குற்றத்திற்கான பரிகாரங்கள்.

குற்றத்திற்கான பரிகாரங்கள்.

இறைவன் செய்யச் சொன்ன காரியங்களில் சில காரியங்களைச் செய்யாமல் விட்டுவிட்டால் அதற்கு குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. அந்தச் செயல்களை விரிவாக காண்போம்.
தொழுகை குறித்த நேரத்தில் தவறவிட்டவரின் பரிகாரம்
ஒரு தொழுகை அதன் நேரத்தில் நிறைவேற்றாமல்ஒருவர் ஒரு தொழுகையை மறந்துவிட்டாலோஅத்தொழுகை நேரத்தில் தூங்கிவிட்டாலே அதை பற்றி நினைவு வரும்போது அதைத் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர கூடுதலாக வேறு எதையும் தொழ வேண்டியதில்லை. இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி 597
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால்,அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : முஸ்லிம் 1217
ரக்அத்தைக் குறைத்து விட்டால் அதற்குரிய பரிகாரம்
ஒருவர் தொழும் போது நான்கு ரகஅத்துகள் தொழுவதற்கு பகரமாக மூன்று அல்லது இரண்டு ரக்அத்துகள் குறைத்து தொழுது விட்டால்அவர் தொழுது முடிந்த பிறகு தான் குறைத்து தொழுவிட்டோம் என்று ஞாபகம் வந்தால் நாம் எத்தனை ரக்அத்துகள் விட்டுவிட்டமோ அந்த ரக்அத்துகள் தொழுவிட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் அல்லது ஸலாம் கொடுத்த பிறகு இரு ஸஜ்தாகள் செய்ய வேண்டும். இவை அதற்குரிய பரிகாரமாகும்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகைகளில் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். (நான்கு ரக்அத்துடைய அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே எழுந்து பள்ளிக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர் போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்துகைவிரல்களை பின்னிக் கோத்துக் கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது வைத்துக் கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளியின் வாயில்கள் வழியாக வெளியேறிய போது "தொழுகை குறைக்கப்பட்டு விட்டது (போலும்)'' என்று கூறினார். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி)உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவர் (மரியாதை கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படுவார். அவர், "நீங்கள் மறந்துவிட்டீர்களாஅல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதாஅல்லாஹ்வின் தூதரே?''என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை'' என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), "துல்யதைன் சொல்வது சரிதானா?'' என்று கேட்கமக்கள் "ஆம் (சரிதான்)என்று பதிலளித்தனர். உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் ("அல்லாஹு அக்பர்என்று) சொல்லி "(வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது போன்றுஅல்லது "அதைவிட நெடிய (நேரம்)சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித் தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி "(வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்றுஅல்லது "அதைவிட நெடிய (நேரம்)' (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள். "(கடைசியாக நபி லிஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 482
தொழுகையில் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததைக் கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
உங்களில் ஒருவர் தொழும் போது ஷைத்தான் அவரிடம் வந்து எத்தனை தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 363
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டுஉறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப் படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்து விட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்'' என்றே இடம் பெற்றுள்ளது.
நூல் : புகாரி 990
பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.
அக்காலத்தில் உள்ள பள்ளிவாசல் மண் நிறைந்த பகுதியாகவே இருந்துள்ளன. காலடியில் எச்சிலை உமிழ்ந்தால் அதை மண்ணை வைத்து மூடிவிட முடியும் என்ற நிலை இருந்தது. மேலும் பள்ளியில் எச்சில் உமிழ்வது குற்றம்தீமையான காரியம் என்றும்மீறி உமிழ்ந்தால் மண்ணால் அதனை மூடுவதே அதற்குரிய பரிகாரம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 415
அந்நியப் பெண்னை முத்தமிட்டத்திற்குரிய பரிகாரம்
தொழுகைதிக்ர்தர்மம் போன்ற நன்மைகள்நாம் செய்யும் போது சிறு பாவங்களையும் தவறுகளையும் அழித்துவிடும். தீமைகளுக்கு நன்மைகள் பரிகாரமாகும்.
ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர் களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு)இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், "பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாகநன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன'' எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த மனிதர், "இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 526
ஒருவர் அந்நியப் பெண்ணை முத்தமிட்டால் அதற்கு பரிகாரமாக தொழ வேண்டும் என்பதை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான். அதாவது தொழுகைகள் சிறிய பாவங்களுக்கு பரிகாரமாகும். அதற்காக அடிக்கடி அந்நியப் பெண்களை முத்தமிட்டுவிட்டுஐவேளை தொழுகைகளை தொழுதால் அதை சரிசெய்து கொள்ளலாம் என்பது பொருளல்ல. ஒரு தவறை செய்தால் அந்த பாவத்தை விட்டும் நாம் விலக வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அந்த எண்ணத்தின்படி நடக்க வேண்டும்.இவ்வாறு இருந்தால்தான் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
ரமளானில் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டதற்குரிய பரிகாரம்
ரமளான் நோன்பு நோற்றுக் கொண்டு பகல் வேளையில் தாம்பத்திய உறவு கொள்வது கடுமையான குற்றமாகும். அவ்வாறு ஒருவர் செய்துவிட்டடால் அதற்காகப் பெரிய பரிகாரம் செய்தாக வேண்டும். பரிகாரம் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்,அது முடியாவிட்டால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் அறுபது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவெல்லாம் ரமளான் நோன்பு நோற்றிருப்பவர் பகலில் வேண்டுமென்றே தாம்பத்திய உறவு கொள்ளும் போது தான்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். "நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்!'' என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை!''என்றார். "தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "இல்லை!'' என்றார். "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் "இல்லை!'' என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள் நாங்கள் இவ்வாறு இருக்கும் போதுநபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த "அரக்எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போதுநபி (ஸல்) அவர்கள் "கேள்வி கேட்டவர் எங்கே?'' என்றார்கள். "நான் தான்!''என்று அவர் கூறினார். "இதைப் பெற்று தர்மம் செய்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!'' என்று கூறினார். அப்போதுநபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்பிறகு "இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 1936
சத்தியத்தை நிறைவேற்ற இயலாத போது அதற்குரிய பரிகாரம்
ஒன்றைச் செய்வதாகவோஒன்றைக் கைவிடுவதாகவோ ஒருவர் அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்தார். பின்னர் தாம் செய்த சத்தியம் உகந்தது அல்ல என்றும்அதைவிடச் சிறந்த மற்றொன்று உள்ளது என்று நினைக்கின்றார். இந்நிலையில் அவர் முன்பு செய்த சத்தியத்தைக் கைவிட்டு விடுவதும்சிறந் ததை மேற்கொள்ள வேண்டும். பழைய சத்தியத்தை முறித்த காரணத்தினால்அதற்கான பரிகாரத்தை அவர் நிறைவேற்றிட வேண்டும்.
உதாணமாக : இன்ன மனிதருக்கு நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று ஒருவர் சத்தியம் செய்தார். ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்பது நற்காரியம் கிடையாது. எனவே இந்தப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். சத்தியத்தை முறிக்க வேண்டும். சத்திய முறிவுக்கான பரிகாரத்தைச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சத்தியம் என்பது ஒரு விளையாட்டாகப் போய்விடும்.
இதைப் போன்று சத்தியம் செய்து வேண்டுமென்றே முறித்துவிட்டாலும் இந்த பரிகாரத்தையே செய்ய வேண்டும்.
உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்ஞானமுடையோன்.
அல்குர்ஆன் 66:2
அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை. ஆயினும்நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப் பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், (இவற்றில் எதற்கும்) சக்தி பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் இதுதான் அவற்றுக்குரிய குற்றப் பரிகாரமாகும். எனவே,உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள். இவ்வாறு தன்னுடைய சட்டத்திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்நீங்கள் நன்றி செலுத்துவோராய் திகழக்கூடும் என்பதற்காக!
அல்குர்ஆன் 5:89
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு,அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் தனது சத்தியத்தை முறித்துப் பரிகாரம் செய்துவிட்டு, (அந்த வேறொன்றையே) செய்யட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 3391
நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது கோழிக்கறிச் சாப்பாடு வந்தது. அவர்களிடம் தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ரோம நாட்டவரிடையேயிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட) போர்க் கைதிகளில் ஒருவரைப் போல் காணப்பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரை உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், "இந்தக் கோழி (அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பையுண்டாக்கவே இதை இனி உண்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள், "இங்கே வா! இதைப் பற்றி உனக்கு (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) அறிவிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கூற லானார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் (எனது) அஷ்அரீ குலத்தவர்கள்சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில்உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்ட கங்கள் என்னிடம் இல்லை'' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே எங்களைக் குறித்து, "அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?'' என்று கேட்டுவிட்டுஎங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட கொழுத்த (மூன்று முதல் பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களைத் தரும்படி உத்தரவிட்டார்கள். நாங்கள் (அதைப் பெற்றுக்கொண்டு) சென்று கொண்டிருந்தபோதுநாங்கள் எங்களுக்குள், "நாம் என்ன காரியம் செய்துவிட்டோம். (நமக்குக் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பின் மீண்டும் இவற்றை நாம் வாங்கிச் சென்றால்) இவற்றில் நமக்கு பரக்கத் (அருள் வளம்) வழங்கப்படாதே'' என்று பேசிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். "நாங்கள் தங்களிடம், "நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு ஒட்டகங்கள் கொடுங்கள்என்று கேட்டோம். "நாங்கள் ஏறிச் செல்ல ஒட்டகம் கொடுக்க முடியாதுஎன்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே மறந்துவிட்டீர்களா?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப வில்லை. மாறாக,அல்லாஹ்தான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால்நான் இனி எந்த ஒரு வாக்குக்காகவும் சத்தியம் செய்து,பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்த தாகக் கருதும் பட்சத்தில்சிறந்ததையே செய்வேன்சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்'' என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 3133
காஃபிர்களாக இருக்கும் போது செய்த குற்றத்திற்கு பரிகாரம்
மக்கத்து காஃபிர்கள் இணைவைக்க கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு நாங்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் அதிகமான பாவங்களை செய்துள்ளோம். அதற்கு பரிகாரம் ஏதாவது உண்டாஎன்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு இணைகற்பிக்க கூடாது. பிறரை கொலை செய்ய கூடாது அல்லாஹ் இறக்கிய வசனத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பவர்களில் சிலர்நிறையக் கொலைகளைப் புரிந்தனர்விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்துநீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, "(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லைமேலும் விபசாரம் செய்வதில்லை...'' எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், "(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்...'' எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி 4810
ழிஹார் செய்தால் அதற்குரிய பரிகாரம்
அன்றைய அறியாமைக் கால மக்களிடம் இருந்த ஒரு மூட நம்பிக்கையையே ழிஹார் என்பது. மனைவியரைப் பிடிக்காத போது "உன்னை என் தாயைப் போல கருதி விட்டேன்''எனக் கூறுவர். இவ்வாறு தாய் என்று சொல்லி விட்ட காரணத்தினால் மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்த மாட்டர்கள். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு ஒருவர் ழிஹார் செய்தால் அதற்குப் பரிகாரமாக ஒர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்அது இயலாத போது இரு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அதுவும் முடியாத போது அறுபது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தைச் செய்து முடித்த பின் அவர் தம் மனைவியுடன் சேர்ந்து வாழலாம்.
உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாயாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும்பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்மன்னிப்பவன். தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர்ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப் படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டுமாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது அல்லாஹ்வையும்அவனது தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை அல்லாஹ்வின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
அல்குர்ஆன் 58: 3,4
இஸ்லாம் தடுத்த காரியத்தைச் செய்வது
அல்லாஹ் தடுத்த செயலை செய்த காரணத்தினால் அல்லாஹ்விடம் நம்முடைய முதல் தந்தையான ஆதமும்நமது தாயாரான அவருடைய மனைவியும் பாவமன்னிப்பு கேட்டார்கள்.
"ஆதமே! நீயும்உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம். அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம். (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்அவன் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2: 35,36,37
இறந்தவர்களின் பாவங்களுக்குப் பரிகாரம்
இறந்துபோன ஒருவருக்காக உயிரோடு இருப்பவர்கள் தர்மம் செய்யலாம். அந்தத் தர்மத்தின் நன்மை தர்மம் செய்தவருக்கும்இறந்து போனவருக்கும் கிடைக்கும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "என் தந்தை சொத்துகளை விட்டுவிட்டு இறந்துபோனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவுமில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால்அவருக்கு அது பரிகாரம் ஆகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 3355
நேர்ச்சை (முறிவு)க்கான பரிகாரம்
ஒருவர் ஏதோவொரு நேர்ச்சை செய்திருக்கிறார் என்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது நேர்ச்சை செய்து விட்டு அதை முறித்து விட்டால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். பத்து ஏழைக்கு உணவளிக்க வேண்டும்அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும்அல்லது ஒர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்,இதற்குச் சக்தியில்லாதவர் மூன்று நாள் நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம் 3379
தொழுகையை விட்டால் பாவமன்னிப்பு தேட வேண்டும்
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் இழப்பைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். அல்குர்ஆன் :19: 59,60
பல வருடங்கள்பல மாதங்கள் தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டு விட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமாஅல்லது வேறு என்ன செய்ய வேண்டும்
தொழுகையைப் பாழாக்கியவர்கள் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு இனிமேல் முறையாகத் தொழுது வந்தால் அதுவே போதுமானது என இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. விட்ட தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டும் எனக் கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு கட்டளையிடவில்லை. எனவே அவர்கள் தவ்பாச் செய்து விட்டு எதிர்காலத்தில் சரியாக நடந்து கொண்டால் போதுமானது.
சில வருடங்களாகத் தொழாத ஒருவர் திருந்தும் போது விட்ட தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று எந்தச் சான்றுமின்றி கூறும் போது அவர் வந்த வழியே திரும்பிச் சென்று விடுவதை நாம் காண்கிறோம். எனவே மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் அளிப்பதைத் தவிர்த்தால் திருந்த விரும்புவோருக்கு அது எளிதாக இருக்கும். ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்கு பரிகாரம்
ஹஜ்உம்ராவிற்கு இஹ்ராம் கட்டியவர்தலைமுடியைக் கத்தரிக்கவோமழிக்கவோ கூடாது. தலையில் பேன்பொடுகு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுஅதனால் தலைமுடியை வழிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்இஹ்ராம் கட்டிய நிலையிலேயே தலைமுடியை மழிக்க அனுமதியுண்டு. ஆனால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். ஒர் ஆட்டை பலியிட வேண்டும்அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்அல்லது ஆறு ஏழை களுக்கு தர்மம் வழங்கவேண்டும்.
அப்துல்லாஹ் பின் மஅகல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்அதற்கு அவர்கள், "என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுஎன்றாலும்அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்துகொண்டிருக்கநான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் பட்டேன்நபி (ஸல்) அவர்கள், "உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஒரு ஆடு இருக்கிறதா?' என்று கேட்டார்கள்நான் "இல்லை!என்றேன்நபி(ஸல்) அவர்கள் "(தலையை மழித்துக் கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாஉ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!என்று கூறினார்கள்'' என்றார்கள். நூல் : புகாரி 1816
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு'பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!'' என்றார்கள்.
அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி),
நூல்: புகாரி 1814,
இஹ்ராம் அணிந்திருக்கும் போது வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
ஹஜ்உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருக்கும் சூழல் வேட்டைப்பிராணிகளை கொல்வதற்கும்அந்த நிலையில் வேட்டையாடுவதற்கும் அல்லாஹ் விதிக்கும் தடையாகும். அப்படி செய்தால் அவர் கொன்ற பிராணியை ஒத்த இரு கால்நடை (அதற்கு நஷ்ட) ஈடு ஆகும். இது தான் அதற்க்குரிய பரிகாரமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக்கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப்போகும் கால்நடை (ஆடுமாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:95)
அநீதி இழைத்தற்குரிய பரிகாரம்
ஒருவர் மற்றொருவருக்கு சொல்லாலேசெயலாலே துன்பம் தந்திருந்தால் அவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதாவது அநீதி இழைத்தவர்அநீதி இழைக்கப்பட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இவை அநீதி இழைத்தற்குரிய பரிகாரமாகும்.
ஒருவர்தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோவேறு (பணம்சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின்அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோதிர்ஹமோ (பொற்காசுகளோவெள்ளிக்காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில்,மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவனது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவனின் மீது சுமத்தப் பட்டு விடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 2449, 6534
அநீதி இழைத்தவர்அநீதி இழைக்கப்பட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவார். இம்மையில்இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மறுமையில் பழி தீர்த்துக் கொள்ளப்படும். எல்லாம் குற்றவாளிகளும் இம்மையில் தண்டிக்கப்படுவதில்லை. மறுமையில் நாம் நஷ்டமடையாமல் இருக்க வேண்டுமென்றால் இஸ்லாம் கூறிய படி அநீதி இழைக்கப்பட்டவரிடம் தான் செய்த குற்றத்திற்கு மனவருந்தி திருந்தியவர்களாக மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே நீதி நிலைநாட்டப் பட்டுபாதிப்புக்குள்ளோனோர் நிவாரணம் பெறவும்குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்படவும் வேண்டி மறுமையில் பழி தீர்க்கப்படும் என்பதை நமது மனதில் பதிய வைக்கவேண்டும்..

தீன்குல பெண்மனி

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை