குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாமா?


செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாமா?

சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.
ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர்.
குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை தேவைப்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.
நாம் குர்ஆன் ஓதும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.
ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர் ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.
தொலை பேசியில் வரும் ரிங் டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங் டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.
பாடல்களும் இசையும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங் டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.
onlinepj

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை