பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு
பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு
ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.
பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும்,அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
வரம்பு ஏதுமில்லாத அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
'அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்' என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
'குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப் படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.
நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், 'இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
1. இந்தியாவின் எல்லைகள்
2. குடியுரிமை
3. பொதுவானவை
4. கொள்கை விளக்கம்
5. அடிப்படைக் கடமைகள்
ஆகிய ஐந்து தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.
கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. நீதிமன்றம் சுட்டிக்காட்டக் கூடிய 44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.
கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. ஏறக்குறைய இந்த வகையில் இது அரசுக்கு சொல்லப்பட்ட ஆலோசனைகள் எனலாம். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
'இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது' என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.
கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டவற்றை உச்ச நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றமும் வலியுறுத்த முடியாது; அதற்கான அதிகாரமும் எந்த நீதிமன்றத்துக்கும் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்பு அந்தப் பகுதியில் கூறப்பட்ட 44வது பிரிவை மட்டும் அமல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
பொதுவாகவே கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் கூறப்பட்டவற்றை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இந்த 44வது பிரிவு, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைக்கு - கட்டாயம் வழங்க வேண்டிய உரிமைக்கு - முரணாகவும் இருக்கும் போது இதை எப்படி வலியுறுத்த முடியும்?
கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு ஏற்ப, கொள்கை விளக்கத்தில் உள்ள ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு முரணாகக் கொள்கை விளக்கம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்கும் இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள மற்றவற்றுக்கும் ஆட்பட்டும், எல்லோரும் தம் மனசாட்சிப்படி செயல்படுவதற்குரிய சுதந்திரம் உடையவர்கள் ஆவார்கள். தத்தம் மதத்தைத் தழுவ, மேற்கொள்ள, மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்கள் ஆவர்.
அரசியல் சாசனம் 25 (1)வது பிரிவு
விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம் என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.
எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத் திருமணம் செய்யலாம்? என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற சட்டங்களும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்டவை ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.
இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை - அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை - மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத் தான் விட்டு விட வேண்டுமே தவிர அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.
அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் எந்த உத்தரவும் வழங்காத நீதிமன்றம், இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான விஷயத்தில் மட்டும் கொள்கை விளக்கத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு உத்தரவிடுவது நமக்கு வியப்பாக உள்ளது.
அரசியல் சாசனத்தின் கொள்கை விளக்கப் பிரிவில் கூறப்பட்டுள்ள பல பிரிவுகள் இந்த நாட்டில் எந்த லட்சணத்தில் பின்பற்றப்படுகின்றன என்பதையும், அவை சம்பந்தமாக நீதிமன்றங்களின் போக்கையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அரசியல் சாசனம் 45வது பிரிவு
14வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.
கல்வியறிவு இல்லாத காரணத்தால் ஏமாற்றப்பட்டவர்களும், சுரண்டப்பட்டவர்களும் நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பங்களில் திட்டவட்டமான எந்தக் கட்டளையையும் நீதிமன்றங்கள் அரசுக்குப் பிறப்பிக்கவில்லை.
இவ்வாறு கட்டளை பிறப்பிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் இல்லை. இவ்வாறு கட்டளை பிறப்பிப்பதால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படப் போவதுமில்லை. இதை நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு வேளை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு இன்னும் பத்து ஆண்டுகள் நிறைவடையவில்லையோ என்னவோ? தெரியவில்லை.
உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
கொள்கை விளக்கம், 47வது பிரிவு
பொது சிவில் சட்டம் சம்பந்தமான கொள்கை விளக்கம் 44வது பிரிவு, அடிப்படை மத சுதந்திரத்துடன் முரண்படுகின்றது. மது விலக்கு சம்பந்தமான இந்தக் கொள்கை, அரசியல் சாசனத்தின் அடிப்படையுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை.
இன்று வரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இந்தக் கொள்கையை, மது விலக்கை இவ்வளவு நாட்களுக்குள் பின்பற்றியாக வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவும் இட்டதில்லை.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதை உடனே செயல்படுத்துமாறு கட்டளையிடாத நீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி மட்டும் கட்டளையிடுவது ஏன்?
நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்து விட்டதால், அந்த வழக்கில் பொது சிவில் சட்டம் பற்றிக் கட்டளையிட வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டு விட்டது' என்று கூறப்படும் சமாதானம் ஏற்க முடியாததாகும். ஏனெனில் மது விலக்கை உடனே அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதற்குரிய ஆயிரக் கணக்கான வழக்குகளை நீதிமன்றம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் விஷச் சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் அடிக்கடி மரணிப்பது தொடர்பான வழக்குகளையும் நீதிமன்றம் விசாரித்துள்ளது.
கொலை, கற்பழிப்பு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் பலர் மது அருந்தி விட்டுப் போதையில் தான் அதைச் செய்துள்ளனர். மது அருந்தியது தான் அதற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும், கொள்கை விளக்கம் 47வது பிரிவு மதுவிலக்கை அமல்படுத்தக் கூறிய பின்பும், அவ்வாறு அமல்படுத்தக் கட்டளையிடுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்று தெரிந்த பின்பும் அது தொடர்பாகத் தெளிவான கட்டளை பிறப்பிக்காத நீதிமன்றம் 44வது பிரிவில் மட்டும் அக்கறை செலுத்துவது ஏன்?
குடிமக்கள் தமது வயதுக்கும், சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறும் போது, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி, குறிப்பிட்ட நாட்களுக்குள் அமல்படுத்தும் உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. மனித உரிமைக் கமிஷன் கண்டுபிடித்துச் சொன்ன பிறகும், மனிதாபிமானத்துக்கு எதிராக, குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதை நிறுத்த எந்தக் கால வரம்பையும் நீதிமன்றம் கூறவில்லை.
தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.
அரசியல் சாசனம் 41வது பிரிவு
அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.
வேலை வாய்ப்பு இல்லாததால் தான் கொள்ளையடித்தோம்; திருடினோம்; கொலை செய்தோம் என்று எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளனர். அப்படியிருந்தும், இவ்வளவு நாட்களுக்குள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை இல்லாதோருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஆட்சியாளர்கள் செயல்படுத்தினால் நாட்டு மக்கள் கொந்தளித்துப் போக மாட்டார்கள். மாறாக மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு உத்தரவிடுவது யாருடைய அடிப்படை உரிமையையும் பறித்து விடாது.
தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் காலக்கெடு நிர்ணயித்து அதை அமல்படுத்துமாறு நீதிமன்றங்கள் கட்டளையிடவில்லை.
கொள்கை விளக்கம் பகுதியில் உள்ளவற்றைச் செயல்படுத்துமாறு அரசுக்கு நீதிமன்றங்கள் கட்டளையிட முடியாது என்றே அதற்குப் பதில் கூறுவார்கள்.
மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய இந்தப் பிரிவுகளைச் செயல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றால் மக்களுக்குப் பயன் தராத, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய, தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ என்ற சந்தேகத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய, இனிமேல் இந்த நாட்டில் முஸ்லிம்களாக வாழ முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ள 44வது பிரிவை அமல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து முளைத்தது?
அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளையே பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. இவர்கள் கொண்டு வர விரும்புகின்ற பொது சிவில் சட்டம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு குடிமகன், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருப்பதை முன்னர் குறிப்பிட்டோம். இந்த உரிமையை அப்பட்டமாகப் பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளன.
சிந்தித்து, விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட பின் ஜனநாயகம் என்பதற்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. இத்தகைய காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு எதிராக அறிவுஜீவிகளும், மத்திய ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் என்ன செய்தனர்? அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் இத்தகைய கருப்புச் சட்டங்களை அமல்படுத்தும் மாநில அரசுகள் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றன? இத்தகைய அரசுகளை உடனே பதவி இழக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஏதும் உண்டா? நிச்சயமாக இல்லை.
ஒரு குடிமகன் தனக்குச் சொந்தமான பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்று பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. ஒருவனுக்குச் சொந்தமான, உணவாகப் பயன்படும் பொருளை அவன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் இருக்கும் நாட்டில் சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளாகக் கூறப்பட்ட உரிமைகளுக்கே இந்தக் கதி! இந்த அக்கிரமத்துக்கு எதிராகக் கடுமையான எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத நீதிமன்றம், கொள்கை விளக்கத்தில் கூறப்படும் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது ஏன்? என்பது தான் நமது கேள்வி.
பொது சிவில் சட்டத்தை யார் உருவாக்குவார்கள்? பெரும்பான்மை மக்கள் தாம். பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தவர்கள். அவர்கள் உருவாக்கும் சட்டம் இந்து மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்படும். அதற்கு இந்தக் காட்டுமிராண்டித்தனமான மதமாற்றத் தடைச் சட்டமும், பசுவதைத் தடைச் சட்டமும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
இந்து மதச் சட்டங்களை முஸ்லிம்கள் மேல் திணித்த பிறகு இந்து மத வழிபாட்டு முறைகள், பொது வழிபாட்டு முறை' என்ற பெயரில் நாளை அறிமுகமாகும். அதற்கு முன்னோடியாகத் தான் பொது சிவில் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையினரில் பலர் ஆகிய அனைவரும் இந்த நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்றுவதற்குக் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெரிய வரும்.
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 44வது பிரிவை நினைவூட்டிப் பொது சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இன்னொரு வகையிலும் தவறாகும்.
ஒரு வாதத்துக்காக, 44வது பிரிவு அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு வருடத்துக்குள்' என்று நீதிமன்றம் எந்த அடிப்படையில் முடிவு செய்தது? அரசியல் சாசனத்தை உருவாக்கியோர் எந்தக் கால வரம்பையும் கூறாதிருக்கும் போது, ஒரு வருடத்துக்குள்' என்று வரம்பு கட்டிக் கூறியிருப்பதும் நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
தேவநாகரி வடிவத்தில் (லிபி) உள்ள ஹிந்தி, இந்தியாவில் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்க வேண்டும்.
அரசியல் சாசனம் 343 (1)
அரசியல் சாசனத்தில், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகின்றது.
மத்திய அரசு, இனி மேல் மாநில அரசுகளுடன் இந்தியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இந்தி மொழியில் தான் மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இதை உடனே அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுமா? உத்தரவிட்டால் அதை மத்திய அரசு செயல்படுத்துமா? செயல்படுத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகளை நாம் கூற வேண்டுமா?
சட்டத்தை அமல்படுத்துவதை விட நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே முக்கியமாகும். இதை உணர்ந்த காரணத்தினால் தான், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று நேரு உறுதியளித்தார். இந்த உறுதி மொழி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றாலும் மொழிவழிச் சிறுபான்மை மக்களின் கொந்தளிப்பைக் கவனத்தில் கொண்டு, நாடு பிளவுபட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தி திணிக்கப்படாமல் உள்ளது.
சிறுபான்மை மொழியினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருதி, வேண்டாத விபரீதங்களைத் தடுக்க எண்ணி, நாடு முழுவதும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க முடியவில்லை எனும் போது, சிறுபான்மை மதத்தவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயத்தில் மட்டும் தேவையற்ற உத்தரவை, நீதிமன்றம் தமது அதிகார வரம்பின் கீழ் வராத விஷயத்தில் ஏன் வழங்க வேண்டும்?
இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இனிமேல் உத்தரவு பிறப்பிக்க இந்தத் தீர்ப்பு வெள்ளோட்டமாகக் கூட அமையலாம். மொழிப் பற்றாளர்களும், மொழிக்காகப் போராடுபவர்களும், பொது சிவில் சட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தவறினால், நாளை மொழியைக் காக்க அவர்கள் போராட வேண்டியிருக்கும். அப்போது போராடுவதில் பயனில்லாமல் போகலாம்.
குடிமக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள் என்று அரசியல் சாசனம் கூறுவதால், இனிமேல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் தொகுதி ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அறவே கூடாது என்று நாளை தீர்ப்பு வழங்கப்படலாம். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம் என்று அப்போதும் நியாயம் கூறப்படலாம். அதற்கான வெள்ளோட்டமாகவும் இத்தீர்ப்பு அமையக் கூடும். எனவே பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அவர்களும் சேர்ந்து போராடக் கடமைப்பட்டுள்ளனர்.
தனியார் சிவில் சட்டம், சிறுபான்மை மொழிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுவதற்குப் போராட வேண்டிய நேரம் இது! இது போன்ற தீர்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் 44வது பிரிவு போன்றவை நீக்கப்படுவதற்கு அவர்களும் போராடியாக வேண்டும்.
அறிவு ஜீவிகள் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போர், பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது தான் அறிவின் வெளிப்பாடு' என்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். இதையொட்டி அரிய தத்துவங்களை எல்லாம் அள்ளித் தெளித்து வருகின்றனர். அவர்களின் உளறல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்? அறிவு சீவி(?)களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கேள்வி இது!
இந்தக் கேள்வியிலேயே அவர்களது மேதாவிலாசம் நமக்குத் தெரிந்து விடுகின்றது. இந்த அபத்தமான கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் விளக்கியாக வேண்டும்.
முஸ்லிம்களுக்கு, கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் இ.பி.கோ. பிரகாரமும், சிவில் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சட்டப் பிரகாரமும் அமைந்திருப்பது போல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் தவறாகும்.
கிரிமினல் விவகாரங்கள் எவ்வாறு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் பொதுவாக உள்ளனவோ அது போல் தான் சிவில் விவாகரங்களும் இந்திய உரிமையியல் சட்டத்தின் பிரகாரம் அனைவருக்கும் பொதுவாக உள்ளன. இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கடன் கொடுக்கிறான். இது சிவில் விவகாரம். கொடுத்த கடன் திரும்பி வரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் கடன் வாங்கியவன் திருப்பித் தர மறுக்கிறான்; இழுத்தடிக்கிறான். கடன் கொடுத்தவன் நீதிமன்றத்தை அணுகுகின்றான். இவ்வாறு அணுகும் போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டால் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க முடியாது. மூன்று வருடம் முடியாவிட்டால் தான் கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிடும்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இப்படித் தான் தீர்ப்பு வழங்கப்படும்.
இஸ்லாமியச் சட்டப்படி வாங்கிய கடனை எவ்வளவு நாட்கள் சென்றாலும் கொடுத்துத் தான் தீர வேண்டும். சிவில் சட்டங்கள் முஸ்லிம்களுக்குத் தனியாக உள்ளன என்றால் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தின்படியே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எந்தக் கடன் கொடுக்கல் வாங்கலுக்கும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இங்கே சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இவ்வாறு தான் தீர்ப்பு வழங்கப்படும்.
முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனி சிவில் சட்டங்கள் உள்ளன என்றால் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கலுக்கு வட்டி கொடுக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது. ஏனெனில் இஸ்லாத்தில் வட்டி முழுமையாகத் தடுக்கப்பட்டதாகும்.
உதாரணத்திற்குத் தான் இந்த இரண்டை மட்டும் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். சிவில் சட்டங்கள் அனைத்துமே இப்படிப் பொதுவாகத் தான் உள்ளன.
திருமணம், தலாக் (கணவன், மனைவியை விவாகரத்துச் செய்வது), குல்ஆ (மனைவி, கணவனை விவாகரத்துச் செய்வது), பஸக் (முஸ்லிம் தலைவர் ஒருவர் ஒரு திருமணத்தைச் செல்லாது என்று அறிவித்தல்), வாரிசுரிமை, வக்ஃபுச் சட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமே முஸ்லிம்கள் தம் மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமறிந்த வரையில் இவற்றைத் தவிர மற்ற சிவில் விவகாரங்களில் பொது சிவில் சட்டமே முஸ்லிம்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
பார்ப்பன ஏடுகளும், அறிவுஜீவிகள் என்று கூறிக் கொள்ளும் மேல் ஜாதியினரும் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சிவில் சட்டம் வழங்கப்பட்டுள்ளது போலப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பிரச்சாரம் விஷமத்தனமானது; பொய்யானது என்பதைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.
