பேய் பிசாசு உண்டா?


பேய் பிசாசு உண்டா?

! பேய் பிசாசைப் பற்றி முஸ்லிம்களிடம் இருவிதமான நம்பிக்கைகள் உள்ளன. இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள் என்பது முதல் நம்பிக்கை. .

இறந்தவர்களின் ஆவி திரும்ப உலகுக்கு வர முடியாது, ஆனால் ஷைத்தான் மனிதனிடம் மேலாடுவான். அது தான் பேய் என்பது இரண்டாவது நம்பிக்கை.

இந்த இரண்டு நம்பிக்கைகளுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானவையாகும். பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.

சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)

இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23:99, 100)

நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும் என்று இந்த வசனம் கூறுகின்றது. நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப் படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப் படும். சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப் படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப் படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல் : புகாரி 1290, 3001, 6034

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் அடக்கம் செய்யப் பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள். "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார். "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள். பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப் படும். பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும்.

நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப் பட்டுக் கொண்டே இருப்பான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ 991

இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.
ஷைத்தான் தான் பேயாக மனிதர்கள் மேலாடுகின்றான் என்பது பேய் குறித்த இரண்டாவது வகை நம்பிக்கை. இந்த வகையினர் ஷைத்தான் குறித்த வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, பேய் பிடித்தல் என்றால் ஷைத்தானின் வேலை! எனவே நாங்கள் மந்திரித்து பேயை விரட்டுகின்றோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். தாயத்து தகடு என்று மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் லெப்பைமார்கள், தங்கள்மார்கள் இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

"ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போல் வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : திர்மிதீ 2914

ஆதமுடைய மக்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான் என்ற நபிமொழி புகாரியில் (1897, 1894, 1898, 2870, 3039, 5751, 6636) இடம் பெற்றுள்ளது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.
(அல்குர்ஆன்2:275)

இந்த ஹதீஸ்களையும் வசனத்தையும் ஆதாரமாகக் காட்டி மனிதனை ஷைத்தான் தீண்டுவதால் அவனுக்குப் பேய் பிடிக்கின்றது என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள். இதுவும் அடிப்படையற்ற வாதமாகும். ஏனெனில் மேற்கண்ட ஹதீஸ்களில் ஆதமுடைய மக்கள் அனைவரிடமும் ஷைத்தானின் ஆதிக்கம் உள்ளது என்று தான் குறிப்பிடுகின்றது. அப்படியானால் உலகிலுள்ள அனைவருக்கும் பேய் பிடித்திருக்க வேண்டும். இந்த ஹதீஸ்களிலிருந்து இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தவறானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஷைத்தான் பேயாக வந்து மனிதர்களைப் பிடிப்பான் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷைத்தான் என்ற படைப்பைப் பற்றிக் கூறும் இஸ்லாம் அந்த ஷைத்தானின் வேலை என்ன என்பதையும் கூறுகின்றது. மனிதனை வழி கெடுப்பது தான் ஷைத்தானின் வேலையே தவிர மனிதனுடைய அறிவை நீக்கி அவனைப் பைத்தியத்தைப் போல் ஆக்குவது அவனது வேலை இல்லை. அதற்கு அவனுக்கு அதிகாரமும் இல்லை. மேற்கண்ட நபிமொழியே இதற்குப் போதுமான சான்றாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும் ஒரு ஷைத்தானும் இருக்கின்றார்கள் என்று மட்டும் அந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக, ஷைத்தான் எவ்வாறு தீண்டுவான் என்பதையும் சேர்த்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

"ஷைத்தானின் தாக்கம் என்பது தீமையில் ஆர்வமூட்டுவதும், சத்தியத்தை நிராகரிப்பதுமாகும்'' என்பது திர்மிதீ ஹதீஸின் பிற்பகுதியாகும். இதையும் சேர்த்து வாசிக்கும் போது ஷைத்தான் மனிதர்களை வழி கெடுப்பான் என்பது தான் இதன் பொருளே தவிர மனிதன் மேல் ஆடி, மென்டல் ஆக்குவான் என்பதல்ல.

வானவர் நல்ல விஷயங்களைச் செய்யுமாறு மனிதனைத் தூண்டுவார். ஷைத்தான் கெட்ட விஷயங்களைச் செய்யுமாறு தூண்டுவான். இதில் மனிதன் தனது சுய சிந்தனையுடன் தான் இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுக்கின்றான். ஷைத்தானுக்குக் கட்டுப்படுபவன் தீய காரியங்களைச் செய்கின்றான். வானவருக்குக் கட்டுப்படுபவன் நல்ல காரியங்களைச் செய்கின்றான்.

இதைத் தான் மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது. ஷைத்தானுக்குக் கட்டுப்பட்ட மனிதன் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் இழந்து பைத்தியமாகி விடுவதில்லை என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஷைத்தான் தான் பேயாக மாறி மேலாடுகின்றான் என்பது குர்ஆன் ஹதீசுக்கும் அறிவுக்கும் பொருந்தாத வாதமாகும்.

..............நூல் வடிவில் மேலும் அரிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்http://onlinepj.com/books/pey_pisasu_unda/
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்