கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை!



கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.
நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால்
கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!


உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன.
எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது.

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?
இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது?

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும்.
போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.
'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம்.
கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும்.
சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.
ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை