வேலைக்குச் செல்லும் பெண்கள்
ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது; பெண்களின் தேவைகளுக்காக ஆண்கள் உழைக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை பிற்போக்கான சிந்தனை என்று கூறி அறிவுஜீவிகள் குறை கூறி வந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதில் தான் அவர்களுக்கு சுதந்திரம்கிடைக்கும் என்றும் வாதிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை. புகுந்த வீட்டாரின் அடக்கும் முறைக்கு மட்டும் ஆளான பெண்கள் தமது அதிகாரிகளின் அடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்குச் சென்றதால் வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச் சுமையைச் சுமந்து வருகின்றனர் என்பது இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் வாயாலேயே வெளியாகி விட்டது.
31 டிசம்பர் 2009 அன்று தினத்தன்ந்தியில் வெளியான கீழ்க்கண்ட செய்தி இதை உறுதி செய்கிறது.
வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை; பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு; அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் காமப் பார்வை
வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் `செக்ஸ்' கொடுமைகள்!
போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பெண்கள் பரபரப்பு பேச்சு
சென்னை, டிச.31-
வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்'கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.
பெண்களின் பாதுகாப்பு
`பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு,வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்' தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்.
மூன்று விதம்
கமிஷனர் முன்னிலையில் இந்த பெண்கள் கொட்டிய உள்ளக்குமுறல்கள் வருமாறு:-
வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும்,கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது,வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.
`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.
வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.
மிரட்டல்
ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள். இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.
அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை'என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.
பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இருட்டான இடங்களில்...
பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.
பஸ்களில்
தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.
நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.
பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
onlinepj.com
Comments