இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்
இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்
சாதாரணமாக பஸ் அல்லது ரயிலில் ஏறிப் பயணம் செய்கின்ற ஒரு மனிதன் கூட ஓர் இலக்குடன் பயணம் செய்கின்றான். ஆனால் இன்று தமிழகத்தில் காளான்கள் போன்று தோன்றிப் பயணம் செய்கின்ற இயக்கங்களுக்கு ஓர் இலக்கு, ஒரு தூர நோக்கு, இலட்சியம் எதுவுமில்லாமல் பயணம் செய்கின்றனர்.
டமாக்ரடிக் பார்ட்டி, பாப்புலர் பிரண்ட், கேம்பஸ் பிரண்ட், டவுன்பஸ் பிரண்ட் என்று ஒரே சிந்தனை கொண்டவர்கள் இத்தனை பெயர்களில் இயங்கி வருகின்றனர். இவர்களின் இலக்கு என்ன? இலட்சியம் என்ன?
ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் என்று இந்துத்துவ அமைப்பினர் பல்வேறு பெயர்களில் செயல்படுவது போன்று நாமும் செயல்பட வேண்டுமாம். இது ஓர் இலக்காகுமா?இலட்சியமாகுமா?
பஸ் பயணத்தில் பக்கத்து சீட்டில் ஒரு மிஸ்ஸை வைத்து பாலியல் விளையாட்டு விளையாடிய ஒருவரை தவ்ஹீத் ஜமாஅத் நீக்குகின்றது. இந்தப் பலான ஆசாமி தவ்ஹீது பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதற்குத் தலைவராகின்றார். இதுவெல்லாம் ஓர் இலக்கா? இந்த வெட்கக்கேடு எப்படி ஓர் இலட்சியமாகும்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி 6243, முஸ்லிம் 4801
நபி (ஸல்) அவர்கள் கடைசியாகக் குறிப்பிடுகின்ற அந்தப் பாவம் மட்டும் நடைபெறவில்லை. அது நடந்திருந்தால் மார்க்கத்தின் பார்வையில் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டிய குற்றவாளியாகியிருப்பார். ஆனால் மேற்படி பஸ் பயணத்தை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலத்தின்படி அது மட்டும் நடைபெறவில்லை.
இது தவிர உள்ள மானக்கேடுகள் அரங்கேறியிருக்கின்றன. இதை நினைத்து வெட்கமும் வேதனையும் பட்டு, பொது வாழ்வை விட்டு ஒதுங்க வேண்டிய ஆசாமி, தக்வா – இறையச்சம், மறுமை மன்றம் – மஹ்ஷர் விசாரணை என்று பேசித் திரிவது நயவஞ்சகத்திலும் கடைந்தெடுத்த நயவஞ்சகத்தனம்! நடிப்பிலும் உச்சக்கட்ட நடிப்பு!
இதோடு நின்றால் பரவாயில்லை! அன்னியப் பெண்ணுடன் அருகருகே அமர்ந்து, அதுவும் நள்ளிரவு நேரத்தில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்தால் என்ன தப்பு? என்று கேள்வி எழுப்பி பாவத்தை நியாயப்படுத்துவது இறை மறுப்பாளர்களின் குணமாகும்.
மக்கத்து இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தெரியாமல் இல்லை.
“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?”என்று கேட்பீராக!
“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே”என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா;?” என்று கேட்பீராக!
“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 23:84-89
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.
அல்குர்ஆன் 29:65
இத்தனைக்குப் பிறகும் மக்கா காஃபிர்கள், ஏன் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து நின்றார்கள்?அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்”எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 8:48)
மக்கா காஃபிர்களின் செயல்களை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான். தங்களது தீய செயல்களை,நல்ல செயல்களாகப் பார்ப்பது இறை மறுப்பாளர்களின் தனிக் கூறாகும்.
யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் 35:8
இறை மறுப்பாளர்களின் இந்த இழிந்த பண்பையும், ஈனக் குணத்தையும் இவர்கள் பிரதிபலிப்பதால் தான் “பஸ்ஸில் பெண்ணோடு பயணம் செய்தால் என்ன?’ என்று இந்தப் பாவத்தை, விபச்சாரத்தை நியாயப்படுத்தும் கேள்வியை எழுப்புகின்றனர்.
“எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் – அதாவது 12 மைல்- தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னு குஸைமா, பைஹகீ, அபூதாவூத், ஹாகிம்
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையெல்லாம் இவர்களுக்குக் கேலிக் கூத்தாகத் தெரிகின்றது. காரணம், ஷைத்தான் இவர்களது அமல்களை அலங்கரித்துக் காட்டுகின்றான். இதன்படி இவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் மனைவிமார்களை பலான ஆசாமியுடன் அல்லது பிற ஆடவருடன் பஸ்ஸில் அருகருகே அமர வைத்து அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
“உங்கள் மனைவிகளை நீங்கள் இப்படி அனுப்புவீர்களா?’ என்று நாம் கேட்கும் கேள்விக்கு, “இப்படிப் பயணம் செய்வது தப்பா?’ என்று இவர்கள் பதில் கூறினால் அதற்கு என்ன அர்த்தம்?
விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சம்
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இந்த இயக்கங்களுக்கு ஏதாவது இலக்கு இருக்கின்றதா?மார்க்க விளக்கம் ஏதாவது இருக்கின்றதா? என்பதைத் தான். இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், உலக தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயர்கள் வேறு! விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல்!
இந்த ஆசாமியை ஒய்.கே. மேன்சன் என்று விமர்சித்து காறித் துப்பிய, கரியள்ளிப் பூசிய சில இயக்கத்தினர் இப்போது கட்டியணைத்து ஆரத் தழுவி, தாங்கள் ஏற்கனவே பூசிய கரியை தங்கள் மீதே பூசிக் கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதாவது இலக்கும், மார்க்க விளக்கமும் இருக்கின்றதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இது போன்ற இயக்கத்தினர் தான், பெண்கள் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு மார்க்க ஞானம் அறவே இல்லை என்பதை அப்படியே பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றனர். இவர்களுக்குப் பின்னாலும் கொடி பிடிப்பதற்கும், கோஷம் போடவும் ஒரு கூட்டம் செல்கின்றது என்றால் இவர்கள் தனி மனித வழிபாடு செய்து, தவறான வழிகேட்டிற்குச் செல்கின்றனர் என்று தானே அர்த்தம்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டு வைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்;பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100
இந்த ஹதீஸ் இவர்களுக்குத் தான் நூற்றுக்கு நூறு பொருந்துவதைக் கவனியுங்கள்.
மைக்கைப் பிடித்துக் கத்தி விட்டால் போதும்; கை தட்டல், நாரே தக்பீர் போட்டு விட்டால் போதும். இவர்கள் மக்கள் தலைவராக, மார்க்க அறிஞராக ஆகி விடுகின்றனர். இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு அண்மையில் நடந்த அழகுமுத்துக் கோனார் சிலை திறப்பு விழா!
இதில் கலந்து கொண்டு மேற்படி பலான ஆசாமி, “சிலைகள் முக்கியமல்ல! சிந்தனைகள் தான் முக்கியம்’ என்று முழக்கமிட்டு, அதைப் போஸ்டர் போட்டு தங்கள் புளங்காகிதத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஆசாமிகள், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வந்த மக்கள் வெள்ளத்தை இனி ஒரு போதும் காணப் போவதில்லை. அது போன்ற ஒழுக்கமிக்க மேடையின் வாடை கூட இவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.
இவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் ஒருக்காலும் வரப் போவதில்லை. அதனால் “மேடை கிடைத்தால் போதும்; மார்க்கம் பார்க்கத் தேவையில்லை! மைக் கிடைத்தால் போதும்;மார்க்கக் கட்டளைகளைப் பேண வேண்டியதில்லை’ என்று கிளம்பி விடுகின்றனர்.
அதன் வெளிப்பாடு தான் இதுபோன்ற சிலை திறப்பு விழாக்களில் பிரவேசம்!
