இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!


இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!


மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!

பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.

இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

அல்குர்ஆன் 37:103-108

அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!

இது எதை உணர்த்துகின்றது?

1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.

(இதன் அதிக விளக்கத்தை இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி என்ற தலைப்பில் நாம் பார்க்கலாம்.)

2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.

ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இபராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இன்று நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாதையில் அழைக்கும் போது சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் புறமுதுகு காட்டுகின்றனர். அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள் என்று கூறும் போது அவர்கள் முகம் சுழிக்கின்றனர். முஹ்யித்தீன் என்று சொன்னதும் "கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அவர்களின் கண்ணியமிக்க ஆன்மாவை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக) என்று கூறி, முகமும் அகமும் பூரித்து விடுகின்றனர்.

முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன் போன்றோரின் பெயர்களில் மவ்லிதுகளை ஓதி, ஆடு மாடுகளை அறுத்துப் பலியிட்டு ஆனந்தமடைகின்றனர்.

அப்படியானால் இவர்களின் "பலி' என்ற வணக்கத்தினால் பலன் என்ன?

இத்தகையவர்களை நோக்கித் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னை விலக்கிக் கொண்டதாகப் பிரகடனம் செய்கிறார்கள்.

"உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

அல்குர்ஆன் 22:37

அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.
இறையச்சம் என்றால் என்ன?

ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று கேட்டார்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.

அல்குர்ஆன் 23:23, 24

இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான் என்ற அர்த்தத்தை இன்றைய ஆலிம்கள் கொடுக்கின்றனர். இதனால் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துக் கொண்டே இதுபோன்ற வணக்கங்களைச் செய்து விட்டுத் தங்களை இறையச்சமிக்கவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இன்று ஆடு மாடுகளையும் அறுத்துப் பலியிடுகின்றனர். இதனால் தாங்கள் இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றி விட்டதாக நினைக்கின்றனர்.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், ஏகத்துவத்தை ஏற்காத வரை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று இப்ராஹீம் நபியவர்கள் ஓங்கி பிரகடனப்படுத்தி விட்டார்கள். இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.

எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.

நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட, உண்மையான இறையச்சவாதிகளாக, ஏகத்துவவாதிகளாக மாறுவோமாக!

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

அவ்லியாக்களின் சிறப்பு

பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்: