புனே வரை நீண்ட வாதம்


புனே வரை நீண்ட வாதம் 

முன்னுரை:
அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள சகோதரர்களுக்கு,
எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் பெற்று தாங்கள் வாழ பிரார்த்தித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
இஸ்லாமிய அழைப்புப் பணிசெய்ய எனது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை தங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகளை தெரிவித்தவனாக எனது இந்தப்பதிவை ஆரம்பம் செய்கிறேன்.
நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பூனே நகரில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன். கடந்த 25-Jan-2010 அன்று நானும் எனது மனைவியும் பூனே நகரில் இருந்து இரயில் பயணமாக எனது சொந்த ஊறான மதுரைக்கு சென்று கொண்டிருந்தோம். மாலை நான்கு மணிக்கு எங்களது இரயில் கிளம்பியது. எங்களுடைய டிக்கெட் RAC என்பதால், இருவரும் ஒரே இருக்கையை பகிர்ந்து அமர்ந்திருந்தோம்.
எங்களுக்கு எதிரே, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் அமர்ந்திருந்தனர். 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரது மனைவியும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரது மனைவியும் அவர்களது இரு புதல்விகள், ஒருவருக்கு சுமார் 8 வயதும் மற்றொன்று 6 மாதங்களே ஆன ஒரு கைக்குழந்தையுமாக அவர்களது குடும்பம் இருந்தது.
நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். கைக்குழந்தை இருந்ததினால் அறிமுகம் செய்துகொள்வது சற்று எளிதான காரியமாகவே இருந்தது. அவர்களும் மிகக்கனிவாக பேசினார்கள். இரவில் அவர்களது 8 வயது மகளுக்கான இருக்கையில் எனது மனைவியை தூங்கிக்கொள்ள அனுமதித்தார்கள். ஆக, மிகவும் சுமூகமான முறையில் அன்றையதினம் கழிந்தது.
மறுநாள் காலை உணவு முடிந்தபிறகு, எல்லோருமாக அமர்ந்து பொதுவாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஒரு கிறிஸ்தவ மத பேராயர் என்பதையும் மும்பையில் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் என்பதையும், அங்கிருந்த மற்றொருவர் அவரது தம்பி மகன் என்பதனையும் அறிந்துகொண்டோம். இவ்வாராக உரையாடல்கள் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஹிஜாப் அணிந்திருந்த என் மனைவி தனது தலைச்சீலையை சரிசெய்து கொண்டிருந்தார். அதனைப்பார்த்த அந்த பாதிரியாரின் மகன், ”இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்? இது கட்டாயம் செய்யவேண்டுமா?” என தனது சந்தேகத்தை முன்வைத்தார்.

இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக எங்களுக்கு தெரிந்த விளக்கங்களை நாங்கள் கூறினோம். பிறகு ”தீவிரவாத செயல்களில் முஸ்லிம்கள் அதிகம் ஈடுபடுவது ஏன்?” “முஸ்லிம்கள் பலதாரமனம் செய்வதேன்?” இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ன?” “முஹம்மது நபி என்பவர் யார்?” ”இஸ்லாத்தில் பெண்களை அடக்குமுறைக்குள்ளக்குவது ஏன்?”, “இஸ்லாமிய சட்டங்கள் மிகக்கொடுமையாக இருப்பதேன்?” என தனக்கு இருந்த பல சந்தேகங்களை அவர் கேள்விகளாக தொடுத்தார். நாங்களும் எங்களுக்கு தெரிந்த பதில்களை எங்களால் இயன்ற அளவிற்கு அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்தினோம்.
பிறகு இறைத்தூதர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது “இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஏசுவும் ஒரு இறைத்தூதர்தான். கிறிஸ்தவர்கள் வணங்கக்கூடிய கர்த்தரும் முஸ்லிம்கள் வணங்கக்கூடிய அல்லாஹ்வும் ஒருவரே. ஆனால் ஏசுவை நீங்கள் கர்த்தரின் மகன் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்களோ அவரை கர்த்தரின் தூதர் என கூறுகிறோம்” எனக்கூறி கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் நுழைய ஆரம்பித்தோம்.
அதில் முதலாவதாக, கிறிஸ்தவம் என்பது என்ன? அந்த மதத்தின் கொள்கைகள் என்ன? என்பவைகளை விளக்குமாறு கோரினோம். அதற்கு அந்த பேராயர் அவர்கள் “ஆதி மனிதர் ஆதாம் அவர்கள் ஒரு தவறு செய்தார். அதன் காரணமாக அவரும் அவரது மனைவியும் சபிக்கப்பட்டார்கள். எவ்வாறு சபிக்கப்பட்டார்கள் என்றால், ஆதாமின் சந்ததியில் வரும் ஆண்கள் அனைவரும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்து தங்களின் வாழ்க்கையை நடத்தவேண்டும். ஆதாமின் சந்ததியில் வரும் பெண்கள் அனைவரும் தாங்க முடியாத வலியை பிரசவிக்கும்போது அனுபவிக்கவேண்டும் - என ஆண்டவர் மனிதகுலத்தை சபித்து சுவர்க்கத்தை விட்டு வெளியேற்றினார்” என கூறிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் இடைமறித்து,
”தாங்கள் தற்போது கூறியதில் எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதனை தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் எனக்கூறி, “இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த சாபம் என தாங்கள் கூறிய இந்த சம்பவம் பைபிளில் உள்ளதா?” எனக்கேட்டோம். அதற்கு அவர்களும் ஆம் என்றார்கள்.
அப்போது நாங்கள் அவரிடம் “நாங்கள் கேட்பதை தவறாக நினைக்க வேண்டாம். ஆண்டவர் மனிதகுலத்திற்கு இட்ட சாபம் உண்மையாக இருக்குமெனில், சர்ச்சில் வேலைசெய்யக்கூடிய பாதிரியார்கள் யாருமே நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைப்பது இல்லை. மேலும், சர்ச்சில் இருக்கக்கூடிய கன்னியாஸ்திரிகள் யாருமே குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. அதனால் அவர்கள் தாங்கமுடியாத வலியை அனுபவிப்பதும் இல்லை. ஆக, பைபிளில் ஆண்டவர் கொடுத்த சாபம், பைபிளை பின்பற்றக்கூடிய பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரிகளுக்குமே பலிக்கவில்லையே! அது ஏன்?” என வினவினோம்.
அதற்கு அவர்கள் “அப்படி இல்லை. இந்த கஷ்டங்கள் இல்லாத மனிதர்களுக்கு வேறு வகையான சங்கடங்கள் அவர்களது வாழ்க்கையில் இருக்கும். எப்படியாயினும் எல்லா மனிதர்களும் கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும்” என கூறினார்கள்.
அப்போது நாங்கள் “மனிதகுலம் அனைத்துமே சங்கடங்களை அனுபவித்தே ஆகவேண்டும் என ஆண்டவர் சபித்திருந்தால் நீங்கள் சொல்லக்கூடிய வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆண்டவரோ குறிப்பிட்ட ஒரு செயலை கூறி இதுதான் மனிதகுலத்திற்கு தண்டனை என சபிக்கிறார். உதாரணமாக அனைத்து மனிதர்களும் மல ஜலத்தை தங்களில் வாழ்நாள் முழுவதும் சுமந்தே செல்லவேண்டும் என ஆண்டவர் சபித்திருந்தால், அதனை ஒரு சாபமாக ஏற்றுக்கொள்ளலாம். காரணம் அது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. ஆனால், பைபிளில் ஆண்டவர் இட்ட சாபமானது நடப்பு உலகில் பலருக்கு பொருந்தாத சாபமாகவே உள்ளதே! அது ஏன்?” என வினவினோம்.
சிறிது நேரத்திற்கு மௌனமான இருந்துவிட்டு  “ஆண்டவரின் சாபம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது கொள்கைக்கு வருவோம். ஆதாமும் ஏவாளும் தவறு செய்துவிட்டார்கள். அதனால் அவர்கள் பரலோக இராஜியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மூலமாகவே இவ்வுலகில் சந்ததிகள் உண்டாயின. அவர்கள் பாவம் செய்த காரணத்தினால் அவர்களுக்குப் பிறந்த மனித சமுதாயமும் பாவிகளாகவே பிறந்தனர்…” என்று கூறிக்கொண்டிருக்கும்போது நாங்கள் மீண்டும் இடைமறித்து, 

ஆதாம் தவறு செய்ததால் அவர் பாவி என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், ஆதாமுக்கு பிறந்த ஒரே காரணத்தினால் அவர்களது சந்ததிகளும் பாவிகள் என எவ்வாறு ஏற்றுக்கொள்வது? உதாரணத்திற்கு ஆதாமில் இருந்து 1001 ஆம் தலைமுறையாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள். தங்களது இந்த 6 மாத குழந்தையை 100 கொலை, 200 கொள்ளை, 300 திருட்டு, 400 வழிப்பறிகளை ஏன் செய்தாய் என நான் விசாரிக்கலாமா? அல்லது இத்தனை பாவமும் இக்குழந்தையின்மேல் உள்ளது என்று சொன்னால் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என வினவினோம். 
அதற்கு அவர் “அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்குத்தான் விபரமே தெரியாதே. அவர்களை எப்படி விசாரிப்பது?” என்றார். அப்போது நாங்கள் “மனிதர்களாகிய நாமே இப்படி நினைக்கும்போது, அனைத்தையும் அறிந்த ஆண்டவர் நாம் செய்யாத ஒரு தவறுக்காக நம்மை எப்படி தண்டிப்பார்?” என வினவினோம்.  
அதற்கு அவர்கள் “ நீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் அன்பே உருவான ஆண்டவர், மனிதர்கள் அனைவரையும் இந்த பாவத்தில் இருந்து விடுவிக்க, தனது ஒரே குமாரனை இப்புவியில் பிறக்கச்செய்து, அவரை பலிகொடுத்து பாவங்களுக்கு பிராய்ச்சித்தம் செய்தார். அதனால், அந்த பாவம் மன்னிக்கப்பெற்று மனிதர்கள் அனைவரும் நிவாரணம் அடைந்தனர்” என்றார். 
பிறகு நாங்கள் வரிசையாக எங்களது கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.
  1. ஆதாம் செய்த தவறுக்கு ஆதாமை பலிகொடுத்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதை விடுத்து ஆண்டவரின் மகனை பலிகொடுக்க காரணம் என்ன?
  2. எந்தஒரு மனிதனும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டுமென்றால் பலிஆகத்தான் வேண்டுமா?
  3. ஆதாம் செய்த ஒரே தவறானது தடுக்கப்பட்ட ஒரு மரத்தின் பழத்தை புசித்ததுதான். கொலை, கொள்ளை, விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பாவங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தடுக்கப்பட்ட பழத்தை உண்ணுதல் என்பது ஒரு சிறு பாவம்தான். அந்த சிறு பாவத்திற்கே ஆண்டவரின் மகனை பலிகொடுத்தால்தான் விமோச்சனம் கிடைக்கும் என்றால், கொலை, கற்பழிப்பு போன்ற பெரும்பாவங்களுக்கு யாரை பலிகொடுப்பது?
  4. ஏசுவை பலிகொடுத்ததால் ஆதாமிலிருந்து ஏசுவரை உள்ள மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக வைத்துக்கொண்டாலும், அதற்குப்பிறகு 2010 ஆண்டுகளாக உலகில் நடந்துவரும் பாவங்களுக்கு விமோச்சனம் என்ன?
  5. ஒருவேலை, அனைத்து மக்களுக்காகவும், அனைத்து பாவங்களுக்காவும்தான் ஏசு பலிகொடுக்கப்பட்டார் என்று வைத்துக்கொண்டால், நாம் அனைவரும் நேரடியாக சுவர்க்கம் சென்றுவிடுவோமா?
  6. ஒருவேலை என்னுடைய அனைத்து பாவங்களுக்கும் முன்னதாகவே எனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், நான் எத்தனை கொலைகள் செய்தாலும் எவ்வளவு கொள்ளையடித்தாலும் அதற்காக ஆண்டவர் என்னை கேள்வி கேட்கமாட்டாரா?

என அடுக்கடுக்காக கேள்விகளை வைத்துக்கொண்டே இருந்தோம். அவர்களும் தங்களால் முடிந்தவரை பதில்களை கூறினார்கள். ஆனாலும் அந்த பதில்களில் அவர்களே திருப்தி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் நால்வருமே தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டு பதில்களை கூறினார்கள். ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் அவர்களால் பதில் கூற இயலவில்லை. 
பிறகு இந்த தலைப்பை ஓரமாக வைத்துவிட்டு ஏசு இறைவனின் மகனா என்ற தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ”பைபிளில் ஆதாம், மோசே, ஆபிரஹாம், இஸ்மவேல், நோவா, தாவீது, சாலமோன் போன்ற பலரை கர்த்தரின் மகன் என குறிப்பிட்டிருந்தும்கூட, ஏசுவை மட்டும் கர்த்தரின் மகன் என்று கூறக் காரணம் என்ன?” என்ற கேள்வியை முதலாவது கேள்வியாக முன்வைத்தோம்.  
அதற்கு அவர்கள்,“மற்றவர்கள் அனைவரும் தாம்பத்தியம் என்னும் பாவத்தின் மூலமாக பிறந்தார்கள். ஆனால் ஏசு ஒருவரே ஆண் பெண் உறவு என்ற பாவமில்லாமல் கன்னி மரியாளுக்குப் பிறந்தவர். அதனால்தான் அவரை கர்த்தரின் மகன் என்று கூறுகிறோம்” என்று கூறினார்கள். 
அப்போது நாங்கள் “ஆணும் பெண்ணும் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதை பாவம் என்று கர்த்தருக்கு பிடிக்காத காரியமாக கிறிஸ்தவர்களாகிய நீங்கள் கருதினால், பிறகு அந்த பாவமான காரியத்தை செய்வதற்கு உங்கள் ஆலயங்களிலேயே திருமணத்தை நடத்தி வைப்பது ஏன்? அதையும் மதகுருக்களான தங்களைப்போன்றவர்களே முன் நின்று செய்துவைப்பது ஏன்? அனைவரையுன் திருமணமே செய்யாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழவேண்டுன் என ஆணையிட்டுவிடலாமே?” என கேள்வி எழுப்பினோம். 
அதற்கு அவர் “திருமணம் முடிக்காமல் அனைவரும் பிரம்மாச்சாரிகளாகவே இருந்துவிட்டால் பிறகு மனித இனமே அழிந்துவிடுமே! நம் தலைமுறையோடு உலகத்தில் மனிதர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமே! பிறகு அதனை எவ்வாறு சட்டமாக்குவது? இது நடைமுறைக்கு பொருந்தாத ஒன்றல்லவா?” என்றார். 
அதற்கு நாங்கள் “மனித சமுதாயத்தை நிலைநிறுத்தக்கூடிய, சந்ததிகளை பெருகச்செய்யக்கூடிய ஒரு புனிதமான பந்தத்தையும் உறவையும் தாங்கள் பாவமென சித்தரிக்க காரணம் என்ன?” என வினவினோம். அதற்கு மௌனத்தை தவிர வேறு எதையும் அவர்களால் பதிலாக தர இயலவில்லை. 
பிறகு நாங்கள் “திருமணமும் தாம்பத்தியமும் ஒரு புறம் இருக்கட்டும். தகப்பன் இல்லாமல் பிறந்த ஒரே காரணத்தால் ஏசுவை கர்த்தரின் குமாரன் என குறிப்பிடும் நீங்கள், தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் பிறந்த ஆதாமை கர்த்தரின் குமாரன் என குறிப்பிடாதது ஏன்? அதைவிட, அனைத்து மக்களும் பெண்களில் இருந்து ஜனித்திருக்க, மிகவும் வித்தியாசமான முறையில் ஒரு ஆணின் விலா எலும்பில் இருந்து பிறந்த ஏவாளை கர்த்தரின் மகள் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?” 
“அல்லது தந்தையில்லாமல் தாய் மூலமாக பிறந்த காரணத்தால்தான் ஏசுவை கர்த்தரின் மகன் என கூறுகிறீர்கள் என்றால், தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் குளோனிங் முறைப்படி தந்தை இல்லாமல் தாய் மூலமாக பிறக்கும் குழந்தைகளை எல்லாம் கர்த்தரின் புதல்வர்கள் என ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாரா?” என வினவினோம். 

அதற்கு அவர்கள் “தந்தையில்லாமல் பிறந்த காரணத்தால் மட்டும் அவரை கர்த்தரின் புதல்வர் என நாங்கள் கூறவில்லை. மாறாக தந்தையின்றி அதிசயமாக பிறந்ததோடு மட்டும் அல்லாமல் ஏசு பிறவி குருடர்களை பார்க்கவைத்தார், பிறவி செவிடர்களை கேட்கவைத்தார், வெண்குஷ்ட நோய்களை குணப்படுத்தினார், மேலும் இறந்தவர்களையும் அவர் உயிர்ப்பித்தார். இப்பேர்ப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியதால்தான் அவரை கர்த்தரின் புதல்வர் என கூறுகிறோம்” என்றார்கள். 
அப்போது நாங்கள் “அவ்வாறெனில் பைபிளில் மோசே போன்றோர் எல்லாம் இவரைப்போலவே அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும்போது, ஏசு செய்த அற்புதத்தை மட்டும் பெரிதுபடுத்திப் பேசுவது ஏன்?” என வினவினோம். அதற்கு அவர்கள் “ஏனெனில் ஏசு பைபிளில் கர்த்தரை “பிதா” என அழைக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை கர்த்தரின் குமாரன் என அழைக்கிறோம்” என்றனர். 
அந்நிலையில் நாங்கள் ”ஏசு இறைமகனா?” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு பைபிள் ஆதாரங்களைக் கொண்டு ஏசு இறைவனின் மகன் இல்லை என நாங்கள் வாதித்தோம். குறிப்பாக மகதலேனா மரியாள் ஏசுவிடம் வந்து தனது புதல்வர்களை பரலோக இராஜியத்தில் ஏசுவினுடைய வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைக்க, அதற்கு ஏசுவோ “என் சித்தப்படி அல்ல, என் பிதாவின் சித்தப்படி எவன் நடக்கிறானோ அவனே பரலோக இராஜியத்தில் பிரவேசிப்பான்” எனக்கூறியதை அவர்களுக்கு எடுத்துக்காட்டி, ஏசு சாதாரண மனிதன் தான். அவருக்கு கடவுளின் ஆற்றலிலும் அதிகாரத்திலும் எந்த பங்கும் இல்லை என்பதனை நிருவினோம். 
பிறகு “பூமியில் உள்ள யாரையும் உங்கள் பிதா என அழைக்காதீர்கள். பரலோகத்தில் இருக்கிற கர்த்தரே உங்களுக்கு பிதாவாக இருக்கிறார்” என்ற வசனத்தை எடுத்துக்காட்டி, உலகில் உள்ள எந்த கிறிஸ்தவறும் ரேஷன் அட்டையிலோ அல்லது விண்ணப்பப் படிவங்களிலோ ”தகப்பன் பெயர்” கோரப்பட்டுள்ள இடத்தில் “கர்த்தர்” என எழுதுவது இல்லை. மாறாக தன்னை ஈன்றெடுத்த தந்தையின் பெயரையே எழுதுகின்றனர். இவ்வசனத்தில் ”பிதா” என குறிப்பிடப்பட்டுள்ளது “இறைவன்” என்ற அர்த்தத்தில்தான் வந்துள்ளது என்பதனை இதன் மூலம் எளிதாக அறியலாம் என்பதனை எடுத்துரைத்தோம். 
அதோடில்லாமல், நடைமுறையிலே உள்ள ஒரு எடுத்துக்காட்டையும் அவர்களுக்கு நாங்கள் முன்வைத்தோம். அதாவது இன்றும்கூட கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை செய்யும் மத போதகரை நாம் “Father” என்று தான் அழைக்கிறோம். இங்கே இந்த சொல், ஈன்றெடுத்த தந்தை என்ற பதத்தில் கூறப்படவில்லை. மாறாக, மரியாதையின் நிமித்தமாகவே பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்தே, பைபிளிலும் கிறிஸ்தவ மதத்திலும் “Father, தந்தை, பிதா” போன்ற சொற்கள் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை நாம் தெள்ளத்தெளிவாக அறியலாம். ஆகவே, ஏசுநாதர் அவர்கள் கர்த்தரை “பிதா” என்று அழைத்தது ஈன்றெடுத்த தந்தை என்ற அடிப்படையில் அல்ல. மாறாக “ஆண்டவர்” என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். என்று எங்கள் வாதத்தை நிறுவினோம்.  
மேலும் ”கர்த்தரின் குமாரர் என ஏசுவை குறிப்பிடும் நீங்கள், ஆலயங்களில் ஜெபம் செய்யும்போது “ஆண்டவராகிய ஏசுகிறிஸ்து” என்றுதான் பிரார்த்தனை செய்கிறீர்கள். எப்படி ஒரு ஆட்டின் வாரிசு ஆடாக இருப்பதைப்போல, ஒரு மனிதனின் வாரிசு மனிதனாக இருப்பதைப்போல, கடவுளின் வாரிசு நிச்சயம் கடவுளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் பைபிளை நாம் படித்துப்பார்த்தோமெனில், பல இடங்களில் அவர் சாதாரண மனிதன்தான் என்பதனை அவரின் நடவடிக்கைகள் மூலமாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  
உதாரணமாக, ஏசுவுக்கு பசி ஏற்பட்டு அவர் கனிகளை புசிப்பதற்காக ஒரு மரத்தை நோக்கி செல்கிறார். ஆனால் அந்த மரத்தில் பழங்கள் இல்லை என்பதை பார்த்தவுடன் அந்த மரத்தை சபிக்கிறார். ஏசு கடவுளாக இருப்பின் அவருக்கு மனிதனுக்கு ஏற்படுவதைப்போல் பசி எடுத்திருக்கக்கூடாது. அந்த மரத்தில் கனிகள் உள்ளதா இல்லையா என்பது கூட அவருக்கு தெரியவில்லை. மேலும், ஒரு சாதாரண மனிதனைப்போல் உணர்ச்சிவசப்பட்டு அந்த மரத்தை திட்டுகிறார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு சாதாரண மனிதன் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. 
மேலும் பைபிளில் வருகின்ற சம்பவங்களின்படி ஏசுவுக்கு பசி ஏற்பட்டிருக்கிறது, அவர் உணவு உட்கொண்டிருக்கிறார், அவர் அரசருக்கு பயந்து வரி செலுத்தியிருக்கிறார். அவரை கொல்ல வரும்போது அவர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்துள்ளார். தனது சீடர் ஒருவராலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார். தான் காட்டிக்கொடுக்கப்படுவோம் என்ற விஷயம்கூட கடவுள் என சொல்லப்படுகிற ஏசுவுக்கு தெரியவில்லை. மேற்கண்ட செயல்கள் மற்றும் பைபிளில் உள்ள இவற்றைப்போன்ற எண்ணற்ற செயல்களையும் சம்பவங்களையும் வைத்துப்பார்க்கும்போது மனிதர்களிடத்தே உள்ள அனைத்து பலவீனங்களையும் கொண்டவராகத்தான் ஏசு திகழ்ந்தார் என்பதனை தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. 
மேலும் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அவர் மரணிக்கும் தருவாயில்தான் அவரது சுயரூபம் நமக்கு தெரியவரும். அவர் என்னதான் மனிதசக்திக்கு அப்பார்ப்பட்டவர் என தம்மைக்காட்டிக்கொண்டாலும், அல்லது அவரைபற்றி உலகத்தினர் எவ்வளவுதான் கதைகளையும் கப்ஸாக்களையும் அவிழ்த்துவிட்டாலும் அவர் மரணிக்கும் வேளையில் அவரின் உண்மையான தன்மை என்ன என்பது உலகிற்கு தெரியவரும்.  
ஏசுவை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் என்னதான் மக்கள் கதை அளந்து விட்டாலும், அவர் மரணிக்கும் தருவாயில் தான் சாதாரண மனிதன்தான் என்பதனை இந்த உலகிற்கு காட்டிவிட்டுத்தான் சென்றார். தம்மை சிலுவையில் அறையக்கூடிய அந்த நேரத்தில், “ஏலி ஏலி லாமா சபக்தானி – என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” என கர்த்தரின் உதவியைத்தான் நாடினாரே தவிர தனக்கு கடவுள் சக்தி உள்ளதாக அவர் காட்டிக்கொள்ளவே இல்லை. அப்படி அவர் உண்மையிலேயே கடவுளாக இருந்திருந்தால், தான் காப்பாற்றப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடிய அந்த நேரத்திலாவது தன்னைத்தானே அவரால் காப்பாற்றி இருக்க முடியும். தான் மரணிக்கும் தறுவாயில்கூட, தன்னை சாதாரண மனிதன் என்றுதான் ஏசு இவ்வுலகிற்கு பிரகடனப்படுத்தினார். இந்த ஒரு சம்பவத்தின் மூலமாகவே, ஏசு இறைவனும் இல்லை, இறைவனின் மகனும் இல்லை என்பதனை தெள்ளத்தெளிவாக நாம் அறிந்துகொள்ளலாம்” என்று எங்களின் வாதத்தை முன்வைத்தோம். 
அல்லது, மனிதகுலத்திற்கு வழிகாட்டத்தான் கடவுள் தனது குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தார் என்று நீங்கள் கூறுவீர்களேயானால், அந்த வாதமும் ஏற்கமுடியாத ஒன்றாகும். ஏனெனில் மனிதனை நேர்வழிப்படுத்த கடவுளே இவ்வுலகிற்கு இறங்கிவர வேண்டிய அவசியம் இல்லை. தன்னைவிட எல்லாவிதத்திலும் பலமடங்கு கீழே இருக்கும் ஒரு படைப்பாக மாறுவதற்கு ஆண்டவர் நிச்சயம் ஆசைப்படமாட்டார். ஏனெனில் அது கடவுள் தன்மைக்கு மிகவும் இழுக்கான ஒரு செயலாகும். மேலும் கடவுள் நல்லவராக இவ்வுலகில் வாழ்ந்து, அவரை முன்னுதாரனமாகக்கொண்டு மனிதனை வாழச்சொல்லுதல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு செயலாகும். ஏனெனில், ”அவர் கடவுள் என்ற காரணத்தால் நல்லவராக வாழ்ந்தார். ஆனால் ஒரு மனிதனால் கடவுளைப்போல் எப்படி வாழமுடியும்?” எனக்கூறி மனிதர்கள் அந்தப்போதனையை நிராகரித்துவிடுவர். எனவே, கடவுள் மனித உருவம் கொண்டு இவ்வுலகிற்கு வருவதோ அல்லது கடவுளின் பண்புகளைக்கொண்ட அவரது புதல்வர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை இவ்வுலகிற்கு அனுப்பிவைப்பதோ மனிதகுலத்திற்கு ஒருபோதும் நன்மை பயக்கக்கூடிய ஒரு செயலாக இருக்கவே முடியாது என எங்களின் விளக்கங்களைக் கூறினோம். 
மேலும் வாரிசு என்பது மனிதர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்றுதான். ஏனெனில், மனிதன் முதுமை அடையும்போது அவனையும் அவனது சொத்துக்களையும் பாதுகாக்க, அவன் மரணித்துவிட்டபிறகு அவனது இறுதிச்சடங்குகளை செய்ய ஒரு வாரிசு அவனுக்கு இன்றிஅமையாத ஒன்றாகும். ஆனால் ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவருக்கு வாரிசுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எந்தஒரு நிர்பந்தமும் இல்லை. ஏனெனில் அவர் சகலத்தையும் நிர்வகிக்கக்கூடிய வல்லமை படைத்தவர். அவருக்கு முதுமை கிடையாது. அவர் பலவீனப்படப்போவதும் இல்லை. அப்படி இருக்கையில் எந்தத்தேவையும் இல்லாத ஆண்டவருக்கு புதல்வர் உள்ளதாக நாம் கூறினால் அது கடவுளின் தன்மைகளுக்கும் அவரது வல்லமைகளுக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய இழுக்காகும். அது ஆண்டவருக்கு ஒருகாலும் பெருமை சேர்க்கப்போவதில்லை. மாறாக அவரை இழிவுபடுத்தும் செயலாகவே அது அமையும் என்பதனையும் அவர்களுக்கு எடுத்துறைத்தோம்.

இறுதியாக, ”மேற்கண்ட பைபிள் வசனங்கள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஏசு என்பவர் கர்த்தரின் மகன் இல்லை. மாறாக, கர்த்தரின் தூய்மையான போதனைகளை இவ்வுலகிற்குச் சொல்லவந்த உண்மையான அடியாரும் கர்த்தரின் செய்திகளை மக்களுக்கு கொண்டுசெல்லும் தூதருமாகத்தான் உள்ளார்” என்று கூறி எங்கள் வாதத்தை நிறைவு செய்தோம். 
மிகவும் யோசித்தவராக சிறிதுநேரம் அமைதியாக இருந்த அந்த பேராயர் அவர்கள் பின் எங்களை நோக்கி, “ஆம், நீங்கள் சொல்வது சரிதான். தங்களின் வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஏசு கர்த்தரின் மகன் இல்லை என்ற முடிவுக்கே வரமுடிகிறது. மேலும் அவர் இறைவனின் தூதராகத்தான் இருக்கமுடியும் எனவும் புலப்படுகிறது” என்று கூறினார்.  
அல்ஹம்துலில்லாஹ்! 
சத்தியத்தை தூய்மையான வழியில் எடுத்துச்சொல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அந்த சத்தியத்தை அவர்கள் உள்ளம் வரை எட்டச்செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு மனதிற்குள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டோம். 
மதிய உணவிற்குப்பிறகு தொடங்கிய இந்த கலந்துரையாடலை நாங்கள் நிறைவு செய்தபோது நேரம் இரவு 8.00-ஐ கடந்திருந்தது. இரயில் வண்டியும் திண்டுக்கல் இரயில் நிலையத்தை தாண்டி மதுரையை நெருங்கிக்கொண்டிருந்தது.  
பிறகு நாங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் எங்களின் விலாசங்களை பகிர்ந்துகொண்டோம். தங்களது தொலைபேசி எண்களையும் மின் அஞ்சல் முகவரிகளையும் கொடுத்து, மார்க்கம் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு எங்களை கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் எங்களில் தொலைபேசிஎண்களை அவர்களுக்கு கொடுத்து, இஸ்லாம் சம்பந்தமான எந்த சந்தேகங்களாக இருந்தாலும் எங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொண்டோம். இருவரும் சார்ந்துள்ள கொள்கைகள் சம்பந்தமாக ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு நாங்கள் எப்போதும் தாயாராக உள்ளோம் எனவும் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். 
அதன்பின், மதுரையில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். அவர்களும் மும்பை வந்தால் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு வருமாறு எங்களை அழைத்தனர். பிறகு மதுரை நிலையம் வந்ததும் எங்களை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.  
