ஒன்று சேர்க்கப்படும் நாள்…

ஒன்று சேர்க்கப்படும் நாள்…

         இப்பிரபஞ்சத்தில் நம்மை அல்லாஹ் சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமான இஸ்லாத்தை நம் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்கு அளித்த மாபெரும் கிருபை. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாம் சில அடிப்படை விஷயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், நெறிநூல்களை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல் இறுதி நாள் (மறுமை) போன்றவற்றை உண்டென்று நம்பியிருந்தாலும் இறுதியாகச் சொல்லப்பட்ட மறுமை நாள் குறித்து
 நம்பிக்கை குறைவாகவோ அல்லது அறவே நம்பிக்கை இல்லாத நிலையில் பாராமுகமாகவே பலர் இருந்து வருகிறோம்.


மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பாராமுகமாக இருக்கிறார்கள். அல்குர்ஆன் 21-1

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்குர்ஆன் 40-59


இறைவன் இவ்வசனத்தில் கூறுவதற்கு ஏற்ப மறுமை குறித்து நாம் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருக்கிறோம். எவ்வாறெனில் மறுமையை பயந்து அதற்காக தன்னுடைய நல்லறங்களை முற்படுத்தி அனுப்ப வேண்டியவன் எவ்வாறிருக்கிறான் என்றால், படைத்த இறைவனுக்கு இணை வைப்பவனாக, கொலை செய்பவனாக, பொய் பேசுபவனாக, நயவஞ்சகனாக புறம் பேசுபவனாக, பிறர் பொருளை அபகரிப்பவனாக, அமானித மோசடி செய்பவனாக, வரதட்சனை, வட்டி வாங்குபவனாக, விபச்சாரம் செய்பவனாக, பிறர் துன்பம் கண்டு இன்புறுபவனாக தொழுகையில்லாதவனாக, இன்னும் பிற பாவங்களைச் செய்பவனாகவும் இருந்து வருவதே இறைவனின் கூற்றுக்கு சான்றாக இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோர் அந்நாளில் இறைவனின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே!) நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். அல்குர்ஆன் 18-47

இவ்வுலகில் நாம் வாழும் காலத்தில் சில காரியத்தை செய்ய நாடுகிறோம். உதாரணமாக நம்முடை திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றால் அதற்காக பல நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு திட்டங்கள் தீட்டி பொருளாதாரத்தை தண்ணீராய் இறைக்கிறோம். பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு முயன்று உழைக்கிறோமே நாளை நாமனைவரும் சந்திக்க இருக்கும் அந்த மறுமை நாளுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்ன முற்படுத்தி அனுப்பியிருக்கிறோம்?

இவ்வுலகில் வாழும் காலத்தில் இறைவன் அளித்த அருட்கொடைகளை அனுபவித்து விட்டு, மறுமைக்காக எதையும் செய்யாமல் அந்நாளை அடைந்த துர்பாக்கியசாலி நாளை மறுமையில் கைசேதப்படுவதை அல்குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது. 

அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். அல்குர்ஆன் 89-23,24

எவர் தன் இறைவனுக்கு பயந்து இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி செலுத்தி நன்மையை முற்படுத்தி அனுப்பியிருந்தாரோ அத்தகைய அடியார்களைப் பற்றி

27-89 (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந்தீர்ந்து இருப்பார்கள். 

மேலும் அந்நாளைப்பற்றி அல்லாஹ்வின் வர்ணனையைப் பாருங்கள்.