நாம் சுட்டிக் காட்டிய திருமணம் முதலான விவகாரங்கள், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே அமல்படுத்திக் கொள்ளக் கூடியவை. மற்ற சமுதாயத்திற்கோ, நாட்டுக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் கேடும் ஏற்படப் போவதில்லை. இந்தச் சட்டங்களை அமல் செய்வதால் முஸ்லிம்களில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டால் கூட அதை சிரமப்படுபவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறான். அறிவுஜீவிகள் இதை உணர வேண்டும். இனி அவர்களின் கேள்விக்கு வருவோம்.
கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய - மதம் சம்பந்தப்பட்ட - மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.
இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள் தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.
கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்படும் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால் தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்.
இன்னொன்றையும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டும். ஓரிரண்டு விஷயங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது போலவே மற்ற மதத்தவர்களுக்கும் சில தனிச் சட்டங்கள் உள்ளன.
ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்குக் குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது.
(அரசியல் சாசனம் 19வது பிரிவு (1) ஆ)
ஆயுதங்களின்றி கூடுவதற்குத் தான் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று அரசியல் சாசனம் கூறுகின்றது. கிர்பான் (குறுவாள்) வைத்திருப்பதும், அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும்.
(அரசியல் சாசனம் 25வது பிரிவு, விளக்கம் 1)
குறுவாள்களை வைத்துக் கொண்டு சீக்கியர்கள் மட்டும் நடமாடலாம்; கூடலாம் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.
முஸ்லிம்கள் தமக்கிடையே செய்து கொள்ளும் திருமணம், பாகப்பிரிவினை போன்றவை பிற சமுதாயத்தினருக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதில்லை. குறுவாள்களுடன் ஒருவர் நடமாடுவதும், அவ்வாறு பலர் ஒன்று கூடுவதும் ஏனைய மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும். அப்படி இருந்தும் அது சீக்கிய மதத்தின் ஓர் அம்சமாக இருப்பதால் அரசியல் சாசனம் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.
பஞ்சாப் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பகுதியினரின் மத வழிபாட்டில் குறுக்கிடக் கூடாது என்பதே இதன் காரணம்.
அது போல் ராணுவம், காவல்துறைகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தச் சீருடைகள் தான் அவர்கள் அணிய வேண்டும். ஆனால் சீக்கியர்கள் தலைப்பாகையுடனும், தாடியுடனும் ராணுவம் மற்றும் காவல்துறையில் பணி புரியலாம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிர்வாணச் சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.
அது போன்று இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கு வரி விலக்கு, தத்து எடுத்தல், திருமண விதிகள் போன்றவற்றில் இந்துக்களுக்கு தனிச் சிவில் சட்டம் உள்ளது. அது போன்றே கிறித்தவர்கள், பார்ஸிகள் போன்றோருக்கும் மற்றும் பல சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கும் தனிச் சிவில் சட்டங்கள் உள்ளன.
நாட்டு ஒற்றுமையில் அக்கறை உள்ளவர்கள், மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது தான் முக்கியமே தவிர சட்டத்தை அமல் செய்கிறேன் என்ற பெயரில் நாட்டில் இரத்தக் களரி ஏற்படுத்துவதை அரசியல் சாசனமே விரும்பவில்லை என்பதற்கு இவை ஆதாரங்களாகும்.
'நாடு ஒற்றுமையாகவும், கட்டுக் கோப்பாகவும் இருக்க வேண்டுமானால் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருப்பதே பொருத்தமானது' இதுவும் அறிவுஜீவிகளின் வாதமாகும்.
சிவில் சட்டங்கள் ஒரு புறமிருக்கட்டும்! முதலில் கிரிமினல் சட்டங்களில் கட்டுக் கோப்பைக் குலைக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்திக் காட்டட்டும் என்று அறிவுஜீவிகளை நாம் கேட்கிறோம்.
ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாது போலும். மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லை போலும்.
விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளது.
சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.
மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள். ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை! நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு! இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக்கூடியவர்கள் தான் அறிவுஜீவிகளாம்.
முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன நாடுகள் எத்தனை? கூறுவார்களா?
மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.
வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத் தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.
புத்த மதத்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.
அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.
அறிவுஜீவிகள் என்போர், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?' என சிறுபிள்ளைத் தனமான கேள்வி கேட்கின்றனர்.
சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும் மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.
நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. இது கூடத் தெரியாத இவர்கள் தாம் அறிவுஜீவிகளாம்.
முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது அறிவுஜீவிகளின் கடைசி அஸ்திரம்.
சிந்திக்கும் திறன் சிறிதுமற்ற இவர்களின் வாதம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தச் சட்டம் இறைவன் வழங்கிய சட்டமாகும் என்று நம்பி, அதனால் ஏற்படும் சிரமங்களை மனப்பூர்வமாக விரும்பியே முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். இதையாவது இந்த அறிவுஜீவிகள் உணர வேண்டும்.
பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.
ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.
இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது! திருமணம் செய்து மனைவியுடன் வாழ்பவர் விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனால் எல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். இவர்களின் அறிவு எவ்வளவு விசாலமானது என்பது தெரிகின்றதல்லவா?
முதல் மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வது தான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது பொது சிவில் சட்டம்.
வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.
இப்போது நாம் கேட்கிறோம்.
எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இது தான் பொது சிவில் சட்டம்.
இதற்கும் பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொது சிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத் தான் செய்கிறது.
ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக்கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்து விட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதி தான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரை விட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.
கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.
நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்பது கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் மற்றொரு அபத்தக் கேள்வி!
நிச்சயமாகக் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பது தான் உண்மை.
நீதிமன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டத்திற்கு உட்பட்ட பிற சமுதாயத்தில் தான் பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.
நீதிமன்றத்தில் தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்தி விட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமை தான்.
எந்த முஸ்லிம் கணவனும் தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பது தான்.
மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது. அறியாமைக்கு மறு பெயர் தான் அறிவுஜீவித்தனமோ!
விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள் இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பது தான் உண்மை.
விவாகரத்துச் செய்த பின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் கேள்வி!
ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறுவோர் ஆண் மட்டும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோருவது குழப்பத்தின் உச்சக்கட்டமாகும்.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும் வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால் தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று அறிவுஜீவிகள் சிந்திக்கட்டும்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக முஸ்லிம்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப் பதவிகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டனர். கலவரங்களால் அவர்களின் உயிர், உடைமைகள், கற்பு ஆகிய அனைத்தும் பறிக்கப் படுகின்றன. ஆள்வோரின் துணையுடன் இந்து வெறி சக்திகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. ஆட்சியாளர்களே ஒரு பள்ளியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தடா எனும் பெயரில் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளனர். பருந்தின் வாயில் சிக்கிய கோழிக்குஞ்சு போன்ற நிலையில் நொந்து போயிருக்கின்றது முஸ்லிம் சமுதாயம்! எத்தனை உரிமைகள் மறுக்கப்பட்டாலும் முஸ்லிம்களாக வாழும் உரிமையாவது இங்கு இருக்கின்றது என்பது மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களாக வாழும் உரிமையும் பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள். முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.
கொள்ளிக் கட்டையால் முதுகைச் சொறிந்து கொள்ளும் வேண்டாத வேலையில் ஈடுபட்டு, நாட்டின் அமைதியை ஆட்சியாளர்கள் குலைக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
அல்ஜன்னத், ஜூலை 1995இதழில் பி.ஜே. எழுதிய தலையங்கம்
இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் மேற்கோள்கள், அ.ச. நடராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள, இந்திய அரசியல் சாசனம்' (மூன்றாம் பதிப்பு) எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
Comments