மேடையின் பின்னணியில் யாதவர்கள் கடவுள் என்று கொண்டாடும் கிருஷ்ணரின் படம். சாதாரண நாயகனின் படமல்ல! சர்வ வல்லமை படைத்த கிருஷ்ண பரமாத்மாவின் வானளாவிய வண்ணப்படம்.
எள்ளளவு ஈமான் இருந்தால் கூட இந்த மேடையை இதற்காக வேண்டியாவது புறக்கணிக்க வேண்டும். ஏன்? இதோ மார்க்கம் கூறுகின்றது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உருவங்கள் வரையப்பட்ட திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் “இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். “நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!’ என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே (அருளைச் சுமந்து வரும்) வானவர்கள் வர மாட்டார்கள்!” எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 2105, 5181
படத்தைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதம் உள்ளே செல்ல மறுக்கின்றது. மேடை அகலத்திற்குப் பெரிய படம் அல்ல! தலையணை அளவிற்குச் சிறிய உருவப் படத்தைப் பார்த்துக் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல மறுக்கிறார்கள்.
“நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று ஆயிஷா (ரலி) பதை பதைக்கின்றார்கள்; பதறுகின்றார்கள். மனைவியார் வீட்டில் இப்படியொரு சம்பவம் என்றால் மகளார் வீட்டில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கüன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால்,அவர்கüடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்கüடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கüடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கüடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2613
இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது அருமை மகள் ஃபாத்திமா வீட்டுக்குள் நுழையாமல் திரும்புகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டுத் திரும்பிய படம் சாதாரண படம் தான். ஆனால் இந்த மைக் வெறியாளர் உள்ளே நுழைந்து, மகிழ்ச்சிப் பெருக்கோடு அமர்ந்த மேடையில் அலங்கரித்து, ஆக்கிரமித்து நின்ற படம் கடவுள் படம். சாதாரண கப்ரு வணங்கி முஸ்லிம் கூட இது போன்று கடவுள் பின்னணி கொண்ட மேடையில் ஒரு போதும் அமர மாட்டார். ஆனால் இந்த விளம்பரப் பிரியர், மைக் வெறியர் தவ்ஹீது என்ற போர்வையில் போய் அமர்ந்திருக்கின்றார் என்றால் இவர்களுக்கு ஏதாவது இலக்கோ, மார்க்க விளக்கமோ இருக்கின்றதா? என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போஸ் கொடுத்த பாஸ்
“வீரன் அழகு முத்துக் கோன் சிலை திறப்பு விழா’ என்று தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள், வின் டிவி மற்றும் சில தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்து, முழுக்க முழுக்க இணை வைத்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு விழாவில் கலந்து கொள்ளும் இந்தப் பேர்வழிக்கு, மேடையில் கடவுள் படங்கள் இருந்தால் என்ன? இவர் அந்த மேடையில் பங்கு பெறுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
இந்த பஸ் புகழ் பாஸ் தான், பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததாக வாதிடுகின்றார். இவரது வாதப்படி பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். ரிமோட்டைத் தூக்கிக் கொண்டு,தேவநாதனை பத்திரிகையாளர்கள் நிற்கச் சொன்னது விளையாட்டுப் பொம்மையை இயக்குவதற்காகவா?
சிலை திறப்பிற்கு போட்டோக்கள் இல்லை. அதனால் தான் பத்திரிகையாளர்கள் போஸ் கொடுக்கச் சொல்கிறார்கள். எனவே நின்றது, போஸ் கொடுத்தது எல்லாமே சிலைக்காகத் தான். ஒட்டு மொத்தத்தில் நோக்கம் அனைத்துமே சிலை தான்.
அல்லாஹ்விடத்தில் நோக்கம் தான் முக்கியம். ஏனெனில் அவன் செயல்களைப் பார்ப்பதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்” என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி 31
இங்கே எண்ணத்திற்குத் தான் முக்கியத்துவம். எனவே இவரது வாதம் சுத்த பசப்பு வாதமாகும்.
தேவனாக்கப்பட்ட தேவநாதன்
இதில் இன்னொரு கூத்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேவநாதன் அங்கு கடவுளாகச் சித்தரிக்கப்பட்டது தான். “கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம்’ என்று அந்த ஜாதி சங்கத்தின் பேச்சாளர்கள் புகழ்ந்த புகழாரங்கள் கேட்க சகிக்கவில்லை. இப்படிப்பட்ட மேடையில் எப்படி ஒரு முஸ்லிம் போய் அமர முடியும்? இது போன்ற மேடையில் ஏறுவது ஒருபுறமிருக்கட்டும். ஏறிட்டுப் பார்க்க முடியுமா?
ஒருவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களை முகத்திற்கு நேராகப் புகழ்ந்தார். “புகழ்பவர்களைச் சந்தித்தால் அவர்களது முகங்களில் மண்ணள்ளிப் போடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறியவாறு அவரது முகத்தில் மண்ணள்ளிப் போடலானார்கள்.
அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல் ஹாரிஸ், நூல்: அஹ்மத் 22710
சாதாரண புகழ்ச்சிக்கு நபி (ஸல்) அவர்கள் மண்ணள்ளி வீசச் சொல்கிறார்கள். ஒரு தவ்ஹீதுவாதி என்றால் இது போன்ற மேடைகளுக்குப் போகக் கூடாது. அப்படியே போனாலும் இப்படித் தான் செய்ய வேண்டும். அதிலும் சாதாரண புகழ்ச்சிக்குத் தான் இந்த மருந்து, மாற்று! கடவுள் நிலையில் வைத்துப் புகழப்படும் புகழ்ச்சிக்கு நெருப்பை அள்ளித் தான் முகத்தில் வீச வேண்டும். ஏனெனில் இதற்குத் தண்டனை நரக நெருப்பு தான்.
இம்மாதிரியான காரணங்களால் தான் தவ்ஹீத் ஜமாஅத், பிற அமைப்பினருடன் மேடைகளைப் பகிர்வதைக் கட்டாயமாகத் தவிர்த்து, தனது தனித்தன்மையைக் காத்து வருகின்றது. இந்த மேடைப் பயில்வான்களுக்கு மார்க்கத்தில் எந்தக் கட்டுப்பாடும் கடிவாளமும் கிடையாது. அதனால் தான் இது போன்ற மேடைகளில் ஏறித் தங்கள் மொத்த மேதாவித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். இதற்கு மார்க்கச் சாயம் பூசுவதால் தான் ஏகத்துவம் இதை இங்கு வெளுத்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது.
யோகம் அடிக்க ஒரு யாகம்
தான் நடத்தும் இந்தச் சிலை திறப்பு விழா மற்றும் ஜாதிச் சங்க மாநாட்டில் பெரும் கூட்டம் கூட வேண்டும்; அப்படியொரு யோகம் அடிக்க வேண்டும் என்பதற்காக தேவநாதன் ஒரு யாகம் நடத்துகின்றார். அந்தத் தீ யாகத்தில் பழங்கள், தேங்காய், பூக்கள், நெய், உணவுப் பொருட்கள்,பட்டாடைகள் போன்ற பொருட்கள் நெருப்பில் போட்டுக் கரியாக்கப்பட்டன. சாதாரண ஏழைகளின் வாழைப்பழம் முதல் பணக்காரர்களின் ஆப்பிள் பழம் வரை அத்தனையையும் தீ தனது நாக்கிற்குள் சுருட்டிக் கொண்டது.
அன்றாடம் பசித் தீயில் வாடுகின்ற பாட்டாளி வர்க்கம் பல கோடி பேர் இருக்கும் போது அவர்களுக்கு இந்தப் பழ வர்க்கங்களைப் படைத்திருந்தால் அது பயனுள்ளதாய் அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பணக்காரத் தலைவரோ கோடிக்கணக்கான உணவுப் பண்டங்களை பற்றி எரியும் பயங்கரத் தீயின் பசிக்குத் தீயாக்கியிருக்கிறார். இது அவரது டி.வி.யிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது.
இந்தப் பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்த யாராவது இவரைத் தலைவர் என்று ஏற்றவும் போற்றவும் மனம் வருமா? ஆனால் இந்த மைக் வெறியரோ, அந்த ஜாதி சங்கத் தலைவரை ஆற்றல் தலைவன்,அற்புதத் தலைவன், இவனைப் போல் ஒரு தலைவன் உண்டா? என்றெல்லாம் வாங்குகின்ற காசுக்காக தரங்கெட்டுப் புகழ்ந்து தள்ளுகிறார்.
இது போன்ற விரயத்தை வீரியத்துடன் கண்டித்திருக்க வேண்டும். அப்படிக் கண்டிக்க தெம்பு, திராணி இல்லையென்றால் இது போன்ற புகழாரத்தையாவது தவிர்த்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், “தண்ணியடித்து விட்டு யாரும் இங்கு வரவேண்டாம் என்று இந்தத் தலைவன் சொல்லி விட்டான்’ என்று இந்த மைக் வெறியர் புகழ்ந்தது தான். இந்த ஆசாமி இப்படிப் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், மாநாட்டுப் பந்தலில் தங்கக் கம்பிகள் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதிலிருந்து இவர்களது இலட்சணத்தையும் இலக்கணங்களையும் சமுதாயம் புரிந்து கொள்ளலாம்.
தூண்டப்பட்ட ஜாதி வெறி
ஜாதி, மொழி, இன வேறுபாடுகளை குழி தோண்டிப் புதைக்க வந்த இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் எவரும் ஜாதியை ஆதரிக்க மாட்டார்கள்.
இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை முஸ்லிம்கள் ஆதரிப்பதுண்டு. அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுண்டு. அது அவர்கள் இருக்கும் ஜாதிக்காக அல்ல! அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காகவும், மனிதர்கள் அனைவரும் ஓரினத்தைச் சேர்ந்தவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்தி இஸ்லாத்தைப் போதிப்பதற்காகவுமே தலித்துகளுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுக்கின்றனர். மற்றபடி ஜாதி என்ற அடிப்படையில் கூட்டப்படும் எந்தவொரு கூட்டமும் இஸ்லாத்திற்கு எதிரானதே!
“இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: முஸ்லிம் 3440
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜாதி, இன வெறியை அறவே ஒழித்துக் கட்டுகிறார்கள். இனத்திற்காக, ஜாதிக்காகப் போராடுபவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஜாதி வெறிக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பது சாதாரண பாமர முஸ்லிம்களுக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் இந்த மைக் மகாதேவன்களுக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நமக்கு மைக் கிடைக்கிறதா? என்பது தான் இவர்களுக்கு முக்கியம். அதனால் தான் முழுக்க முழுக்க ஜாதியை அடிப்படையாகக் கொண்ட, ஜாதி வெறியைத் தூண்டிப் பேசிய ஒரு மாநாட்டில் போய் கலந்து கொள்கின்றனர்.
“உன் ஜாதிக்காக நீ இட ஒதுக்கீடு கேட்டுப் போராடு’ என்று ஒவ்வொரு ஜாதிக்காரனிடமும் போய் சொல்வதற்கு இவர்களுக்கு எந்த மார்க்கம் அனுமதி வழங்கியது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இதில் நானும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவன் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கையும் வேதனையுமாகும்.
இட ஒதுக்கீடு கோரிக்கை
இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, யாதவர்களின் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதைக் கண்டித்துப் பேசுகிறார். ஏனென்றால் யாதவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை மறைமுகமாகத் தமது சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டைப் பறித்து விடும் என்பதால்! அந்த அளவுக்கு கிருஷ்ணசாமி சுதாரிப்பாக இருக்கிறார். இங்குள்ள கூழ்முட்டைகளுக்கு அந்த அறிவும் இல்லை.
ஆளுக்கு ஆள் இட ஒதுக்கீடு என்று கேட்டால், அதுவும் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு அனுபவித்துக் கொண்டிருக்கும் சமுதாயங்கள் தனி இட ஒதுக்கீடு கேட்டுக் கிளம்பினால் அது நாம் போராடிப் பெற்ற 3.5 சதவிகிதத்திற்கு மறைமுக ஆபத்து! மத்தியில் நாம் பெறவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு வைக்கின்ற வேட்டு!
தேவநாதன் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைக் கையில் எடுத்திருப்பது தனது அரசியல் ஆதாயத்திற்கு நாட்டுகின்ற அடிக்கல் என்பது இந்தப் பீரங்கிக்குப் புரியவில்லை. அல்லது புரிந்து கொண்டாலும் தனக்கு தேவநாதன் மூலம் டிவியில் கிடைக்கும் ஆதாயங்களுக்காக அதை நியாயப்படுத்துகிறார்.
தங்களது சுய நலனுக்காக சமுதாய நலன் எப்படிப் போனால் என்ன? என்பது தான் இந்த ஆசாமிகளின் எண்ணம். இவர்கள் எப்படி சமுதாய மானம் காக்கப் போகிறார்கள்? இவர்களுக்கு என்ன இலக்கு இருக்கின்றது? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பட்டதாரியும் பண்டாரியும்
தேவநாதன் தனது துபை பயணத்தைப் பற்றி வின் டிவியில் பேசுகிறார். அப்போது துபையில் நூற்றுக்கணக்கான யாதவர்கள் தன்னை வந்து சந்தித்ததாகவும் அவர்கள் அனைவருமே பட்டதாரிகள் என்றும் கூறுகின்றார். அதாவது, யாதவ ஜாதியினர் அனைவரும் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்.
ஆனால் நமது முஸ்லிம் சமுதாய மக்களோ உணவு விடுதிகளில், வீட்டு வேலைகளில் 16 மணி நேரம் பணி புரியும் பண்டாரிகள், ஓட்டுனர்கள், இடையர்கள், வண்ணான்கள், துப்புரவுத் தொழிலாளர்கள்,பாலைவன சாலைத் தொழிலாளர்கள், பாட்டாளிகள், பாரம் தூக்கும் சுமை தாங்கிகள். இவர்களுக்காக நாம் கண்ணீர் மட்டுமல்ல, செந்நீரும் வடிக்கிறோம். அந்த மக்களும் கண்ணீரும் செந்நீரும் வடிக்கிறார்கள்.
இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடைக்கும் இட ஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக,நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஜாதியினருக்காக இந்த ஆசாமி குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? டிவியின் மூலம் கிடைக்கும் ஆதாயம் தான். தேவநாதன் போடும் பிச்சை தான் காரணம்.
இவர்களுக்கு எல்லாம் ஓர் இலட்சியம், இலக்கு உள்ளது என்று யாராவது சொல்ல முடியுமா?இவர்களுக்குப் பின்னால் செல்ல முடியுமா?
இந்த ஆனந்தாக்கள், பேராசிரியர்கள் எல்லாம், ஜனநாயகம் ஷிர்க் என்ற குருட்டு வாதத்தை வைத்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். அதை தாய்ச் சபையாக நினைப்பவர்கள்.
இந்த இயக்கத்திலிருந்து ஒருவித எதிர்பார்ப்புடன் ஏகத்துவத்திற்கு வந்தார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஏகத்துவம் இடம் தரவில்லை என்று தெரிந்தவுடன் தாங்கள் வந்த வழியே சென்று விட்டார்கள். இன்று அந்த இயக்கத்தின் மாநாடுகளில் போய் கலந்து கொண்டு மகிழ்கிறார்கள். தாய் வீட்டிற்கே வந்து விட்டோம் என்று தங்களது மகிழ்ச்சியை, நயவஞ்சகத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு என்று இம்மை, மறுமை பயணத்திற்காக ஓர் இலக்கு உண்டா? இலட்சியம் உண்டா? என்று சமுதாய மக்களே சிந்தியுங்கள்.
நன்றி ஏகத்துவம் ஜுலை 2010
Comments