81-1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது 81-2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- 81-3 மலைகள் பெயர்க்கப்படும் போது- 81-6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- 82-1 வானம் பிளந்து விடும்போது 82-3 கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, 82-4 கப்றுகள் திறக்கப்படும் போது, 84-3 இன்னும், பூமி விரிக்கப்பட்டு, 84-4 அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- அல்குர்ஆன் 

70-8 வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- 70-9 இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- 86-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். அல்குர்ஆன் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் மறுமை நாளைக் காண விரும்பினால், அவன்(84) سُورَة الإنشِقَاق, (82) سُورَة الإنفِطَار (84) سُورَة الإنشِقَاق ஆகிய மூன்று அத்தியாயங்களை ஓதட்டும்! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) நூல்: திர்மிதி

அநாளின் நிலமைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் நம் மனக்கண் முன் கொண்டு வருகின்றனர்.

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள். 78:37

இவ்வுலக தேவைகளை பிறரிடம் உதவியை எதிர்பார்த்தோ யாசித்தோ காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் உடல் உறுப்புகளைக்கூட தானமாக பெற்று வாழ முயற்சிக்கிறோம். ஒருவனுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய கட்டாய சூழலில் அவனை பாசத்தை கொட்டி வளர்த்த தாய் தந்தை உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அரவணைத்த உறவினர்கள், உயிராய் பழகிய நண்பர்கள் என சுற்றமும் நட்பும் வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு சிறுநீரகத்தை தானமாய்த் தர முன்வருவர். ஆனால் அமளியான அந்த மறுமை நாளில் இந்த சுற்றத்தாரும் நட்பு வட்டமும் எவ்வாறு இருப்பர் என்பதை திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.

80-33 ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - 80-34 அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - 80-35 தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; 80-36 தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- 80-37 அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.அல்குர்ஆன் 

மனிதனைப் படைத்து அவனுக்கு சுவையான உணவும் சுவையான பானங்களும் சுவாசிக்க காற்றையும், ரசிப்பதற்கு கண்களையும் கேட்பதற்கு செவிகளையும் அவனுக்கு அழகிய வடிவங்களையும் தந்து வாழ்வதற்கு இந்த பூமியை விசாலமாக்கி தந்த அந்த ரஹ்மானுடைய அருட்கொடைகளை மறந்து அவனுடைய வசனங்களை அலட்சியப்படுத்திய இறை மறுப்பாளர்களின் நிலையைப்பற்றி இறைவன்,

88-2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். 88-3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். 88-4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். 88-5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். 88-6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. 88-7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. அல்குர்ஆன் 

இவ்வுலகில் எந்த சரீர சுகத்திற்காக ஓடி ஓடி உழைத்தானோ அந்த உடல் உறுப்புகள் அந்நாளில் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

36-65 அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். அல்குர்ஆன் 

69-26 "என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- 69-27 "(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? 69-28 "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! 69-29 "என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அலறுவான்). அல்குர்ஆன் 

பயங்கரங்கள் நிறைந்த அந்நாளில் படைத்தவனின் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தி அவனை முறைப்படி வணங்கி முறையாக தான தர்மங்கள் செய்து அவனை பயந்து பல நல்லறங்களை முற்படுத்தி அனுப்பியிருந்தானே அந்த நல்லடியார்களைப் பற்றி

80-38 அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். 80-39 சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். அல்குர்ஆன் 

69-24 "சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என கூறப்படும்). அல்குர்ஆன் 

27-89 (அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள். அல்குர்ஆன் 

அந்நாளிலே வானவர்கள் கூறுவார்கள்

41-31 "நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். 41-32 "மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்). அல்குர்ஆன் 

மேலும் நபி (ஸல்) அவர்கள் அந்நாளின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

எனது இறைவனே! உனது அடியார்களை (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில் உன்னுடைய வேதனையிலுருந்து என்னை காப்பாயாக! நூல்: திர்மிதி, அபூதாவூத்

அந்நாள் நமக்கு மிக இலேசான நாளாக அமைய நாம் நல்லறங்களை முற்படுத்தி அனுப்பத் தயாராவோம். யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து நல்லோர்களுடன் சேர்த்தருள்வாயாக! ஆமீன்.
                                                                    
  ஆக்கம்:  இப்னு சித்தீக், கடையநல்லூர் 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை