*. இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
*. இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
*. இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே இக்கட்டுரை
மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்குஅல்லது கருத்து என பொருள்படும்.
அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.
பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர்.அது தவறு. மத்ஹபுகள் 1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.
இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.
முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்
மேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை சார்ந்தவராவர்.
ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில் குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள்.
அதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.
ஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன. அதாவது
*. குத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,
*. ஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும்,
*. தஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும்,
*. ஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர் மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,
*. சல்பீ, தன்வீர் அப்ஸார், பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும்,
*. துர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக
*. .ஃபதாவா ஆலம்கீரி இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப் பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.
ஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும் இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை.
மேலும், ஹனபி மத்ஹபின் மிக முக்கிய பிக்ஹு சட்டநூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்கும் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென கருதியிருந்தால் தங்களது காலத்திலே தமதுநூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில் எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே இல்லை.
மேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின்மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள் யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள்.
எனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால் ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம்காரணமாக பின்னாளில் நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான
1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்
2.நூல் பத்ஹுல் முயுன்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்
3.நூல் இஆனதுத் தாலிபின்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்
இடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின் நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...!
இதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட மத்ஹபுகளிலும்.
ஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள்.
"இமாமுல் அஃலம்! " தலை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை தருவார்கள்...?
சரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும் கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.,
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை
(நூல்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:
நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: உஸுலுல் அஹ்காம் பக்கம்:294 பாகம்:6)
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள்
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63)
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்
இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம்அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே!உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது. (நூல்: ஜாமிஉ இப்னு அப்தில்பர் பக்கம் 149 பாகம் 2)
எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள்.
உண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....!
Comments