சிறிது நாட்கள் களித்து, சகோதரர் பி.ஜே. அவர்கள் எழுதிய “ஏசு இறைமகனா?” ”இதுதான் பைபிள்” மற்றும் “பைபிளில் நபிகள் நாயகம்” ஆகிய நூல்களை மும்பையில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்பிவைத்தோம். அதோடில்லாமல், ”ஏகத்துவம்” பத்திரிக்கையில் வெளிவந்த சகோதரர் அஹமத் தீதாத் அவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் நடத்திய விவாதத்தின் தொடரை தொகுத்து அவரது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தோம்.  
பிறகு சிலமாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம் பெருநாள் விடுமுறைக்காக நானும் எனது மனைவியும் புனேவில் இருந்து இரவு இரயில் மூலம் மதுரை வர ஆயத்தமானோம். புனே இரயில் நிலையத்தில் நாங்கள் இரயிலுக்காக காத்திருந்தோம். இரவு 12 மணிக்கு எங்கள் இரயில் வந்தது. நாங்கள் இருவரும் எங்களுக்காக பெட்டியில் ஏறி எங்கள் இருக்கையை நோக்கி சென்றபோது அங்கே பெரும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது. 
கடந்தமுறை நாங்கள் சந்தித்த அதே பாதிரியார் திரு. மாணிக்கம் அவர்களும் அவரது மனைவியும் எங்களின் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களை கண்டபோது எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. அவர்களும் எங்களைக்கண்டு ஒருகணம் திகைத்துவிட்டனர். நாங்கள் செல்லும் அதே வண்டியில், அதே பெட்டியில் அடுத்த இருக்கையில் அவர்களை சந்திக்க வைத்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்! மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு தாவா செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் சொல்லி, பொழுது விடியலுக்காக காத்திருந்தோம். 
மறுநாள் காலை, நாங்கள் எழுந்து காலை உணவுகள் உட்கொண்ட உடனேயே அந்த பாதிரியார் எங்கள் அருகே வந்து அமர்ந்தார். நாம் அனுப்பிய புத்தகங்களும் மின் அஞ்சல்களும் அவருக்கு கிடைத்ததாகவும், அதில் அவருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை இப்போது பேசலாமா? என கூறியவராக அவராகவே நம்மைத்தேடிவந்தார்.  
நாம் அனுப்பிய ”ஏசு இறைமகனா” என்ற புத்தகத்தைத்தான் அவர் முதலில் படித்ததாகவும், அந்த புத்தகத்தில் சில விசயங்கள் தவறாக இருப்பதாகவும், அப்புத்தகம் இருந்தால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். 
வழக்கமாக, பயணத்தின்போது படிப்பதற்காக சில புத்தகங்களை நாங்கள் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். குறிப்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு பயன்படக்கூடிய “மனிதனுக்கேற்ற மார்க்கம்”, “இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?”, “குற்றச்சாட்டுகளும் பதில்களும்”, “திருக்குர்ஆன் அறிவியல் சான்றுகள்” போன்ற புத்தகங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கும். ஆனால் அன்று ஆச்சர்யமாக, அவர்கள் கேட்ட “ஏசு இறைமகனா” என்ற புத்தகமும் எங்களிடத்தே இருந்தது. அதனை எடுத்து நாங்கள் அவருக்கு கொடுத்தோம்.  
அந்த புத்தகத்தில் – அவர், தலைப்புகளை மட்டும் வாசித்துக்காட்டி, இந்த தலைப்புகள் தவறு என்பதாக கூறிக்கொண்டிருந்தார். உதாரணமாக, ”தாவீது இறைமகன்” “சாலமோன் இறைமகன்” என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ நம்பிக்கையின்படி தவறு என்பதாக அவர் கூறினார். அப்போது நாங்கள், அவர் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி, அந்த தலைப்புகளுக்குக்கீழே கொடுக்கப்பட்டிருந்த பைபிள் வசனங்களை வாசித்துக்காட்டி, பைபிளில் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது என்பதனை நாங்கள் அவருக்கு உணர்த்தினோம். 
சிறிது நேரம் அதனையே கூர்ந்து படித்த அவர், சற்று தயங்கியவராக “ஆம். பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டியுள்ளனர். நான் தலைப்புகளை மட்டுமே படித்தேனே தவிர, உள்ளே உள்ளவற்றை படிக்கவில்லை. எனக்கு சிறிது அவகாசம் தாருங்கள். நான் இவற்றை முழுதாக படித்துவிட்டு பிறகு தங்களுடன் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறி “ஏசு இறைமகனா?” என்ற அந்த புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டார். 
கடவுள், ஏசு, பைபிள் போன்ற சொற்களை கேட்டதும், எங்களின் அருகே இருந்தவர்கள் கவனம் எங்களின் பக்கம் திரும்பியது. இத்தனை நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அவர்கள், தங்களது மற்ற பேச்சுக்களை நிறுத்திவிட்டு எங்களின் உரையாடலை கவனிக்கத்தொடங்கினர். 
மக்களின் கவனம் தம் பக்கம் திரும்புவதை உணர்ந்த அந்த பாதிரியார், உடனடியாக அவர்களுக்கு தனது கிறிஸ்தவ கொள்கையை போதிக்கலானார். ”ஏசு நமது பாவங்களுக்கு பிராயச்சித்தமாக சிலுவையில் மரித்தார்” என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், நாளை பரலோக இராஜியத்தில் தோல்வியுறுவீர்கள்” என்று அம்மக்களுக்கு போதிக்கலானார். சற்று நேரம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நாங்கள், பின்பு அவரிடம்,இந்த போதனைக்கு என்ன அடிப்படை என வினவினோம். அதற்கு அவர், பைபிளில் இப்படித்தான் உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் இவ்வாறு போதிப்பதாகவும் கூறினார். 
அப்படியெனில், பைபிளில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதனை முதலில் தீர்த்துக்கொள்ளலாமா என வினவினோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அப்போது அவரிடம் நாங்கள் “இஸ்லாமிய நம்பிக்கையின்படி குர்ஆன் எனப்படுவது இறைவனிடத்தில் இருந்து முஹம்மது என்னும் தூதருக்கு அருளப்பட்ட வேதம். அதனை இறைவனே அருளினார், முஹம்மது நபி அவர்கள் அதனை மக்களுக்கு போதித்தார்கள் என நம்புகிறோம். அதேபோல், பைபிள் என்பது என்ன? அது யாருக்கு யாரால் அருளப்பட்டது? அதனை எழுதியது யார்?” என வினவினோம். 
அதற்கு அவர் “பைபிள் என்பது ஏசு தன் வாழ்நாளில் போதித்த வேதமாகும். ஏசுவின் வாழ்நாளில் அவர் போதித்தவைகளை அவரது சீடர்கள் தொகுத்து எழுதினார்கள். அதுவே இறைவேதம்” என்பதாக தெரிவித்தார். அப்போது நாங்கள் “பைபிள் என்பது ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டதாக தெரிவித்தீர்களே. ஆனால், மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா ஆகியோர் ஏசுவிடம் பாடம் கற்ற 12 சீடர்கள் அல்லவே. பிறகு இதனை எப்படி ஏசுவின் வார்த்தைகளாக நம்புகிறீர்கள்?” என வினவினோம். 
ஆனால் அவரோ “மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா ஆகிய நால்வருமே ஏசுவின் நேரடி சீடர்கள்தான் என கூறினார். நாங்கள் அவரிடம் ஏசுவின் 12 சீடர்களின் பெயர்களைக்கூறுங்கள் என வினவினோம். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில், ஏசுவின் 12 சீடர்களின் பெயர்கள் அவருக்கு தெரியவில்லை. ஒரு கிறிஸ்தவ மத போதகருக்கு ஏசுவின் சீடர்களின் பெயர்கள் தெரியாதது சற்று விந்தையாகவே இருந்தது.  
நான் என்னுடன் வைத்திருந்த எனது கைக்கணினியை (Laptop) எடுத்து அதில் ஏசுவின் 12 சீடர்களில் பெயர்களை அவருக்கு வாசித்துக்காட்டினோம். அதில் மத்தேயுவைத்தவிர மற்ற மூவரின் பெயர்கள் இருக்கவில்லை.  
நாங்கள் அவரிடம் - மார்க்கு, யோவான், லூக்கா ஆகியோர் ஏசுவின் நேரடி சீடர்கள் இல்லை. 12 சீடர்களில் ஒருவராக உள்ள மத்தேயுவும், நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை எழுதிய மத்தேயுவும் வெவ்வேறு நபர்கள். ஏனெனில் லூக்காவின் சுவிசேஷமே முதலில் எழுதப்பட்ட சுவிசேஷமென கிறிஸ்தவர்களே ஒத்துக்கொள்வதால், இந்த மத்தேயு என்பவர் நிச்சயமாக லூக்காவிற்கு பின்னர் வந்தவராகத்தான் இருக்க முடியும் என்பதனையும் அவருக்கு எடுத்துக்கூறினோம்.  
பிறகு நாங்கள் பைபிளில் மொழியைப்பற்றி பேச ஆரம்பித்தோம். ”ஏசுவும் அவரது சீடர்களும் எபிரேயு மொழி பேசியவர்கள். அப்படி இருக்கையில், திண்டுக்கல் திருச்சபை வெளியிட்ட பைபிளின் முன்னுரையில் “இது லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: என எழுதியுள்ளார்களே. மூல மொழி என ஒன்று இருக்கையில் ஏன் மற்ற மொழிபெயர்ப்புகளில் இருந்து மொழிபெயர்க்கவேண்டும்?” என கேள்வி வைத்தோம். ஆனால் அதற்கு மௌனத்தை தவிர வேறு பதில் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 
பிறகு,
  1. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் மூலப்பிரதி ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் மற்றும் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் மியூசியத்தில் பாதுகாத்து வைத்திருப்பதைப்போல் பைபிளின் மூலப்பிரதி இவ்வுலகத்தில் உள்ளதா?”
  2. திருக்குர்ஆனில் ஒரு பக்கம் அரபி மறுபக்கம் தமிழ், ஆங்கிலம் போன்று மொழிபெயர்ப்புகள் உள்ளதைப்போல் பைபிளில் ஒரு பிரதியாவது உள்ளதா?
  3. King James Version பைபிளுக்கும் International Standard Version பைபிளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளது ஏன்? பல வரிகளே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது ஏன்?
  4. தற்போது புழக்கத்தில் இருக்கும் International Standard Version பைபிளில் “6th Revised Edition” என எழுதியுள்ளார்களே! இறைவனின் வார்த்தை என நீங்கள் நம்பக்கூடிய ஒரு வேதத்தை எப்படி மனிதர்கள் Revise செய்ய அனுமதித்தீர்கள்?
  5. ஆண்டவரின் வார்த்தைகளை மாற்றக்கூடிய அதிகாரத்தை அவர்களுக்கு யார் வழங்கியது?
  6. இவ்வாறு வேதத்தில் மாற்றம் செய்யக்கூடிய அந்தக்குழுவை தேர்ந்தெடுப்பது யார்? எதன் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தடுக்கப்படுகிறார்கள்?
  7. வேதத்தில் மாற்றம் செய்யக்கூடிய அவர்கள் எதன் அடிப்படையில் அந்த மாற்றங்களை செய்கிறார்கள்?
என அடுக்கடுக்காக எங்களது கேள்விகளை தொடுத்தோம். அனைத்து கேள்விகளையும் கேட்டுமுடித்த அவர் கூறிய ஒரே பதில் “நான் இவற்றைப்பற்றி எங்கள் சக பேராயர்களை கலந்து ஆய்வுசெய்யவேண்டும். ஏனெனில் இவைகளுக்கு என்னிடத்தில் பதில் இல்லை. எனவே, நான் எங்கள் மிஷினரிகளை தொடர்புகொண்டு இந்த கேள்விகளை தங்களுக்கு தெளிவிபடுத்துகிறேன்” என்றார். 

அதன்பிறகு, பைபிளை எழுதிய நான்கு சுவிசேஷக்காரர்களைப்பற்றி பேச ஆரம்பித்தோம். மத்தேயு, மார்க்கு, யோவான் மற்றும் லூக்கா அகிய நால்வரும் பரிசுத்த ஆவியில் தூண்டுதலினால்தால் பைபிளை எழுதினார்கள் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி என்பதை தாங்கள் தெய்வீக சக்தி என நம்புவது உண்மையானால், அப்பேர்ப்பட்ட பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவர்களின் செய்தியும் ஒரே தரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் பைபிளை நாம் புரட்டிப்பார்க்கும்போது, இந்த நாங்கு சுவிசேஷங்களை எழுதியவர்களும் பல விசயங்களில் கருத்துவேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதனை பல சந்தர்ப்பத்தில் அவர்களே நிரூபித்துள்ளார்கள். 
உதாரணத்திற்காக, நாம் சாதாரண விசயங்களுக்குள் நுழையாமல், கிறிஸ்தவ மதக்கொள்கையின் உயிர்நாடியான ஏசுவின் சிலுவை மரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஏசுவின் சிலுவை மரணம் என்னும் சம்பவத்தின் அடிப்படையில்தான் கிறிஸ்தவம் என்னும் தத்துவமே அடங்கியுள்ளது. அப்பேர்ப்பட்ட வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிடும்போது கூட, இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் தங்களுக்குள் முறன்பட்டே எழுதியுள்ளனர்.  
மார்க்கு, யோவான் மற்றும் லூக்கா ஆகியோர் ஆறாம் மணி நேரத்தில்தான் ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டார் என்பதாக கூறுகின்றனர். ஆனால் மத்தேயுவோ, தமது சுவிசேஷத்தில் ஏசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிடும்போது ஆறாம் மணி நேரத்தில் பிலாத்து மன்னரால் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தார் எனக்குறிப்பிடுகிறார். வரலாற்றில் முக்கியமான சம்பவத்தை குறிப்பிடும்போது நான்கு சுவிசேஷக்காரர்களும் இவ்வளவு முறன்பட்டு பேசுவது ஏன்? 
விசாரணை நடைபெற்ற இடத்தில் இருந்து ஏசுவே தனது தோல்மீது சிலுவையை சுமந்துகொண்டு வந்தார் என சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒரு வழிப்போக்கரின் மேல் அந்த சிலுவையை வைத்து அந்த வழிப்போக்கர்தான் அந்த சிலுவையை சுமந்துகொண்டுவந்தார் எனவும் அப்போது ஏசு, தம்முடன் வந்த மக்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் எனவும் வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள். 
ஏசு உயிர்த்தெழுந்தந்ததாக சொல்லப்படுகிற அந்த சம்பவத்தை முதன் முதலில் பார்த்தவர் யார் என்பதில்கூட இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் ஒருவருக்கு ஒருவர் முறன்பாடான தகவல்களைத்தான் தெரிவித்துள்ளனர். ஞாயிறு அன்று காலையில் மகதலேனா மரியாள் தனியாக சென்று பார்த்தார். அப்போது அவரது சமாதியின் மேல் இருந்த கல் அகற்றப்பட்டு இருந்ததாக ஒரு சுவிசேஷக்காரர் கூறுகிறார். மகதளேனா மரியாளும், மற்றொரு மரியாளும் இன்னும் ஒரு பெண்ணுமாக மூன்றுபேர் சென்று பார்த்தார்கள் என வேறு ஒருவர் குறிப்பிடுகிறார். மற்றொருவரோ, மூன்று மரியாள்கள் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் என நிறைய மக்கள் சேர்ந்து சென்று பார்த்தார்கள் எனவும் அவர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது வானத்தில் இருந்து ஒரு வானவர் இறங்கிவந்து சமாதியின்மேல் இருந்த கல்லை அகற்றினார் என குறிப்பிடுகிறார். ஏசு உயிர்த்தெழுந்த வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த சம்பவத்தைக் குறிப்பிடும்போதுகூட நான்கு சுவிசேஷக்காரர்களும் தங்களுக்குள்ளே எவ்வளவு முரண்பட்ட தகவல்களை குறிப்பிடுவது ஆச்சர்யமாகவே இருக்கிறது. என அவருக்கு எடுத்துரைத்தோம். 
மேலும், இறைவனின் வார்த்தைகள் என்றால் அதில் முரண்பாடு இருக்கக்கூடாது. மனிதனிடத்தில் முரண்பாடுகள் வரலாம், அது இயற்கை. ஏனெனில் மனிதன் பலகீனமானவன். ஆனால் எல்லாவித பலகீனங்களுக்கும் அப்பார்ப்பட்டவர்தான் ஆண்டவர். அவரது வார்த்தைகளில் நிச்சயமாக முரண்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் பைபிளில் உள்ள முரண்பாடுகளை பார்க்கும்போது நிச்சயமாக பைபிள் இறைவேதம் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. 
ஏசு கல்லரையிலிருந்து எழுந்துவந்ததும் தமது அடியார்கள் முன்னிலையில் தோன்றுகிறார். தனக்கு பசிப்பதாகக்கூறி அவர்களிடம் இருந்து தேண்கூட்டு துணிக்கையையும், பொரித்த மீன் துண்டுகளையும் வாங்கி புசிக்கிறார். ஆனாலும் அவரை ”ஏசு” என ஏற்றுக்கொள்ள அவரது சீடர்கள் மறுத்துவிடுகிறார்கள். 
பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி ஏசுவை வெள்ளிக்கிழமை மாலையில்தான் சிலுவையில் ஏற்றினார்கள். ஞாயிற்றுக்கிழமை காலைதான் அவர் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. தற்போதும்கூட Good Friday மற்றும் Easter Sunday என இந்த நாட்களைத்தான் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு ஆக மொத்தத்தில் இரண்டு இரவுகள் மற்றும் ஒரு பகல்தான் அவர் கல்லரையில் இருந்துள்ளார். ஆனால் அவர் ஆதாரமாக காட்டும் ஜோனாவின் சம்பவத்தில் வருவதுபோல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் கல்லரைக்குக்ள் இருக்கவில்லை.  
சில கிறிஸ்தவர்கள் “ஏசு வெள்ளிக்கிழமை மாலை கல்லரைக்குள் வைக்கப்பட்டு ஞாயிறு காலையில்தான் உயிர்த்தெழுந்தார். எனவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அவர் கல்லரைக்குள் இருந்துவிட்டார். ஆதலால் ஜோனாவைப்போல் அவரும் மூன்றுநாட்கள் கல்லரைக்குள் இருந்துவிட்டார் என்பதாக கூறி இந்த வசனத்திற்கு பொருள் கொடுக்கின்றனர். ஆனால் அந்த பைபிள் வசனத்தில் மூன்று நாட்கள் என குறிப்பிடப்படவில்லை. மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் என்று மட்டும் கூறப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக் வெள்ளி மாலையிலிருந்து ஞாயிறு காலை வரை மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்ற கணக்கு தவறுதான். இதனைவைத்து பார்க்கும்போதும் பைபிளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகவே உள்ளது. 
மேலும் பைபிள் என்பது இறைவனின் வேதமாக இருக்குமேயானால், இறைச்செய்திகளை பெற்று மக்களுக்கு எடுத்துச்சொன்ன ஏசுவே தன் கைப்பட பைபிளை எழுதியிருக்க வேண்டும். அல்லது ஏசு கூறியதைக்கேட்ட அவர்களது நேரடிச்சீடர்கள் அதனை எழுதிவைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பிறகு வாழ்ந்த சிலர் எழுதியதை ஏசுவிற்கு இறக்கப்பட்ட வேதம் என எப்படி நம்புவது? பைபிள் சம்பவங்களையும், அதனை எழுதியவர்களின் காலங்களையும் வைத்துப்பார்க்கும்போது பைபிள் என்பதை ஏசுவின் வாழ்க்கையில் நடந்தவற்றை எடுத்துக்கூறும் ஒரு வரலாற்று நூலாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாமே ஒழிய அதனை இறைவனின் வேதம் என எப்படி நம்ப முடியும்? எனக்கேட்டோம். 
மேலும் “இந்த நான்கு சுவிசேஷக்காரர்களைப்போலவே, பவுல் என்றவர் எழுதியவையும் பைபிளில் இடம்பெற்றுள்ளன. அதில் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் இட்ட பல கட்டளைகளை தனது மனோஇச்சையின்படி பவுல் அவர்கள் மாற்றியமைக்கிறார். குறிப்பாக, ஆண்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யவேண்டும் என பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கட்டளை இடுகிறார். ஆனால் பவுலோ அதனை தேவையில்லை எனக்கூறுகிறார். அதேபோல் மது அருந்தக்கூடாதெனவும், பன்றியின் மாமிசத்தை உண்ணக்கூடாதெனவும் பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் கட்டளையிட்டிருக்கும்போது, பவுல் என்ற ஒரு தனிமனிதர் தன் இஷ்டத்திற்கு வேதத்தில் மாற்றம் செய்தது எப்படி? கடவுளின் வார்த்தையைவிட ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைக்கு கிறிஸ்தவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதனை கடைபிடிப்பது ஏன்?” என வினவினோம். 
இவ்வாறாக பைபிளின் நம்பகத்தன்மையையும் அதனை இயற்றிய நான்கு சுவிசேஷக்காரர்களின் முரண்பாடுகளையும், வேதத்தில் பவுல் செய்துள்ள மாற்றங்களையும் அவர்களிடத்தில் எடுத்துவைத்து பைபிள் ஒரு இறை வேதமா என நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கும், மௌனத்தை தவிர வேறு எதனையும் அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. 

பிறகு, கத்தோலிக்க மற்றும் புரொடஸ்டண்ட் பிரிவுகளை பற்றி பேச ஆரம்பித்தோம்.
  1. “ஒரு முஸ்லிம் ஆகிய நான் தங்களின் கொள்கைகளை அறிந்துகொள்ள வேண்டுமானால், தாங்கள் எதனை புனிதவேதமாக கருதுகிறீர்களோ அதனை படித்துத்தான் தெரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் மனிதர்களின் வார்த்தைகளை நாம் அப்படியே நம்பிவிட முடியாது. அவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவ மத கொள்கைகளை நான் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கத்தோலிக்க பைபிளை எடுத்துப்படிப்பதா? அல்லது புரொடஸ்டண்ட் பைபிளை எடுத்துப்படிப்பதா?”
  2. கத்தோலிக்க பைபிளில் 72 ஆகமங்களும், புரொஸ்டண்ட் பைபிளில் 66 ஆகமங்களுமாக வேறுபாடுகள் இருப்பது ஏன்?
  3. கத்தோலிக்க பைபிளோடு ஒப்பிடுகையில் புரொஸ்டண்ட் பைபிளில் 4800 வசனங்களுக்கு மேல் குறைவாக உள்ளதே. அது ஏன்?
  4. கத்தோலிக்க பைபிள் உண்மையாதெனில், புரொஸ்டண்ட் பைபிளில் இத்தனை வசனங்களை நீக்கியது யார்? எதன் அடிப்படையில் அந்த வசனங்கள் நீக்கப்பட்டன?
  5. அல்லது, புரொடஸ்டண்ட் பைபிள்தான் உண்மையாதெனில், கத்தோலிக்க பைபிளில் சுமார் 4800 வசங்களை சேர்த்தது யார்?

போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தோம். பிறகு அனைத்தையும் தொகுத்து, ”இந்த இரண்டு பைபிள்களையும் ஒப்பிட்டுப்பார்க்கையில், வரலாற்றில் பைபிளில் கூட்டல் குறைத்தல் நடந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மனித வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளோடு விளையாடியுள்ளதை மறுக்கமுடியாது. அவ்வாறு இருக்கையில், பைபிளை கடவுளின் வார்த்தை என எப்படி நாங்கள் நம்புவது” என கேள்வி எழுப்பினோம். 
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அவர், “எந்த பைபிள் உண்மையானது என்ற வாதம் ஒருபக்கம் இருக்கட்டும். எந்த பைபிளாக இருந்தாலும், அதனை தாங்கள் வாசித்துப்பார்த்தால், மனிதர்களின் பாவத்தை இரட்சிக்கத்தான் ஏசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் கர்த்தரின் குமாரராக இருக்கிறார். மேலும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்னும் முக்கடவுள் (Trinity) கொள்கையைத்தான் அனைத்து பைபிள்களும் கூறுகின்றன” என்றார். 
அப்போது நாங்கள் “சரி ஃபாதர். மற்றவை அனைத்தும் ஒருபுறம் இருக்கட்டும். தாங்கள் தற்போது கூறிய முக்கடவுள் கொள்கை, அதாவது Trinity கொள்கையை எங்களுக்கு முதலில் விளக்குங்கள்” என கூறினோம்.  
சிறிது தயங்கிய அவர் “கிறிஸ்தவ மதத்திலேயே புரிந்துகொள்வதற்கு அதிகம் சிரமமானதும் குழப்பமானதும் இந்த திரித்துவக்கொள்கைதான். அதனால் அதனை விளக்குவது கடினம். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் மனத்திலும் ஆழமான நம்பிக்கையாக உள்ளது இந்த கொள்கையே!” என்றார். 
அப்போது நாங்கள், “ஃபாதர்! நம்பிக்கையில் இரு வகையான நம்பிக்கை உள்ளது. ஒன்று மூடநம்பிக்கை, மற்றொன்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து நம்புவது. உதாரணமாக, பூனை குறுக்கே சென்றால் செய்யக்கூடிய காரியம் தடங்கலாகிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. ஏனெனில், என்னதான் நம் முன்னோர்கள் இதனை காலம் காலமாக கூறி வந்தாலும், இந்த நம்பிக்கை தவறு என்பதனை நாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிடலாம்.  
ஆனால், ஒரு இரயில் செல்லும்போது அதன் பாதையின் குறுக்கே நாம் நின்றால் அடிபட்டு இறந்துவிடுவோம் என்று சொல்வதும் நம்பிக்கைதான். ஆனால் இதனை யாரும் மூட நம்பிக்கை என்று சொல்வதில்லை. ஏனெனில் இதனை நாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிடமுடியும்.  
இப்போது திரித்துவ கொள்கையை நம்பக்கூடிய தாங்கள், இந்தக் கொள்கையை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? முன்னோர்கள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா அல்லது அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் முடிவில் நம்புகிறீர்களா?” என கேள்வி கேட்டோம்.  
அதற்கு அவர், “நான் கிறிஸ்தவ கொள்கையை நம்புவது தாங்கள் கூறிய முதலாம் அடிப்படையில்தான். என் முன்னோர்கள் கூறிய காரணத்தால்தான் நான் நம்புகிறேன். கடவுள், மதம் போன்றவற்றை ஒரு மனிதன் எவ்வாறு ஆராய்ச்சி செய்யமுடியும்? அதனால், இதுவரை அதனை நான் ஆய்வு செய்து பார்த்ததில்லை” என்று கூறினார். 
அப்போது நாங்கள் அவரிடம் “இஸ்லாத்தை முஸ்லிம்கள் நம்புவது தாங்கள் நம்புவதைப்போல் முன்னோர்கள் சொன்னார்கள் என்ற அடிப்படையில் இல்லை. இஸ்லாத்தில் இறைவனை அறிவியல் பூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் நம்புகிறோம். முஹம்மது நபி அவர்களை இறைவனின் தூதர் என நம்புவதும் அறிவியல் மற்றும் வரலாற்றுப்பூர்வமாகத்தான். மேலும், திருக்குர்ஆனை இறைவேதம் என நம்புவதும் அறிவியல் ஆராய்ச்சிக்குட்பட்டுத்தான். இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம். இங்கே மூட நம்பிக்கைக்கு இடமே இல்லை. மனிதனின் பகுத்தறிவை மேலோங்கச்செய்யும் விதமாகவே இஸ்லாத்தின் நம்பிக்கைகளும் வணக்க வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன” 
“எனவே, தாங்கள் ஒருமுறை திருக்குர்ஆனை படித்துப்பாருங்கள். பைபிளையும் பொருள் உணர்ந்து ஆய்வு கண்ணோட்டத்தோடு படியுங்கள். நிச்சயமாக சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஆண்டவர் கண்டிப்பாக நேர்வழியை வழங்குவார். பரலோக இராஜியத்தில் நீங்களும் நாங்களும் வெற்றிபெற ஆண்டவர் நமக்கு துனை செய்ய வேண்டிக்கொள்கிறோம்” எனக்கூறி எங்களின் உரையாடலை முடித்துக்கொண்டோம். அதோடு எங்களிடம் இருந்த இஸ்லாமிய புத்தகங்களையும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பினோம்
முடிவுரை: 
அன்புள்ள சகோதரர்களே! இஸ்லாத்தை எத்திவைப்பதற்கான சந்தர்ப்பங்கள் நம்மை சுற்றிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நாம் தான் சரியாக பயன்படுத்த தவறி விடுகிறோம். மாற்றுமத சகோதரர்களின் மனதில், குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினர் மனதில் இஸ்லாத்தை பற்றி சில விமர்சனங்களும் சந்தேகங்களும் சிலரின் தவறான போதனைகளினாலும், ஊடகத்துறையின் வஞ்சகத்தினாலும் நிறைந்துள்ளன. அவைதான் இஸ்லாத்தை அவர்கள் வெறுப்பதற்கான காரணமாகும். அவற்றை நாம் அவர்களது உள்ளங்களில் இருந்து நீக்கிவிட்டால் பின் அவர்களின் நாட்டம் தாமாகவே இஸ்லாத்தின்பால் வந்துவிடும். இதற்கு அடிப்படையாக, முஸ்லிம்களாகிய நாம் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்வது அவசியம். 
அவர்கள் கொண்டுள்ள கொள்கை எந்த அளவிற்கு தவறானது என்பதற்கான ஆதாரங்கள், அவர்கள் வேதமாக நினைக்கும் புத்தகங்களிலேயே இருக்கின்றன. அவற்றின் அடிப்படைகளை நாம் சற்று அறிந்திருந்தாலே போதும். அவர்களது வேதங்களின் எதார்த்த நிலையையும் அதில் உள்ள வசனங்களையும் வைத்தே அவர்கள் கொள்கையை நாம் தூள் தூள் ஆக்கிவிட முடியும்.  
எல்லாம் வல்ல ஏக இறைவன், தூய்மையான இஸ்லாத்தை புரிந்து பின்பற்றக்கூடிய நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக. இந்த தூய மார்க்கத்தை உலக மக்கள் அனைவருக்கும் அழகான முறையில் எத்திவைக்கக்கூடிய அறிவையும் பொறுமையையும் தந்தருள்வானாக. மேலும் இந்த தூய மார்க்கத்தை உணர்ந்து உலகமக்கள் அனைவரும் இக்கொள்கையை ஏற்று இவ்வுலக நலன்களையும் மறுவுலக வெற்றிகளையும் பெற்று வாழவேண்டும் என எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்தித்தவனாக எனது இந்த பதிவை நிறைவு செய்கிறேன். 
எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்!.
ஏசு அழைக்க்இறார்

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!