உதாரணத்திற்கு அப்பாற்பட்டவனே கடவுள்
உதாரணத்திற்கு அப்பாற்பட்டவனே கடவுள்
இறைவனுக்குரிய இலக்கணம் அவனைப் போல் யாரும் இல்லை எதுவும் இல்லை என்று நம்புவதாகும்.
எதைப் போன்றும் அவனில்லை. அவனைப் போன்று எதுவும் இல்லை என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிற போது, அல்லாஹ்வுக்கு இணைவைக்கிற சித்தாந்தங்களும் பல கடவுளை நம்புகிற போலிச் சிந்தாந்தங்களும் அடிபட்டுவிடுகின்றன.
ஆனால் இதை உணர்ந்து கொள்ளாத சிலர் அல்லாஹ்வை நீதிபதியுடன் ஒப்பிட்டு உதாரணம் கூறுவதைப் பார்க்கலாம்.
ஒருவன் தவறு செய்து விடுகிறான் அல்லது ஒருவன் மீது தவறான குற்றச்சாட்டு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு வழக்குறைக்க நீதிமன்றத்திற்குச் சென்றால், அவனே நேரடியாக நீதிபதியிடம் பேசமுடியாது.
அவன் தரப்புக்காக வாதாடும் வக்கீலைத் தேர்வு செய்து அந்த நீதிபதியிடம் பேசவேண்டும். நீதிபதியிடம் பேசுவதற்கே ஒரு வக்கீல் தேவையென்றால், நீதிபதிக்கெல்லாம் பெரிய நீதிபதியான அல்லாஹ்விடம் பேசுவதற்கு அவ்லியா - மகான் என்று ஒரு வக்கீல் தேவையில்லையா என்று கேட்கின்றனர். இப்படி அல்லாஹ்விற்கு உதாரணம் சொல்வதே முதலில் தவறு. அல்லாஹ்விற்கு இழுக்குச் சேர்ப்பதாகும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை என்று சொன்னபிறகு, நீதிபதியைப் போன்று அல்லாஹ் இருக்கிறான் என்று அல்லாஹ்வுக்கு நீதிபதியை உதாரணமாகக் கொள்வது, அவனுக்கு நிகராக எதுவுமில்லை எவருமில்லை என்கிற لم يكن له كفوا أحد இந்த வசனத்திற்கு மாற்றமானதாகும்.
இந்த வாதமாவது நியாயமானதா? என்றால் கடவுளின் தன்மையைக் குறைத்து மதிப்பிடுகின்ற ஈனச் செயலாகத்தான் இருக்கிறது. நீதிபதிக்கு எல்லாக் காலமும் தெரியாது. மறைவான விஷயமும் தெரியாது. பணத்தை வீசினால் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்புச் சொல்லுகிற பலவீனமானவர் தான் நீதிபதி. மேலும் வக்கீல் எடுத்துவைக்கிற வாதங்களின் அடிப்படையில்தான் அவரால் தீர்ப்புச் சொல்லவே முடியும். குற்றம் செய்தவன் தரப்பு வக்கீல் வாதத்திறமை உள்ளவராக இருந்தால் தப்பித்துவிடுவது சுலபம். அல்லாஹ்வுக்கு வழக்கறிஞர் தேவை என்றால் அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாது. யாராவது சொல்லித்தான் அந்த வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பளிப்பான் என்று ஆகாதா?
எந்த வாதப்பிரதிவாதமும் இல்லாமல் எல்லாம் தெரிகிற அல்லாஹ்வுக்கு எதற்காக வக்கீல்? சிந்திக்க வேண்டாமா? நீ திருடினாயா? இல்லையா? என்று எனக்குத்தான் தெரியுமே! நீ நோன்பு வைத்தாயா? இல்லையா? என்று எனக்குத்தான் தெரியுமே! நீ ஜகாத் கொடுத்தாயா?இல்லையா? என்றும் எனக்குத் தெரியுமே! பிறகு எதற்காக எனக்கு வக்கீல்? என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? நன்றாக சிந்தித்துத்தான் இப்படி சொல்லுகிறீர்களா? இப்படியெல்லாம் அல்லாஹ்வைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
எனவே மனிதனுக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனால் படைத்த இறைவனுக்கு நல்லது கெட்டது தெரியும். சில நேரங்களில் பொய்யாக வழக்கைப் பதிவு செய்துவிடுகிறார்கள். அதுபோன்று அல்லாஹ்வும் தவறுதலாக நம்மீது வழக்குப் போடுவானா? சிந்தியுங்கள். இப்படியெல்லாம் அல்லாஹ்விற்கு உதாரணம் கூறி அல்லாஹ்வின் தன்மைக்கு இழுக்கைச் சேர்க்காதீர்கள்.
அடுத்ததாக, தர்ஹா வழிபாடு செய்கிறவர்கள் அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் நமக்காக சிபாரிசு செய்வார்கள். பரிந்து பேசுவார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கும் வழிகேடான கொள்கையாகும். அல்லாஹ்விடத்தில் எதற்காக சிபாரிசு செய்ய வேண்டும்? என்னைப் பற்றித் தெரியாதவர்களிடம்தான் சிபாரிசு செய்ய வேண்டும். என்னைப் பற்றியும் எல்லாவற்றையும் பற்றியும் தெரிகிற அல்லாஹ்விடம் ஏன் சிபாரிசு செய்ய வேண்டும்?
இதை விளங்கிக் கொள்வதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். என் தந்தையிடம் வந்து ஒருவர் இவர்தான் உங்கள் மகன் என்று தெரியப்படுத்தினால் எப்படியிருக்குமோ அதைவிட கேவலமானது, பைத்தியக்காரத்தனமானது தான் அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் நமக்காகப் பரிந்து பேசுவார்கள் என்பது.
என் தந்தை என்னைத் தெரிந்து வைத்திருப்பதைவிட என்னைப் படைத்த அல்லாஹ் என்னை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான். என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த அவனிடம் எனக்காக ஏன் சிபாரிசு செய்ய வேண்டும்? இவர் சொல்லித்தான் அல்லாஹ்விற்கு என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லையே.
இந்த அவ்லியா நம்மைப் பற்றி அல்லாஹ்விடம் சொல்லி நமக்கு நன்மையைப் பெற்றுத் தருவார், சுவர்க்கத்தைப் பெற்றுத் தருவார் என்பதற்கெல்லாம் இஸ்லாத்தில் வேலையில்லை. இவை பிறமதக் கோட்பாடுகள். இறைவனுக்கு இணைவைக்கிற செயல்பாடுகள். மக்கத்துக் குறைஷிக் காஃபிர்களின் நம்பிக்கை. எனவே இப்படியெல்லாம் அல்லாஹ்விற்கு இழிவை ஏற்படுத்தக்கூடாது.
அதேபோன்று கடவுளின் பெயரைப் பயன்படுத்தி தவறு செய்கிறவர்கள் அனைவருமே, கடவுளை சூரியன் மாதிரியென்றும், நீதிபதி மாதிரியென்றும், வக்கீல் மாதிரியென்றும்,மின்சாரம் மாதிரியென்றும், ரொட்டி மாதிரி சட்டி மாதிரி என்றெல்லாம் கூறி கடவுளை கடவுளால் படைக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு உதாரணம் காட்டிக்கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கிறார்கள்.
அதனால்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு முத்திரை வைக்கிறான். அந்த முத்திரைதான் அவனுக்கு நிகராக எதுவும் எவனுமில்லை என்பதாகும். எனவே அல்லாஹ்வுக்கு நிகராக எதையாவது யாராவது உதாரணம் காட்டினார்களெனில் அது பொய் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ள வேண்டும். அவைகளைத் தூக்கியெறிந்துவிட வேண்டியதுதான்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 16:74)
(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால்நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச்செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 42:11)
36வது யாசின் அத்தியாயத்தில் இதை விடவும் கடுமையாக எச்சரிக்கிறான்.
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
(அல்குர்ஆன் 36:78)
எனவே இந்த அத்தியாயத்தை திரும்பத் திரும்ப உருப்போட்டால், ஏகத்துவமே மனிதன் வெற்றி கொள்வதற்கான சரியான சித்தாந்தம் என்பதை உருப்போடுகிற ஒவ்வொரு முறையும் உணரலாம். இந்த அத்தியாயத்தின் ஒவ்வொரு வசனத்தையும் சுருக்கி சுருக்கித்தான் விளக்குகிறோம். இந்த ஒரு சூராவை மட்டுமே ஒரு ரமலான் முழுவதும் பேசலாம். அவ்வளவுக்கு இதில் விஷயம் இருக்கிறது. அதனால்தான் சூரத்துல் ஃபாத்திஹாவின் விளக்கத்திலேயே கடவுளைப் பற்றி முழுவதுமாக அலசிவிட்டோம். அதிலுள்ள முழு விஷயங்களையும் இதில் சொல்லப்பட்ட செய்திகளையும் சேர்த்து விளங்கிக் கொண்டாலேயே ஒரு கடவுளைப் புரிந்துகொள்வதற்கான அத்தனை அம்சங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி புரிந்து கொண்டு இருவுலகிலும் கண்ணியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
பி.ஜைனுல் ஆபிதீன்
Comments