உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்’ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது’ என்று மகன் கூறுகின்றார்.
இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அம்முகத்தில் பேயறைந்தாற்போல் ஒரு தோற்றம்!
தாயைக் காக்க தனயன் எப்படி முனைகின்றார்? மனைவியைக் காக்க கணவன் எப்படி முன் வருகின்றார்? என்று பாருங்கள். உதாரணத்துக்கு இந்த உறவுகள் சொல்லப்பட்டுள்ளன. இது போலவே தந்தைக்கு மகனும், தந்தை தன் பிள்ளைகளுக்கும் இரத்தம் கொடுக்க முன்வருவதில்லை. அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் கொடுக்க முன்வருவதில்லை.
தன் இரத்த பந்தத்தை அதிலும் குறிப்பாக குர்ஆனும் ஹதீசும் முன்னுரிமை கொடுத்து பேணச் சொல்கின்ற தாயை ஒரு மகன் பேணுவதில்லை. மிகப் பெரும் தியாகத்தை இந்த மகனுக்காக தாய் செய்கின்றாள். அந்தத் தாயின் உயிரைக் காக்க மகன் இரத்தம் கொடுக்க மறுக்கின்றான்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல்குர்ஆன் 31:14)
இந்த வசனத்தில் தாய் மகனுக்குச் செய்யும் தியாகத்தை உணர்த்தி, நன்றி செய்யச் சொல்கின்றான். ஒரு தாய்க்கு மகன் இரத்தம் கொடுக்கும் சந்தர்ப்பம் அளப்பரிய சந்தர்ப்பம் அல்லவா? அல்லாஹ்வுக்கும், தாய்க்கும் நன்றி செலுத்துவதற்கு இதைவிட இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமா? என்று சிந்தித்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “(அப்படியானால் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் உன்னை அர்ப்பணித்துக் கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : புகாரி 5972
இதன் படி ஒரு தாய்க்காக மகன் தன்னை அர்ப்பணிப்பதற்கு தனக்கு வாய்த்த ஒரு பொன்னான தருணம் என்றெண்ணி தன் கடமையைச் செய்யாமல் இந்த மகன் தப்பி ஓடுகின்றார். உண்மையில் இவர் தன் தாய்க்கு அல்லது இரத்த பந்தங்களுக்குச் செய்கின்ற மிகப் பெரும் துரோகமாகும்.
தன் உறவினரை, இரத்த பந்தங்களை ஆதரிப்பதற்கு, தான் முதன் முதல் முன் வருவதை விட்டு விட்டு, தனது இரத்தத்தை ஒரு சொட்டு கூட இழக்கத் தயாராகாமல் அடுத்தவர் இரத்தத்தைத் தாரை வார்ப்பதற்காக வந்து நிற்பது முதல் தர சுயநலமும் வடிகட்டிய துரோகத் தனமும் ஆகும்.
தன்னிடத்தில் ஓடுவது மட்டும் தான் இரத்தம்! அடுத்தவரிடத்தில் ஓடுவது ஆற்று நீர் என்பது போல் அடுத்தவரின் இரத்தத்தைப் பெறுவதில் இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ளவர்கள் நடந்து கொள்கின்றார்கள். தனக்கு எப்படி இரத்தம் பெரிதாகத் தெரிகின்றதோ அதுபோல் தான் மற்றவர்களுக்கும் பெரிதாகத் தெரியும் என்று எண்ணுவது கிடையாது.
இரத்த பந்தத்தை ஆதரிக்கும் நன்மையைப் பற்றித் தெரிந்திருந்தால் முஸ்லிம்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். மேலும் உறவினர்களை ஆதரிப்பது என்றால் பொருளாதார அடிப்படையில் ஆதரிப்பது மட்டும் தான் என்று விளங்கிக் கொண்டதும் இன்னொரு காரணமாகும்.
நோயாளியாகக் கிடக்கும் உறவினருக்கு தன் உடலால் பணிவிடை செய்வதும் உறவினரை ஆதரிப்பது தான் என்று விளங்கிக் கொண்டால் இதை விட உயர்ந்த சேவையான இரத்த தானத்திற்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் நிச்சயமாக முன் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
உறவினர்களுக்கு இரத்தம் வழங்குதல் என்பது நாம் ஒருவரை சாவிருந்து காத்து வாழ்வளித்தோம் என்ற நன்மையைப் பெறுவதுடன் உறவினரை ஆதரித்தோம் என்ற அடிப்படையில் இரண்டு மடங்கு நன்மைகளைப் பெற்றவர்களாகின்றோம்.
நான் பள்ளிவாசல் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) க்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், “நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்” என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் என்று கூறி விட்டார்.
எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), “அப்துல்லாஹ்வின் மனைவி” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜைனப் (ரலி), நூல் : புகாரி 1466
இங்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவிக்கு உறவினர்களை ஆதரித்ததற்காகவும், தர்மம் வழங்கியதற்காகவும் இரண்டு வித கூகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண்கின்றோம். அஹ்மதில் வரும் அறிவிப்பின் படி, இந்த தர்மத்தின் மூலம் நரகத்திருந்து தான் பாதுகாக்கப் பட வேண்டும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி கோரிக்கை வைத்ததாகவும் அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் உறவினர்களை ஆதரிப்பதன் மூலம் நரகத்திருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது.
இதுபோல் உறவினர்கள் அல்லாத இஸ்லாமிய சகோதரர்களுக்கு நாம் இரத்தம் வழங்குகையில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் நமக்குக் கூ கிடைக்கின்றது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
முஸ்லிம் அல்லாத மக்களுக்கு நாம் இரத்த தானம் செய்யும் போது, இஸ்லாம் இது போன்று ஈந்து இணக்கமாக நடக்கச் சொல்கின்றது என்று அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, இஸ்லாம் கூறும் மனித நேயத்தை எடுத்துக் காட்டும் விதமாக அமைகின்றது.
இஸ்லாத்தை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம் என்ற கண்ணோட்டத்தில் இந்த இரத்த தானம் நன்மையைப் பெற்றுத் தருகின்றது.
எனவே இரத்த தானம் செய்வோம். இரத்த பந்தத்தைப் பேணுவோம். இனிய சகோதரத்துவத்தைப் பறை சாற்றுவோம். இஸ்லாத்தின் மனித நேயத்தை இதர மக்களிடம் எடுத்துக் காட்டி இறை திருப்தியைப் பெறுவோம்.

எம். ஷம்சுல்லுஹா:

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்