச் செய்கின்றது.
பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?'' என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். "ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இங்கு நேரடியாக ஒருவன் தன் தாயையோ தந்தையையோ திட்டுவதைக் குறிப்பிடவில்லை. இவன் மற்றவனைத் திட்டும் போது, அவனை மட்டும் திட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், "உனது தாயைத் தெரியாதா? தந்தையைத் தெரியாதா?' என்று இழுத்துப் பேசுவான். அது தான் தாமதம்! உடனே அவனும் அது போலத் திட்ட ஆரம்பித்து விடுகின்றான். இவ்வாறு அவன் திட்டுவதற்குக் காரணமாக இருந்ததால் அது நீயே நேரடியாகத் திட்டியதாகும். இது சாதாரண பாவமல்ல! சிறு பாவம் என்று ஒதுக்கப்படக் கூடிய பாவம் அல்ல! நரகத்தில் வீழ்த்தக் கூடிய பெரும் பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
உலகமெல்லாம் தாய் தந்தையரைத் திட்டுவது பாவம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும், அடுத்தவருடைய தாய் தந்தையரைத் திட்டுவதை, அதன் மூலம் எதிர்விளைவை ஏற்படுத்துவதைப் பெரும்பாவம் என்று கூறுகின்றார்கள்.
* நீ எவருடைய தாய் தந்தையரையும் திட்டாதே!
* அதன் காரணமாக உன்னுடைய தாய் தந்தையரைப் பிறர் திட்ட வைத்து விடாதே!
இப்படி எதிர் விளைவால் திட்டுவது கூட பெரும்பாவம் எனும் போது நேரடியாக நீ திட்டினால் அது பெரும்பாவத்திலும் பெரும்பாவம் என்ற உண்மையை உணர்த்துகின்றார்களே! அவர்கள் சாதாரண போதகர் அல்ல, தான் அல்லாஹ்வின் தூதர் என்பதை இதன் மூலம் நிரூபிக்கின்றார்கள். இது நாம் அறியக் கூடிய மேல் மிச்சமான விளக்கம்!
முக்கியமாக இதன் மூலம் நாம் தெரிய வேண்டிய அரிய விஷயம், தாய் தந்தையரைத் திட்டுவது ஒரு பெரும் பாவம் என்பது தான். அவர்களிடம் "சீ' என்ற வார்த்தையைக் கூடக் கூறாமல் அன்பான, அருளான, அழகான வார்த்தைகளைக் கூறி அவர்களை அரவணைத்து வாழ்வது அழகிய பண்பாகும். அல்லாஹ்விடத்தில் அருளைப் பெற்றுத் தரும் அறச் செயலாகும்.
Comments